Biggboss Tamil 5 - Episode 5


இன்று நமீதா தன் கதையைப் பேச வந்தார். இல்லையில்லை ஒட்டுமொத்த திருநர்களின் கதையையும். பார்த்த அனைவரையும் குற்றவுணர்வில் கூனிக்குறுக வைத்துவிட்டார். மனிதன் எவ்வளவு மோசமான, சிக்கலான உயிரினம் என்பதை ஒரு 20 நிமிட பேச்சில், வார்த்தைக் கண்ணாடிகளாய் வடித்துக் கொடுத்துவிட்டார்.


உடலில் மாற்றம் ஏற்பட்டு கேலிக் கிண்டலுக்கு ஆளானது முதல், உடலில் விழும் அடிகள் தொடர்ச்சியான பழக்கமாகி மறுத்துப்போனது வரை, அவர் கோர்வையாய் பேசியவை எல்லோரையும் அசைத்து, அழவைத்தது. பயம், பாதுகாப்பின்மை, பாலியல் தொல்லைகள் என தான் கடந்து வந்த அனைத்தையும், நம் கண்முன்பு நிறுத்தினார் நமீதா. மனநல காப்பகத்தில் தன்னை அடைத்து வைத்து கொடுமைப்படுத்தியதாக சொல்லிய நமீதா, காப்பகத்தில் தன்னுடன் இருந்தவர்களை மனநல பாதிப்படைந்தோர் என்கிறார். மெண்டல் அல்ல தெரியாமல் உதிர்த்த வார்த்தையைத் திருத்தி, அவர்களுக்கு மனதில் ஏதோ பிரச்சனை, அவ்வளவே என்றார். எவ்வளவு நல்ல மனங்களை, பாலினத்தைச் சுட்டிக்காட்டி குத்திக் குதறிக்கொண்டிருக்கிறோம் மொத்த சமூகமும்?



”எப்போவாச்சும் எனக்கு மேக்கப் போட்டு விட்டிருக்கியா நீயி” என்று ப்ரியங்காவைக் கேட்கிறார் தாமரைச்செல்வி. ப்ரியங்கா ஏனோதானோவென பதில் சொல்லிக்கொண்டிருந்தார். 


அடுத்த சீன் வேற லெவல். ராஜூவுக்கும், ஐய்க்கிக்கும் இமான் ஒரு டாஸ்க் வைக்கிறார். லாக் டவுன் முடிந்து செருப்புக் கடையில் சந்திக்கும் காதலர்களைப் போல நடிக்கச் சொல்கிறார்கள். “செருப்புத் திருட வந்தியா? என்கிறார் ராஜு. “ஏன் உங்களுக்கு இந்த செருப்புதான் வேணுமா?” என்கிறார் ஐய்க்கி. “செருப்பை விட முக்கியமான பொறுப்பு நீ இருக்கும்போது என்னால செருப்பைப் பத்தி சிந்திக்கமுடியல” என்கிறார் ராஜு அவ்ளோ பொறுப்பு இருக்குறவர் பருப்பு மாதிரி ஏன் வந்தீங்க இப்போ. ஏன் கால் பண்ணல” என கேட்கிறார் ஐய்க்கி. உடனே, ”பத்து பைசா இல்லம்மா, ஃபோன்ல பேலன்ஸ் இல்ல” என கலாய்த்த ராஜுவிடம், “பத்து பைசா கூட இல்லாதவனை நான் ஏன் காதலிக்கணும்” என சோலியை முடித்தார் ஐய்க்கி.


Beautiful Love track of the year. அப்படி ஒரு பெர்ஃபாமன்ஸை இருவரும் ஊதித் தள்ளினார்கள்.


அடுத்து தன் கதையைச் சொன்னார் மதுமிதா. ஒரு ரிலேஷன்ஷிப்பில் இருந்து வெளிவந்து, தற்கொலை எண்ணங்களால் உந்தப்பட்டதாகச் சொன்ன மதுமிதா, தனது பெற்றோருக்காக வாழ்வதாகவும், சாதிக்கப்போவதாகவும் முடித்தார். பவனியும் மதுமிதாவிடம் தன் கணவர் தற்கொலையால் இழந்தபின்பு, வாழ்க்கைக்கான நம்பிக்கையில்லாமல் இருக்கிறேன் என்றார். தான் எதையோ மறைப்பதாக அபினய் நினைத்ததாகச் சொன்னார் பவனி. ஆனால் அபினய் உடனே வந்து, “நான் உங்கள தெரிஞ்சுக்கதான் நினைச்சேன். கஷ்டப்படுத்த நினைக்கல” என தேற்றினார். முட்டல் மோதல்கள் எல்லாம் இன்னும் இல்லை. ஒருவரின் கதையில் இருந்து இன்னொருவர் பாடம் கற்றுக்கொண்டிருக்கிறார்கள். 


கற்றுக்கொள்வோம்.