இந்த துறையிருக்கு முன்னுரிமை ; மற்ற அரசு துறைகள் புறக்கணிப்பு - அன்பழகன் குற்றச்சாட்டு

அரசுத்துறை ஓட்டுநர்களுக்கும் கல்வித் தகுதிக்கு ஏற்ப பதவி உயர்வு வழங்க வேண்டும் என தமிழ்நாடு அரசு துறை ஊர்தி ஓட்டுநர்கள் தலைமை சங்கத்தின் மாநில பொதுக்குழு கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

Continues below advertisement

தலைமைச் செயலக ஓட்டுநர்களுக்கு வழங்கப்படுவதைப் போன்று மாநிலம் முழுவதும் பணியாற்றும் அரசுத்துறை ஓட்டுநர்களுக்கும் கல்வித் தகுதிக்கு ஏற்ப பதவி உயர்வு வழங்க வேண்டும் என தமிழ்நாடு அரசு துறை ஊர்தி ஓட்டுநர்கள் தலைமை சங்கத்தின் மாநில பொதுக்குழு கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

Continues below advertisement

மாநில பொதுக்குழு கூட்டம்

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறையை அடுத்த நாகங்குடியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தமிழ்நாடு அரசுத்துறை ஊர்தி ஓட்டுநர்கள் தலைமை சங்கத்தின் மாநில பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. மாநில செயற்குழு உறுப்பினர் பச்சையப்பன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் அச்சங்கத்தின் மாநில துணைத்தலைவர் அன்பழகன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றினார். 


செய்தியாளர் சந்திப்பு 

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது: தமிழ்நாடு அரசு மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. அரசு ஊழியர்களை அரவனைத்து இந்த அரசு செல்கிறது. ஆகையால் எங்களது கோரிக்கைகளை நிறைவேற்றிதரும் நம்பிக்கையில் நாங்கள் இந்த அரசுடன் பயணித்துக்கொண்டிருக்கிறோம். எங்களது முதல் கோரிக்கையாக அரசு ஊழியர்களுக்கு ஊதிய வேறுபாடுகளை களைந்து தரம் ஊதியம் வழங்க வேண்டும். 10 முதல் 20 ஆண்டுகள் ஓட்டுனராக பணி செய்து தேர்வுநிலை, சிறப்புநிலை பெற்ற ஓட்டுநர்களுக்கு ஏற்பட்டுள்ள ஊதிய முரண்பாடுகளை களைய வேண்டும், தலைமைச் செயலக ஓட்டுநர்களுக்கு வழங்கப்படுவதைப் போன்று மாநிலம் முழுவதும் பணியாற்றும் அரசுத்துறை ஓட்டுநர்களுக்கும் அவரவர் கல்வித் தகுதிக்கு ஏற்ப பணி மாறுதலில் பதவி உயர்வு வழங்கிட வேண்டும். என வலியுறுத்தினார். மேலும் இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட 11 தீர்மானங்களை தமிழக அரசின் கவனத்திற்கு கொண்டு செல்ல உள்ளதாகவும் அவர் தெரிவித்தார். 


கோரிக்கைகள்

மேலும் அவர் தொடர்ந்து பேசுகையில், தமிழ்நாடு அரசு துறையில் ஏராளமான ஓட்டுநர் காலிப்பணியிடங்கள் உள்ளது. அதனை நிரப்பிட வலியுறுத்தி தமிழக அரசிடம் கோரிக்கை மனு அளித்துள்ளோம். அதுமட்டுமின்றி அரசு விதியின்படி 248 நாட்கள் பணிபுரிந்த தற்காலிக ஓட்டுனர் பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும், இனிவரும் காலங்களில் அரசுத்துறை ஊர்தி ஓட்டுனர்களை வேலைவாய்ப்பு பதிவு துறை மூலமாகவே காலமுறை ஊதியத்தில் பணியமர்த்திட வேண்டும். கழிவு நீக்கம் செய்யப்பட்ட வாகனங்களுக்கு பதில் மாற்று வாகனங்கள் இதுதாள் வரை கொடுக்கப்படாமல் உள்ளது. குறிப்பாக உயிர்காக்கும் துறையான மருத்துவதுறையில் ஆம்புலன்ஸ், மருத்துவர்கள் வாகனங்களை கழிவு நீக்கம் செய்யப்பட்ட நிலையில் அதற்கும் புதிய வாகனங்கள் வழங்கப்படாமல் உள்ளது. ஊரக வளர்ச்சி துறை, வருவாய் துறை உள்ளிட்ட துறைகளுக்கு தமிழக அரசு வாகனங்களை வாரி வழங்கியுள்ளது. அதுபோன்று தங்களின் கோரிக்கைகளை செவிமடுத்து மற்றத் துறைகளுக்கும் வாகனங்களை வழங்க வேண்டும், தமிழக முதல்வர் அதனை வழங்குவார் என்ற நம்பிக்கை உள்ளது என்றார்.


தீர்மானங்கள்;

1. 1-6-2009 இல் 10 மற்றும் 20 ஆண்டுகள் ஓட்டுநராக பணி செய்து தேர்வுநிலை சிறப்புநிலை பெற்ற ஓட்டுநர்களுக்கு ஏற்பட்டுள்ள ஊதிய முரண்பாட்டினை கலைந்திட வேண்டும்.

2. தலைமைச் செயலக ஓட்டுநர்களுக்கு வழங்கப்படுவது போல மாநில முழுவதும் பணியாற்றும் அரசுத்துறை ஓட்டுநர்களுக்கும் அவரவர் கல்வித் தகுதிக்கு ஏற்ப பணி மாறுதலில் பதவி உயர்வு வழங்கிட வேண்டும்.

3. தமிழக அரசின் கொள்கை முடிவான CPS ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய GPF திட்டத்தை அமல்படுத்த வேண்டும்.

4. காலியாக உள்ள ஓட்டுநர் பணியிடங்களை காலமுறை ஊதியத்தில் மட்டுமே நிரப்பிட வேண்டும்.

5. அனைத்து துறைகளிலும் 15 ஆண்டுகளுக்கு மேலாக இயக்கப்படும் ஊர்திகளுக்கு பதிலாக புதிய ஊர்திகள் வழங்கிட வேண்டும்.

6.ஊர்தி பயன்படுத்தப்படும் அனைத்து அலுவலகத்திலும் நிரந்தரமான ஓட்டுநர் பணியிடம் நிர்வாக ஒதுக்கீடு செய்திட வேண்டும்.

7. கால நேரமற்ற பணி செய்யும் ஓட்டுநர்களை முன் களப் பணியாளர்களாக அறிவிக்க வேண்டும்.

8. ஒவ்வொரு மாவட்ட ஆட்சியர் வளாகத்திலும் ஓட்டுநர்களுக்கு கழிவறை வசதியுடன் கூடிய காத்திருப்பு அறை ஒதுக்கீடு செய்து வேண்டும்.

9. அரசு முடக்கி வைத்துள்ள சரண்டர் விடுப்பு பணப்பயனை உடனடியாக பயன்பாட்டிற்கு கொண்டு வர அரசு முன்வர வேண்டும்.

10. தமிழ்நாடு அரசுத்துறை ஊர்தி ஓட்டுநர்கள் சங்கத்தில் ஏற்கனவே இருந்த நிர்வாக குழு உறுப்பினர் பதவியை மீண்டும் கொண்டு வர வேண்டும். அனைத்து பதவிகளுக்கும் தேர்தல் நடத்துவது போல மாநில பொதுச் செயலாளர் பதவியையும் தேர்தல் மூலமே தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். தற்போதுள்ள மாவட்டங்களின் எண்ணிக்கைக்கு தகுந்தாற்போல, மாநில பதவிகளை அதிகப்படுத்த வேண்டும். மாவட்ட சங்க நிர்வாகத்தினை மேம்படுத்திட மாநில ஒருங்கிணைப்பு குழு ஏற்படுத்த இப்பொதுக்குழு அனுமதிக்க வேண்டும்.

11. சங்க அலுவலக கட்டடம் இல்லாத மாவட்டங்களுக்கு, தலைமைச் சங்கத்தின் சார்பாக அந்தந்த மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கு கோரிக்கை வைத்து மாவட்ட அலுவலக கட்டடம் பெற்றுத்தர முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.

Continues below advertisement