அதிமுக வழக்கறிஞர் பிரிவு வழக்கறிஞர்கள் ஆனந்தகுமார் மற்றும் மாரிஸ் குமார் இருவரும் ராஜேந்திர பாலாஜி மதுரை சிறைக்கு கொண்டு செல்லப்பட்ட பின்னர் ஸ்ரீவில்லிப்புத்தூர் நீதிமன்ற வளாகத்தில் பேட்டி அளித்தனர். இதோ அவர்கள பேசியது:
‛‛முன் ஜாமீன் கோரி டெல்லி உச்சநீதிமன்றத்தில் ராஜேந்திர பாலாஜி தரப்பில் தாக்கல் செய்துள்ள மனு இன்று விசாரணைக்கு வர உள்ள நிலையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளதால் அதனை ஜாமீன் மனுவாக ஏற்க பரிசீலனை செய்ய கோரியுள்ளோம். உச்சநீதிமன்றத்தில் ஜாமீன் மனு மீதான விசாரணையை தொடர்ந்து அடுத்தகட்ட நடவடிக்கையை மேற்கொள்ள உள்ளோம்.
ராஜேந்திரபாலாஜி சுத்தமானவர். ராஜேந்திரபாலாஜிக்கும் மோசடிக்கும் எந்தவித சம்மந்தமும் கிடையாது. ராஜேந்திரபாலாஜி மீது பொய் வழக்கு தொடரப்பட்டுள்ளது. புகார்தாரர் ரவீந்திரன் என்பவர் ராஜேந்திரபாலாஜியை பார்க்கவில்லை என உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். வழக்கு தொடர்பாக ராஜேந்திரபாலாஜியை மட்டுமில்லாமல் வழக்கறிஞராகிய என்னையும் கொடுமை செய்தது, வழக்கறிஞர்களின் மொத்த உரிமையை தடுத்து நிறுத்தும் வகையில் அரசு செயல்படுகிறது.
விருதுநகர் மாவட்ட குற்றவியல் நீதிமன்றத்தில் அரசு தரப்பில் ஆஜராக வழக்கறிஞர் இருக்கும் நிலையில், இதை விடுத்து சென்னை உயர் நீதிமன்றத்தை சேர்ந்த 11 வழக்கறிஞர்களை அனுப்பியுள்ளதை பார்க்கும் போது ராஜேந்திரபாலாஜியை பழி வாங்கும் நோக்கில் அனுப்பப்பட்ட வழக்கறிஞர் படைகளாக உள்ளது. தேவையற்ற முறையில் எந்தவித அரசாணையும் இல்லாமல் உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் வாதிடுவது ஏற்புடையதல்ல.
தமிழக அரசு பழிவாங்கும் நோக்கில் செயல்பட்டு வருகிறது. அமைச்சர் செந்தில்பாலாஜி மீதான மோசடி வழக்கில் 2 கோடி ரூபாய் பணத்தை திரும்ப கொடுத்து சரி செய்தபோது தமிழக அரசுக்கு தெரியவில்லையா? இதிலிருந்தே இது காழ்புணர்ச்சி வழக்கு என்பது தெளிவாக தெரிகிறது, என்றார்.
அரசுப் பணிய வாங்கித் தருவதாக ரூ.3 கோடி பெற்று மோசடி செய்ததாக முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி மீது புகார் செய்யப்பட்டு, அவரை கைது செய்ய விருதுநகர் குற்றப்பிரிவு போலீசார் முயற்சி செய்தனர். கைதாகாமல் முன்ஜாமின் பெற ராஜேந்திரபாலாஜி முயற்சி செய்தார். ஆனால் அது நடைபெறவில்லை. இந்நிலையில் நேற்று கர்நாடக மாநிலத்தில் சேஸ் செய்து கைது செய்யப்பட்டார். நேற்று நள்ளிரவு விருதுநகர் அழைத்து வரப்பட்ட ராஜேந்திர பாலாஜியிடம் டிஐஜி தலைமையிலான போலீசார், விடிய விடிய விசாரணை நடத்தினர்.
பின்னர் விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிப்புத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். விசாரணைக்குப் பின் அவரை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். இந்நிலையில் தான், அவர் சிறைக்குச் சென்ற பின் அவரது சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் பேட்டி அளித்தனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்