புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் அருகே விளானூர் பகுதியை சேர்ந்த பால்சாமியின் மனைவி பஞ்சவர்ணம் (47). இவரது கணவர் இறந்து விட்டார். பஞ்சவர்ணத்திற்கும், அதே பகுதியை சேர்ந்த சிவக்குமாருக்கும் (48) பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறியது. இந்த நிலையில் பஞ்சவர்ணத்திடம் சிவக்குமார் ஒரு லட்சம் பணம் வாங்கி உள்ளார். இந்த பணத்தை பஞ்சவர்ணம் திருப்பி கேட்ட போது அவர் கொடுக்காமல் காலம் தாழ்த்தி உள்ளார். இதனால் அவரிடம் பணத்தை கேட்டு பஞ்சவர்ணம் பிரச்னை செய்துள்ளார். இது தொடர்பாக தன்னுடன் சென்னையில் ஓட்டலில் வேலை பார்த்த ஆவுடையார் கோவில் அருகே உள்ள குமுளூரை சேர்ந்த காளிமுத்து (40), மணிப்பூரை சேர்ந்த லலிம்பாய் (30) ஆகியோரிடம் தெரிவித்துள்ளார். இந்த நிலையில் பஞ்சவர்ணத்திடம் காளிமுத்து பழக்கம் ஏற்படுத்தி பணத்தை திருப்பி கொடுக்க ஏற்பாடு செய்வது போல சம்பவத்தன்று பஞ்சவர்ணத்தை சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே வடகீழ்குடி பகுதியில் ஆற்றங்கரையோரம் காளிமுத்து அழைத்து சென்றார்.

 

அங்கு பஞ்சவர்ணத்தை காளிமுத்து, சிவக்குமார், லலிம்பாய் ஆகியோர் சேர்ந்து கொலை செய்து புதைத்தனர். மேலும் பஞ்சவர்ணத்திடம் இருந்த 7.5 சவரன் நகை மற்றும் 3 லட்சம் பணத்தை கொள்ளையடித்து சென்றனர். இதற்கிடையில் தனது தாய் பஞ்சவர்ணத்தை காணவில்லை என அவரது மகன் ஆவுடையார் கோவில் காவல் நிலையத்தில் கடந்த 2019 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 6ஆம் தேதி புகார் கொடுத்தார். அதன்பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்த போது மேற்கண்ட தகவல் காவல்துறைக்கு  தெரியவந்தது. இதையடுத்து காளிமுத்து, சிவக்குமார், லலிம்பாய் ஆகியோரை கைது செய்தனர்.

 



 

இந்த கொலை வழக்கு புதுக்கோட்டை மகிளா கோர்ட்டில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கை விசாரித்து வந்த நீதிபதி சத்யா இன்று தீர்ப்பு வழங்கினார். இதில் குற்றம் சாட்டப்பட்ட காளிமுத்துவுக்கு இரட்டை ஆயுள் தண்டனையும், 20 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.1 லட்சத்து 25 ஆயிரம் அபராதமும், சிவக்குமாருக்கு இரட்டை ஆயுள் தண்டனையும், 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.1 லட்சம் அபராதமும், லலிம்பாய்க்கு ஒரு ஆயுள் தண்டனையும், ரூ.75 ஆயிரம் அபராதமும் விதித்து இந்த தண்டனைகளை ஒன்றன்பின் ஒன்றாக அனுபவிக்க வேண்டும் என தீர்ப்பளித்தார்.

 

இதை தொடர்ந்து 3 பேரையும் திருச்சி மத்திய சிறையில் அடைக்க காவல்துறையினர் நடவடிக்கை எடுத்தனர். ஆவுடையார் கோவில் காவல்துறையினர் வழக்குப்பதிவு விசாரணை நடத்திய பஞ்சவர்ணத்தின் கொலை வழக்கில் கைதான காளிமுத்துவிடம் காவல்துறை விசாரணை நடத்திய போது திடுக்கிடும் தகவல் வெளியானது. கடந்த 6-1-2018 அன்று ஆவுடையார்கோவில் அருகே குமுளூர் கிராமத்தில் வசிக்கும் நபரான காளிமுத்துவின் மனைவி கனகம்பாளின் தலையை துண்டித்து கொலை செய்து, அவரது உடலை எரித்து வீட்டில் இருந்த நகைகளை கொள்ளையடித்ததாக ஒப்புக்கொண்டார்.

 



 

மேலும் இந்த கொலை சம்பவம் தொடர்பாக கரூர் காவல்துறை வழக்குப்பதிவு செய்திருந்த நிலையில் கொலையாளி காளிமுத்துவை கைது செய்தனர்.  நிலப்பிரச்சினை தொடர்பாக தனது தந்தையை குமுளூரில் வசிக்கும் காளிமுத்து அவமானப்படுத்தியதால், அதற்கு பழி தீர்க்க அவரை கொலை செய்ய சென்ற இடத்தில் அவர் இல்லாததால் அவரது மனைவியான கனகம்பாளை கொலை செய்ததாக வாக்குமூலத்தில் தெரிவித்திருந்தார். இந்த வழக்கும் புதுக்கோட்டை மகிளா கோர்ட்டில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி சத்யா  தீர்ப்பு வழங்கினார்.  இதில் காளிமுத்துவுக்கு ஆயுள் தண்டனையும், 20 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.1 லட்சம் அபராதமும் விதித்தும், தண்டனையை ஒன்றன்பின் ஒன்றாக அனுபவிக்க வேண்டும் என்றும், சிறையில் இருக்கும் காலத்தில் 18 மாதங்களில் மாதத்தில் 5 நாட்கள் தனிமை சிறையில் இருக்க வேண்டும் என தீர்ப்பளித்தார். இதனால் 2 கொலை வழக்கில் காளிமுத்துவுக்கு 3 ஆயுள் தண்டனையும், 40 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.