கொரோனா பரவல் காரணமாக கடந்த இரண்டரை ஆண்டுகளாக இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அதிகம் விதிக்கப்பட்டுள்ளன. இதன்காரணமாக இளைஞர்கள் முதல் அனைத்து தரப்பினரும் அதிக நேரம் ஆன்லைனில் தங்களுடைய நேரத்தை செலவிட்டு வருகின்றனர். இந்தச் சூழலில் ஆன்லைன் டேட்டிங் செயலிகள் இந்த கால கட்டத்தில் மிகவும் பிரபலம் அடைந்து வருகின்றன. அத்துடன் அதன் மூலம் நடைபெறும் மோசடிகளும் அதிகமாகி வருகின்றன. 


 


இந்நிலையில் டேட்டிங் செயலி மூலம் மேலும் ஒரு மோசடி நடைபெற்றுள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் புனே பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர் கடந்த சில நாட்களுக்கு முன்பாக காவல்துறையில் புகார் அளித்துள்ளார். அதன்படி அந்த நபர் அப்பகுதியில் நாற்காலி வியாபாரம் செய்து வருகிறார். அவருக்கு கடந்த ஜூன் மாதம் ஒரு பிரபல ஆன்லைன் டேட்டிங் செயலி மூலம் பெண் ஒருவர் அறிமுகமாகியுள்ளதாக தெரிகிறது. அந்தப் பெண்ணுடன் இவர் நீண்ட நேரம் பேசியுள்ளார். 




மேலும் அவர்கள் இருவருக்கும் நல்ல நட்பு மலர்ந்துள்ளது. இந்த நபர் தொடர்பான முழு விவரங்களை அப்பெண் தெரிந்து கொண்டுள்ளார். அதன்பின்னர் ஒரு நாள் இருவரும் சந்திக்க வேண்டும் என்று அப்பெண் இவருக்கு கோரிக்கை வைத்துள்ளார். இந்த நபரும் அதற்கு ஒத்துகொள்ள தன்னுடைய வீட்டின் முகவரியை அப்பெண் வழங்கியுள்ளார். அந்த முகவரிக்கு சென்ற இந்த நபரை அப்பெண் வேறு ஒரு இடத்திற்கு அழைத்து சென்றுள்ளதாக தெரிகிறது. அந்த இடத்தில் அந்த பெண்ணின் தோழி ஒருவர் இந்த நபரை தாக்கியுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் அவரை விடுவிக்க வேண்டும் என்றால் உடனடியாக 10 லட்சம் ரூபாய் பணம் தரவேண்டும் என்று தெரிவித்துள்ளனர். இதைத் தொடர்ந்து அந்த நபர் அப்பெண்களிடம் தன்னை காத்து கொள்ள தன்னிடம் இருந்த கிரேடிட் கார்டு, ஏடிஎம் கார்டு மற்றும் நகைகள் ஆகியவற்றை கொடுத்துள்ளதாக தெரிகிறது. 


 


இதைவைத்து மொத்தமாக 6 லட்சம் ரூபாய் வரை எடுத்து கொண்ட அந்த பெண்கள் இந்த நபரை வெளியே அனுப்பிவிட்டு தப்பி ஓடியுள்ளனர். இந்த புகார் தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து அந்த இரண்டு பெண்களையும் தீவிரமாக தேடி வருகின்றனர். ஆன்லைன் டேட்டிங் செயலி பயன்படுத்துவதன் மூலம் மேலும் ஒரு மோசடி நடந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இம்முறை அந்த செயலி மூலம் பெண் ஒருவர் ஆணை ஏமாற்றியுள்ள சம்பவம் மிகவும் வியப்படைய வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. 


மேலும் படிக்க: சிறுமிகளை குறி வைத்து பாலியல் சீண்டல்.. ஒரே மாதத்தில் 4 சிறுமிகள்.! வலை வீசி தேடும் காவல்துறை!