புதுச்சேரி: புதுச்சேரி மாணவர் காங்கிரஸ் துணைத் தலைவரை வீடு புகுந்து தாக்கிய வழக்கில் தமிழக வெற்றிக்கழக நிர்வாகி மீது ரெட்டியார் பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Continues below advertisement


புதுச்சேரி பூமியான் பேட்டை மாரியம்மன் கோவில் தெருவில் சிவபெருமாள் (47) தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவருக்கு சிவபிரகாஷ் சூரியமூர்த்தி என இரண்டு மகன்கள் உள்ளனர். இந்நிலையில் நேற்று மதியம் சுமார் 12 மணி அளவில் மர்ம நபர்கள் 10க்கும் மேற்பட்டோர் வீட்டில் புகுந்து அங்குள்ள பொருட்களை சேதப்படுத்தியதோடு வீட்டில் இருந்தவர்களை தாக்கியதாக சிவபெருமாள் ரெட்டியார்பாளையம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.


புகாரின் பேரில் ரெட்டியார்பாளையம் போலீசார் சிவபெருமாள் வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளைக் கொண்டு விசாரணை மேற்கொண்டனர். விசாரனையில், சிவபெருமாள் மூத்த மகன் சிவப்பிரகாஷ் புதுச்சேரி மாநில மாணவர் காங்கிரஸ் துணைத் தலைவராக உள்ளார். அவருக்கு அப்பகுதியில் அவரது ஆதரவளர்கள் பிறந்தநாள் வாழ்த்து பேனர் வைத்துள்ளனர். அதனை முரளி என்பவர் கிழித்துள்ளார். இது குறித்து அவரது தாயார் கேட்டதற்கு தகாத வார்த்தையால் திட்டியதாக கூறப்படுகிறது. இதனால் ரெட்டியார்பாளையம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.


இதுகுறித்து இருதரப்பையும் போலீசார் காவல் நிலையம் அழைத்து போலீசார்  விசாரணை மேற்கொண்டதில் பேனர் கிழித்ததற்கு முரளி மன்னிப்பு கேட்டதால் வழக்கு ஏதும் பதிவு செய்யப்படாமல் சமாதானமாகச் சென்றனர். தனது ஆதரவாளரை காவல் நிலையம் அழைத்து மன்னிப்பு கேட்க வைத்ததால் ஆத்திரம் அடைந்த தமிழக வெற்றிக்கழக நிர்வாகி அருள்பாண்டி, அருள்குமார், சாரங்கபாணி, முரளி, சஞ்சய், ரவி, சர்வின், விஜய பாரதி, கணேஷ் உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்டோர் வீடு புகுந்து புதுச்சேரி மாநில மாணவர் காங்கிரஸ் துணைத் தலைவர் சிவப்பிரகாஷ் மற்றும் பொதுச் செயலாளர் சூரியமூர்த்தி அவர்களது தந்தை சிவபெருமாள் மற்றும் தாயார் ஆகியோரை சரமாரியாக தாக்கி அங்கிருந்த பொருட்களை அடித்து உடைத்து கொலை மிரட்டல் விடுத்தது தெரியவந்தது.


அதனை தொடர்ந்து  தமிழக வெற்றிக்கழக புதுச்சேரி கதிர்காமம் தொகுதி நிர்வாகி அருள் பாண்டி மற்றும் அருள் குமார் உள்ளிட்ட 9 பேர் மீது வழக்கு பதிவு செய்து தலைமறைவாக உள்ள 9 பேரையும் தேடி வருகின்றனர். புதுச்சேரியில் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகளுக்கும் தமிழக வெற்றிக்கழக நிர்வாகிகளுக்கும் இடையே ஏற்பட்ட மோதல் தற்பொழுது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.