கரூர் அரசு மற்றும் அரசு உதவி பெறும் 68 பள்ளிகளில் பன்னிரெண்டாம் வகுப்பு படிக்கும் 14 ஆயிரம் மாணவ, மாணவிகளுக்கு ஆங்கில மொழி எளிதாக கற்றுக் கொடுக்கும் வகையில் ஆங்கில நண்பன் என்ற நிகழ்ச்சியை மாவட்ட ஆட்சித் தலைவர் பிரபு சங்கர் தொடங்கி வைத்து பார்வையிட்டார்.
கரூர் மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் அரசுப் பள்ளிகளில் 12ஆம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவிகளுக்கு ஆங்கில மொழியை எளிதாக கற்றுக் கொடுக்கும் வகையில் “ஆங்கில நண்பன்” என்ற நிகழ்ச்சியை மாவட்ட நிர்வாகம் மற்றும் கரூர் ரவுண்டு டேபிள் இணைந்து வடிவமைத்த நிகழ்ச்சியை மாவட்ட ஆட்சித் தலைவர் பிரபு சங்கர் தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்ததாவது: தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் நான் முதல்வன் என்ற முன்னோடி திட்டத்தின் ஒரு பகுதியாக கரூர் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் 68 பள்ளிகளில் பன்னிரெண்டாம் வகுப்பு படிக்கும் 14 ஆயிரம் மாணவ, மாணவிகளுக்கு உயர்கல்வி செல்லும் போது ஆங்கில மொழியை எளிமையாக புரிந்து கொள்ளும் வகையில் ஆங்கில நண்பன் என்ற நிகழ்ச்சி தொடங்கப்பட்டு நடத்தப்பட உள்ளது. ஆங்கில மொழி என்பது உலகத்தில் உள்ள அனைவரையும் தொடர்பு கொள்வதற்கான ஒரு வழியாகும் அதற்காக பன்னிரெண்டாம் வகுப்பு முடிந்து கல்லூரி படிப்பை தொடங்கும் மாணவ, மாணவியர்களுக்கு ஆங்கிலத்தை கற்றுக் கொள்வதை எளிமையாக்கும் வகையில் ஆங்கில நண்பன் என்ற இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மொழி என்ற பயத்தை போக்குவதற்காகவும், படிப்பை எளிமையாக்குவதற்கும் இந்த திட்டம் பயனுள்ளதாக இருக்கும். உங்களுக்கு எந்த பயமும் இல்லாமல் தன்னம்பிக்கையை உருவாக்குவதற்கு தான் இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. மின்சாரம் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் மாணவர்களின் முன்னேற்றத்தில் பெரிதும் அக்கறை கொண்டவர் அதன் ஒரு பகுதியாகவே அவரின் ஆலோசனைப்படி கரூர் ரவுண்டு டேபிள், மாவட்ட நிர்வாகம் இணைந்து இந்த நிகழ்ச்சி தொடங்கப்பட்டு உள்ளது.
நாள்தோறும் ஒரு 20 நிமிடம் கற்றுக் கொள்ளக் கூடிய வகையில் ஒளிப்பட காட்சியாக அமைக்கப்பட்டு உள்ளது. மொத்தம் 60 வகுப்புகள் உங்களுக்கு நடத்தப்பட உள்ளது. இந்த 60 வகுப்புகள் முடிந்த பிறகு ஆங்கிலம் என்பது கடினமே இல்லை என்பதை உங்களுக்கு புரிய வைக்கும் இந்த நிகழ்ச்சி. பனிரெண்டாம் வகுப்பு முடித்து நீங்கள் கல்லூரிக்கு செல்லும் போது அங்கு சாதாரணமாக பேச்சுவாக்கில் பயன்படுத்தும் ஆங்கில வார்த்தைகள் எல்லாம் உங்களுக்கு எளிமையாக புரிய வைப்பதற்காக இந்த நிகழ்ச்சி துவங்கப்பட்டுள்ளது. கரூர் மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளில் பணிபுரியும் ஆங்கில ஆசிரியர்கள் அனைவரையும் அழைத்து அவர்களிடம் கருத்துக்கள் கேட்டு மாணவர்களுக்கு என்ன தேவை என்பதை தெரிந்து கொண்டு அதன் அடிப்படையில் இந்த நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.
தினந்தோறும் 20 நிமிடம் நீங்கள் இதை கற்றுக் கொண்டால் ஆங்கிலம் சரளமாக வந்துவிடும். மாணவர்கள் அனைவரும் இதை சந்தோசமாக அனுபவித்து படிக்க வேண்டும். நீங்கள் கல்லூரி செல்லும் போது ஆங்கிலம் ஒரு பிரச்சனையே இல்லை என்பதை கண்டிப்பாக உங்கள் மனதில் தோன்றும் அளவிற்கு இந்த வகுப்புகள் இருக்கும். தமிழ்நாடு முதலமைச்சர் பள்ளி படிப்பை முடித்த அனைத்து மாணவர்களும் உயர் கல்வி படிக்க வேண்டும் என்பதற்காகத்தான் நான் முதல்வன் என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளார்.
அரசுப் பள்ளியில் மாணவர்கள் கல்லூரியில் சேரும்போது சக மாணவ, மாணவியர்களுடன் தன்னம்பிக்கையுடன் உரையாடவும் பாடங்களை எளிதில் புரிந்து கொள்ளவும் இது உதவும். அனைவரும் இதை பயன்படுத்தி உயர் கல்வி எளிமையாக படிக்க எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்” என தெரிவித்தார்.