ராமநாதபுரம் பாம்பன் சந்து பகுதியை சேர்ந்தவர் முனியசாமி 45. டிரைவரான இவர், சாயல்குடி அருகேயுள்ள ஒப்பிலான் மாரியூரை சேர்ந்த முகமது யாசின் என்பவரது காரை கடந்த மூன்று ஆண்டுகளாக ஒப்பந்த அடிப்படையில் பெற்று ஓட்டி வந்தார். இந்த நிலையில் கடந்த  அக்டோபர் 3 ஆம் தேதி முனியசாமி வீட்டில் இருந்த போது ராமநாதபுரம் கோட்டை மேட்டு தெருவை சேர்ந்த  பிச்சை மகன் சுப்பிரமணியன் (27,) சிகில்ராஜவீதி முனியசாமி மகன் கார்த்திக் 30, ஆகியோர் 'வாடகைக்கு கார் வேண்டும்', என்று எடுத்து சென்றுள்ளனர். அதற்கு பிறகு அவ்வப்போது ரூ.5000, ரூ.10,000 என இதுவரை ரூ.20 ஆயிரம் கொடுத்துள்ளனர். ஆனால், முழுமையான வாடகை தராமல் ஏமாற்றி வந்துள்ளனர். இதனால், அவரிடம்  விசாரித்த போது கார்த்திக்கின்  அண்ணன் இளையராஜா (39,) என்பவரிடம் காரை கொடுத்து மதுரையில் சீட்டு விளையாடுவதற்காக காரை அடகு வைத்து மோசடி செய்தது தெரிய வந்தது. இதனால் தான் ஏமாற்றப்பட்டதையறித்து அதிர்ச்சியான முனியசாமி போலீசில் புகார் அளித்தார்.




புகாரின் பேரில், ராமநாதபுரம் பஜார் இன்ஸ்பெக்டர் ரஞ்சித் வழக்கு பதிந்து சுப்பிரமணி, கார்த்திக், இளையராஜா ஆகிய மூவரையும் கைது செய்தார். இவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், மூவரும் இதுபோல் 19 பேரிடம் கார்களை வாடகைக்கு பெற்று சீட்டு விளையாடுவதற்காக மதுரையில் அடகு வைத்திருப்பது தெரிய வந்ததும் போலீசாரும் ஷாக்காகிப்போனார்கள். இது குறித்து காவல்துறையினர் நம்மிடம்  கூறுகையில், ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் ராமநாதபுரம் பாம்பன் சுவாமி கோவில் தெருவைச் சேர்ந்த முனியசாமி என்பவர் தன்னுடைய கார் வாடகைக்கு கொடுத்த நபரிடம் இருந்து மீட்டுத் தரக் கோரி புகார் மனு ஒன்றை அளித்தார். அதனடிப்படையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விசாரணை மேற்கொண்டதில், இது போன்று பல கார்கள் வாடகைக்கு எடுத்து  வாடகை வராதது தெரிய வந்திருக்கிறது. 




இதனை அடுத்து இது தொடர்பாக சிறப்பு படை அமைத்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர்,  முதற்கட்ட விசாரணையில் ராமநாதபுரம் சிகில்ராஜ வீதியைச் சேர்ந்த இளையராஜா என்பவர் பல நபர்களிடம் இதுபோன்று கார்களை வாடகைக்கு எடுத்து மதுரை, சிவகங்கை, திண்டுக்கல் போன்ற நகரங்களில் இந்த கார்களை விற்பனையும் ,அடகு வைத்ததும்  தெரிய வந்திருக்கிறது. அதனை தொடர்ந்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நடவடிக்கையின் பேரில் இவருடன் சேர்ந்து இளையராஜா, கார்த்திக், சுப்பிரமணி ஆகிய மூன்று நபர்களை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் அவர்களிடம்  இருந்து 16 கார்களை பறிமுதல் செய்து  ராமநாதபுரம் ஆயுதப்படை மைதானத்தில் நிறுத்தி வைத்துக்கொண்டனர்.  மேலும், கார்களின் உரிமையாளர்கள் தகுந்த ஆவணங்களைக் காட்டி எடுத்துச் செல்லலாம் எனவும் தெரிவித்தினர். மேலும் நம்மிடம் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் தெரிவிக்கும்போது, கார்கள் வைத்திருக்கும் உரிமையாளர்கள் கூடுதலாக கிடைக்கும் வாடகைக்கு ஆசைப்பட்டு இதுபோன்ற மோசடி  நபர்களிடம் தங்களது கார்களை ஒப்படைக்க வேண்டாம் என அறிவுறுத்தினார்.