கடந்த மார்ச் 23ஆம் தேதி ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகே உள்ள மூக்கையூர் கடற்கரைக்கு விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த காதல் ஜோடிகள் வந்திருந்த  நிலையில், மாணவி அணிந்திருந்த துப்பட்டாவை வைத்து காதலனின் கையை கட்டிப் போட்டுவிட்டு அவர் கண்முன்னேயே இளம்பெண் ஒருவர்  மூன்று பேர் சேர்ந்த ரவுடி கும்பலால் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் சினிமா பாணியில் அரங்கேறி தமிழகத்தையே அதிர வைத்தது. இந்த சம்பவத்தில் மூன்று குற்றவாளிகளும் வெவ்வேறு இடங்களில்  கைது செய்யப்பட்ட நிலையில், நேற்று தான் அவர்கள் மீது  தாமதமாக வன்கொடுமை வழக்கு பதிவு செய்து சாயல்குடி போலீசார் விசாரித்து வருவதாக புகார் எழுந்துள்ளது. ஆட்சியாளர்கள்  மீதும் ஆட்சியின் மீதும்,  அவப்பெயர் ஏற்படாமல் இருக்க காவல்துறை மூடி மறைப்பதாகவும், இந்த வழக்கில் நேர்மையான வெளிப்படையான விசாரணை வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.


'பெண்களுக்கு பாதுகாப்பற்ற கடற்கரை'


சாயல்குடி அருகே மூக்கையூர் கடற்கரையில்,  ஆண் நண்பருடன் பேசுவதற்காக வந்த விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த   கல்லூரி மாணவி காதலன் கண்முன்னே கூட்டு பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து இந்த  வழக்கினை  வன்கொடுமை வழக்காக மாற்றி போலீசார் விசாரணையை தாமதமாக தொடங்கி உள்ளதாக புகார் எழுந்துள்ளது. தமிழகமே அதிர்ந்துபோகும் வகையில் நடந்த இந்த சம்பவத்தில் இன்னும் சாயல்குடி  காவல்துறையினர் துரிதமான விசாரணை மேற்கொள்ளவில்லை என்ற குற்றச்சாட்டும் முன் வைக்கப்படுகிறது.


சாயல்குடியை  சுற்றியுள்ள மூக்கையூர்,  மாரியூர் மற்றும் நரிப்பையூர்  உள்ளிட்ட கடற்கரைகள் பெண்களுக்கு பாதுகாப்பற்றதாகிவிட்டதாகவும் கூறப்படுகிறது. எனவே சாயல்குடி போலீசார் மற்ற விஷயங்களில் காட்டும் அக்கறையை போன்று பொதுமக்களின் பாதுகாப்பு விஷயங்களிலும் கவனம் எடுத்துக்கொள்ள வேண்டும் என சமூக ஆர்வலர்களும் இப்பகுதி பொதுமக்களும்  வலியுறுத்துகின்றனர்.



'மூக்கையூரின் புனிதத்தை கெடுத்த கற்பழிப்பு வழக்கு'


ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகே உள்ள மூக்கையூர் கடற்கரை  தை, ஆடி உள்ளிட்ட அமாவாசை காலங்களில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து திதி கொடுக்கும் புனித தலமாக இருந்து வருகிறது. இந்த மூக்கையூரில் கடந்த 2019 ஆம் ஆண்டு  மீன்பிடி துறைமுகமும் அமைக்கப்பட்டது.  இந்த மீன்பிடி  துறைமுகத்தை ஒட்டியுள்ள  கடல்பகுதியில் இயற்கை எழில் கொஞ்சுவதால், உள்ளூர் பொதுமக்கள் மட்டுமின்றி அண்டை மாவட்டங்களிலிருந்தும் சுற்றிப்பார்க்க வருவதை  வழக்கத்தில் கொண்டுள்ளார்கள். இந்த நிலையில்தான்,   கடந்த மார்ச் 23 ந்தேதி விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை பகுதியை சேர்ந்த ஒரு  காதல் ஜோடி அங்கு வந்து முதலில் கடலில் குளித்துள்ளனர்.


பின்னர் தனிமையில் பேசிக்கொண்டு இருந்துள்ளனர். இதனை நோட்டமிட்ட  3 பேர் கொண்ட ரவுடி கும்பல்  அவர்களை பின் தொடர்ந்து சென்று அவர்களிடம்  கத்தியை காட்டி காதலனை மாணவி அணிந்திருந்த துப்பட்டாவால் கட்டிப்போட்டுவிட்டு  மூன்று ரவுடிகளும் அந்த மாணவியை மாறி மாறி கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். அதுமட்டுல்லாமல், அந்த மாணவி காதில் அணிந்திருந்ததோடு, கழுத்தில் அணிந்திருந்த 2 சவரன் செயின்,கால் கொலுசு உள்ளிட்ட   நகைகளையும் பர்சில் வைத்திருந்த  பணத்தையும்  பறித்துச் சென்றனர். ஆனால், இந்த சம்பவம் குறித்து தகவல் வெளியானபோது விசாரித்தத்தில் அந்த 3 ரவுடிகளும் அந்த இளம்பெண்ணை கேலி மட்டுமே  செய்ததாக சாயல்குடி காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.




 'மூடி மறைக்க முயற்சியா'


தன்னை கட்டிப்போட்டுவிட்டு தான் நேசித்த பெண்ணை தன் கண் முன்னால் 3 ரவுடிகள் சீரழித்த இந்த சம்பவத்தை ஆண் நண்பரால் ஜீரணிக்க முடியாமல், இரண்டு நாட்களாக யாரிடமும் வெளியில் கூறாமல் இருந்துள்ளார். இந்நிலையில், திடீரென கடந்த 25 ஆம் தேதி  தனது வீட்டில் அவர் திடீரென விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். உடனே அவரை மீட்டு அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்து அங்கு அவருக்கு சிகிச்சை  அளிக்கப்பட்டபோது, இதுசம்பந்தமாக அருப்புக்கோட்டை போலீசார் விசாரணை மேற்கொண்ட பின்பே சினிமையும் மிஞ்சிய அந்த கொடூர சம்பவம் வெளி உலகத்துக்கு தெரிய வந்தது.


இதன் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். இந்நிலையில் இந்த சம்பவத்தின் போது கல்லூரி மாணவியை அந்த 3 ரவுடிகளும் கூட்டு பலாத்காரம் செய்த பரபரப்பு தகவல் வெளியானது. இதுதொடர்பாக போலீசார் உடனே  விசாரணை நடத்த தொடங்கினர். சாயல்குடி- அருப்புக்கோட்டை சாலையிலிருந்து மூக்கையூர் கடற்கரைக்குச் செல்லும் வழியில் அமைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை கொண்டு மூக்கையூருக்கு வந்த  3 ரவுடிகளும் சாயல்குடி போலீசாரால் அடையாளம் காணப்பட்டனர்.  





இதனையடுத்து, செல்போன் சிக்னல் மூலம் அவர்கள் இருப்பிடத்தை கண்டறிந்து அவர்களை கைது செய்ய சென்ற கமுதி காவல் நிலைய சார்பு ஆய்வாளர்  ஒருவரும் ஏட்டு  ஒருவரும் கமுதியை அடுத்த குண்டுகுளம்  பகுதியில் பதுங்கியிருந்த, பத்மாஸ்வரன், தினேஷ்குமார்  ஆகிய 2 ரவுடிகளை பிடிக்க சென்றபோது, சார்பு ஆய்வாளர் நவநீத கிருஷ்ணன், கருப்பசாமி ஆகிய இரண்டு போலீசாரும் ரவுடிகளால் தாக்கப்பட்டு காயமடைந்ததாகவும், அதே போல, போலீசாரை தாக்கி விட்டு ஓடிச்சென்று பைக்கில் ஏறி தப்பியோட முயற்சிக்கும்போது, கீழே விழுந்து கால் முறிவு ஏற்பட்டதாகவும்   கூறப்பட்டது.


அதேபோல, காயமடைந்த போலீசார் 2 பேர்,ரவுடிகள் 2 பேரும் என  மொத்தம் 4 பேர்களும் கமுதி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் காட்சிகளும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதனை தொடர்ந்து, இந்த வழக்கில் தொடர்புடைய மற்றொரு ரவுடியான அஜித் என்பவர் திருப்பூரில் வைத்து போலீசாரால் கைது செய்யப்பட்டதாகவும் தகவல் உறுதிப்படுத்தப்பட்டது. இவை அனைத்தும் கடந்த மார்ச் 25ஆம் தேதி வெளியான தகவல்கள்.


இதனிடையே  சாயல்குடி காவல்துறையினரிடம்  நாம் விசாரித்தபோது மூன்று பேரும் சேர்ந்து அந்த காதல் ஜோடியை கேலி செய்ததாகவும் அதனைத் தொடர்ந்து அவர்கள் அணிந்திருந்த நகைகளை மட்டுமே பறித்து சென்றதாகவும் கூறப்பட்டது. சம்பவம் நடந்த இடம் ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி காவல்நிலையத்திற்கு உட்பட்பட்டது  என்பதால் மாவட்ட எஸ்.பி கார்த்திக் சம்பவம் நடந்த மூக்கையூர் கடற்கரைக்கு நேரடியாக வந்து ஆய்வு செய்து  விசாரித்து விட்டு சென்றார். ஆனால், அதற்க்குப்பிறகு இந்த வழக்கு தொடர்பாக எந்த விசாரணையும் சாயல்குடி போலீசார் நடத்தவில்லை. இந்நிலையில் இந்த வழக்கில், வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்ட மாணவியிடம் நீதிபதி தனியாக வாக்குமூலம் பெற்றதை தொடர்ந்து, விசாரணையை ராமநாதபுரம் மாவட்ட காவல் துறைக்கு மாற்றி ஐ.ஜி. அஸ்ராகாக் உத்தரவிட்டுள்ளார்.


இதன் அடிப்படையில் விருதுநகர் மாவட்ட காவல்துறை சார்பில் நடந்த வழக்கு விசாரணை மற்றும் முதல் தகவல் அறிக்கை உள்ளிட்ட ஆவணங்கள் கடந்த 2 நாட்களுக்கு முன்பு ராமநாதபுரம் மாவட்ட காவல் துறையிடம் ஒப்படைக்கப்பட்டதாக தெரிகிறது.




'தாமதமாக பதியப்பட்ட வழக்கு' 


இதையடுத்து இப்போதுதான் அருப்புக்கோட்டை  மாணவி கூட்டு பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக இந்த வழக்கினை கற்பழிப்பு வழக்காக மாற்றி சாயல்குடி காவல்துறையினர்  வழக்குப்பதிவு செய்து, தற்போதுதான் விசாரணையை தொடங்கி உள்ளார்களாம். இந்த வழக்கு தொடர்பாக சம்பவம் நடந்த  மூக்கையூர் பொதுமக்களிடம் விசாரித்ததில் மூக்கையூர் இதுநாள்வரை ஒரு புனிதமான ஊராக பார்க்கப்பட்டது.


இங்குள்ள கடற்கரையில் அமாவாசை காலங்களில் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து இங்கிருந்து கடல் நீரை  எடுத்துச் சென்று வீடுகளில் தெளிவித்து தீட்டை கழிப்பார்கள். ஆனால், இந்த சம்பவத்தால் இந்த கடற்கரையே களங்கப்பட்டுவிட்டது என வேதனையுடன் தெரிவித்தனர். மேலும் மூக்கையூர் கடற்கரையில் காவல்துறையினர் அவ்வப்போது ரோந்து பணியில் ஈடுபட்டு இதுபோன்ற அசம்பாவிதங்களை தடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர். 






'வெளிப்படையான விசாரணை தேவை'


அதேபோல நம்மிடம் பேசிய சாயல்குடி பொதுமக்கள், சாயல்குடி காவல் நிலையத்தில் ஏழை எளிய மக்கள்  பாதிப்புக்குள்ளான புகார்கள் விசாரிக்கப்படுவதில்லை. புரோக்கர்கள்  மூலமாக செல்லும் வழக்குகள் தான் உடனே விசாரிக்கப்படுகிறது.  எனவே மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இந்த விவகாரத்தில் நேரடியாக தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும். ஏனென்றால் இவர் காவல் கண்காணிப்பாளராக பொறுப்பேற்ற பிறகுதான், மாவட்டத்தில் அநேகம் ரவுடிகள் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர்.


போதைப்பொருள் விற்பனை கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் சாயல்குடி காவல் நிலையம் தற்போது புரோக்கர்களின் ஆதிக்கமாகிவிட்டது, எனவே இளம் மாணவி கூட்டு பாலியல்  பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் மேலும் தாமதப்படுத்தாமல் வெளிப்படைத்தன்மையுடன் உரிய விசாரணை நடத்தி குற்றவாளிகளை கடுமையாக தண்டிக்க வேண்டும் என  வலியுறுத்தியுள்ளனர்.