சேலத்தைச் சேர்ந்த 32 வயதான மணிகண்டன் என்பவருக்கு திருமணம் ஆகவில்லை. இவர் கேரள-தமிழக எல்லை கொழிஞ்சாம்பாறை பகுதியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருமணத்திற்கு பெண் தேடி சென்றுள்ளார். அப்போது இவரிடம் கேரள மாநிலம் திருச்சூரை சேர்ந்த 40 வயதான சுனில் மற்றும் பாலக்காடு மாவட்டம் கேரளச்சேரியை சேர்ந்த 35 வயதான கார்த்திகேயன் ஆகியோர் திருமண புரோக்கர் என்று அறிமுகப்படுத்திக் கொண்டனர். பின்னர் தங்களிடம் பெண் இருப்பதாக தெரிவித்து மணிகண்டனிடம் கமிஷனாக ரூ.1.5 லட்சம் வாங்கியுள்ளனர்.
கார்த்திகேயன் தனது தங்கை 28 வயதான சஜீதாவை கடந்த டிசம்பர் 12ம் தேதி மணிகண்டனுடன் ஒரு கோயிலில் திருமணம் செய்து வைத்தார். திருமணம் முடிந்தவுடன் அன்று மாலை மணமகன் வீடு இருக்கும் இடமான சேலத்திற்கு சென்றனர். மறுநாள் சஜீதாவின் தாயாருக்கு உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக கூறி அண்ணன் கார்த்திகேயனும், தங்கை சஜீதாவும் பாலக்காட்டிற்கு சென்றுள்ளனர்.
தொடர்ந்து சஜீதாவுக்கு மணிகண்டன் போன் செய்து அம்மாவின் உடல்நலம் குறித்து விசாரிக்க முயற்சி செய்தபோது அவரது போன் சுவிட்ச்ஆப் ஆகி இருப்பது தெரியவந்தது. இதனால் சந்தேகமடைந்த மணிகண்டன் பாலக்காடு சென்று விசாரித்தார்.அப்போது கார்த்திகேயனுடன் சேர்ந்த கும்பல் இளம்பெண்களை காட்டி திருமண மோசடி செய்கிற கும்பல் என்ற அதிர்ச்சிகர தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து மணிகண்டன் கொழிஞ்சாம்பாறை காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். வழக்குப்பதிவு செய்த காவல்துறை விசாரணை நடத்தி மோசடி கும்பலை சேர்ந்த சஜீதா, தேவி,சகீதா, சுனில், கார்த்திகேயன் என 5 பேர் கொண்ட கும்பலை கைது செய்தனர்.
கைதான கும்பல் காவல்துறையினரிடம் அளித்த வாக்குமூலத்தில், மணப்பெண் தேவை என நாளிதழ்களில் விளம்பரம் கொடுத்து அதன் மூலம் தொடர்பு கொள்பவர்களுக்கு பெண்களின் புகைப்படங்களை அனுப்பி வைப்போம். அவர்களை உடனடியாக திருமணம் செய்துகொள்ள வேண்டுமென நிர்ப்பந்தம் கொடுத்து திருமணம் செய்து வைப்போம்.
தொடர்ந்து, பெற்றோருக்கு உடல்நல குறைவு உள்ளது எனக் கூறி ஓரிரு நாட்களிலேயே மணப்பெண்ணை அழைத்து கொண்டு மாயமாகி விடுவோம் என்று தெரிவித்துள்ளனர். இதுவரை கோவை, ஈரோடு, சேலம், நாமக்கல், திருப்பூர் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட தமிழகத்தைச் சேர்ந்த பகுதிகளிலிருந்து வாலிபர்களை மோசடி செய்து ஏமாற்றி திருமணம் செய்து வைத்ததோடு, அவர்களிடமிருந்து லட்சக்கணக்கில் பணம் வசூலித்துள்ளோம் இவ்வாறு அவர்கள் கூறியதாக போலீசார் தெரிவித்தனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்