ராஜஸ்தானின் ஜோத்பூரில் கிணற்றில் இருந்து தண்ணீர் எடுத்ததற்காக 46 வயது பழங்குடியினரை அடித்துக் கொன்றதாகக் கூறப்படும் அதிர்ச்சிகரமான சம்பவம் குறித்து காவல்துறையினர் திங்கட்கிழமை செய்தியாளர்களிடம் தெரிவித்தனர்.


சாதியத் தாக்குதல்


சூர்சாகரில் உள்ள போமியாஜி கி காதியில் இந்த சம்பவம் நடந்துள்ளது. பிடிஐ வெளியிட்டுள்ள தகவல்களின் படி, குற்றம் சாட்டப்பட்டவர், கிஷன்லால் பீல் என்ற நபர் மீது சாதிய அவதூறு காரணமாக தாக்குதல் நடத்தியதாக தெரிகிறது.


மேலும் அவரது குடும்பத்தினர் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லவும் அனுமதிக்கவில்லை என்று அவரது சகோதரர் அசோக் குற்றம் சாட்டியுள்ளார். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் பலத்த காயங்களுக்கு உள்ளான அந்த நபரை மருத்துவமனையில் அனுமதித்த பின்னர், அங்கு அவர் உயிரிழந்துள்ளதாக தகவல் தெரிவித்தனர்.



மூவர் கைது


இந்த சம்பவத்தை தொடர்ந்து இதுவரை, மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஷகீல், நசீர் மற்றும் பப்லு  என்னும் மூவர் அவரை அடித்து கொலை செய்ததாக கைது செய்யப்பட்டு, பட்டியல் சாதி மற்றும் பழங்குடியினர் (வன்கொடுமை தடுப்பு) சட்டம் மற்றும் இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 302 (கொலை) ஆகியவற்றின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.


தொடர்புடைய செய்திகள்: Twitter Official Badge: இனி போலி கணக்குக்கு ’பாய்’ ’பாய்’..ட்விட்டர் பக்கத்தில் அடுத்த ட்விஸ்ட்.. அதிகாரபூர்வமாக வந்த புதிய அப்டேட்.!


உறவினர்கள் ஆர்ப்பாட்டம்


இச்சம்பவத்தில் தொடர்புடைய மற்றவர்களை தேடும் பணி நடைபெற்று வருகிறது என சூர்சாகர் காவல் நிலைய எஸ்.எச்.ஓ., கவுதம் தோடசரா தெரிவித்தார். இந்த சம்பவத்திற்குப் பிறகு, பீலின் குடும்பத்தினர் மற்றும் சமூகத்தை சேர்ந்தவர்கள் போராட்டம் நடத்தி அவரது இறுதிச் சடங்குகளைச் செய்ய மறுத்துவிட்டனர். குற்றம் சாட்டப்பட்ட அனைவரையும் உடனடியாகக் கைது செய்ய வேண்டும், அத்துடன் நிதி இழப்பீடு வழங்க வேண்டும் என்றும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.



சகோதரர் தகவல்


"பிரேத பரிசோதனை செய்து உடலை இறுதிச் சடங்கிற்காக குடும்பத்தினரிடம் ஒப்படைப்பதற்காக நாங்கள் ஆர்ப்பாட்டக்காரர்களுடன் பேசி வருகிறோம்” என்று டோட்டாசரா கூறினார். கைது செய்யப்பட்ட மூவர் உட்பட உள்ளூர்வாசிகள் சிலர் உள்ளூரில் நிறுவப்பட்ட குழாய் கிணற்றை கட்டுப்பாட்டில் வைத்திருப்பதாக பாதிக்கப்பட்டவரின் சகோதரர் குற்றம் சாட்டியுள்ளார். அதில் பம்ப் ஒன்றையும் பொருத்தி, மற்றவர்களை பயன்படுத்த விடுவதில்லை என்று கூறியுள்ளார்.


"ஞாயிற்றுக்கிழமை இரவு, கிஷன்லால் தண்ணீருக்காக குழாய்க் கிணற்றிற்குச் சென்றிருந்தார், ஆனால் இந்த மக்கள் அவரைத் தள்ளிவிட்டு, அவரை சாதி ரீதியாக அவதூறு செய்து அடித்தனர்" என்று அசோக் குற்றம் சாட்டினார். அவர் வீடு திரும்பிய உடனேயே, நசீர், ஷகீல், பப்லு உள்ளிட்ட சிலர் எங்கள் வீட்டைத் தாக்கி பீல் மற்றும் அவரது மகனை கம்பிகள் மற்றும் கட்டைகளால் தாக்கினர் என்று அசோக் மேலும் காவல்துறையினரிடம் கூறினார்.