புதுக்கோட்டையில் தொழிலதிபரின் கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டு 100 சவரன் நகையை கொள்ளையடித்து சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அடுத்த மணமேல்குடி அருகே உள்ள ஆவுடையார்பட்டினத்தை சேர்ந்தவர் முகமது நிஜாம் (58). இவர் கறம்பக்குடியில் ஆப்டிக்கல் ஷோரூம் வைத்துள்ள நிலையில் ரியல் எஸ்டேட் உள்ளிட்ட பல்வேறு தொழில்களை செய்து வருகிறார். இவருக்கு ஆயிஷா பீவி என்ற மனைவியும் ராஜாமுகமது, ஷேக் அப்துல் காதர் என்ற 2 மகன்களும் பர்கானா என்ற ஒரு மகளும் உள்ளனர்.
இந்நிலையில் ராஜா முகமது மற்றும் பர்கானாவிற்கு திருமணமான நிலையில் சேக் அப்துல்காதருக்கு திருமணம் ஆகவில்லை. மேலும் ராஜாமுகமது மற்றும் சேக் அப்துல் காதர் இருவரும் கறம்பக்குடியில் உள்ள ஆப்டிகல் ஷோரூமை சேர்ந்து நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் ஆவுடையார்பட்டினத்தில் உள்ள முகமது நிஜாம் இல்லத்தில் அவரும் அவரது மனைவி ஆயிஷா பீவியும் வசித்து வந்த நிலையில் நேற்று இரவு நோன்பு நோற்பதால் திராவியா தொழுகையை முடித்துவிட்டு முகமது நிஜாம் அவரது வீட்டு வாசலில் உள்ள வராண்டாவில் அமர்ந்து 11 மணிக்கு மேல் மொபைல் போனில் பேசிக் கொண்டிருந்ததாகவும் அவரது மனைவி ஆயிஷா பீவி வீட்டிற்குள் இருந்ததாகவும் கூறப்படுகின்றது.
இதனையடுத்து அவரது வீட்டின் சுற்றுச்சுவரை 3 மர்ம நபர்கள் ஏறி குதித்து சென்று முகமது நிஜாமை கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டு பின்னர் வீட்டிற்குள் நுழைந்து ஆயிஷாபீவியை கட்டிப் போட்டுவிட்டு கத்தியை காட்டி மிரட்டி பீரோ சாவியை பெற்று அதில் இருந்த சுமார் 100 சவரன் நகையை கொள்ளையடித்து விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றதாகக் கூறப்படுகின்றது.
இதனையடுத்து ஆயிஷா பீவி கட்டப்பட்டிருந்த நிலையில் மெல்ல மெல்ல சென்று மொபைல் போனை எடுத்து அதன் மூலம் உறவினர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளார். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற அவரது உறவினர்கள் முகமதுநிஜாம் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடப்பதையும் ஆயிஷா பீவி கட்டப்பட்டு இருப்பதையும் கண்டு அதிர்ச்சி அடைந்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற மணமேல்குடி காவல்துறையினர் நடந்த சம்பவம் குறித்து விசாரணை செய்தனர். பின்னர் சம்பவ இடத்திற்குச் சென்ற புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நிஷா பார்த்திபன் குற்றச் சம்பவம் நடந்த இடத்தை ஆய்வு மேற்கொண்டு விசாரணையை முடுக்கிவிட்டார்.
பின்னர் கைரேகை நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் உதவியுடன் குற்ற சம்பவத்தில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர். மேலும் கொலையாகி கிடந்த முகமது நிஜாமின் உடலை கைப்பற்றிய போலீசார் உடற்கூறு ஆய்வுக்காக மணமேல்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பான சூழ்நிலை நிலவி வருகிறது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்