திருபுவனை பகுதியில் ஏலச்சீட்டு நடத்தி 2 கோடி மோசடி செய்ததாக ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.


புதுச்சேரி மாநிலம் திருபுவனை அருகே உள்ள திருபுவனை பாளையம் பெருமாள் நகரை சேர்ந்த விஜயகுமார் மனைவி கனகராணி (வயது 42). இவரது மகள் பாக்கியலட்சுமி. இவர்கள் ஏலச்சீட்டு நடத்தி அப்பகுதி மக்கள் பலரிடம் பணம் வசூல் செய்ததாக கூறப்படுகிறது. அந்த வகையில் ரூ.2 கோடி வரை வசூல் செய்து விட்டு, அதனை திருப்பி கொடுக்காமல் குடும்பத்துடன் தலை மறைவாகி விட்டனர். இது குறித்து பாதிக்கப்பட்டவர்கள், திருபுவனை காவல் நிலையத்தில்  புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.


மேலும் அவர்களை பிடிக்க திருபுவனை காவல் ஆய்வாளர் ராஜகுமார் உத்தரவின்பேரில் உதவி ஆய்வாளர் ராஜசேகர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த தனிப்படை போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணையை முடுக்கி விட்டனர். இந்த நிலையில் அவா்கள் கோவை வடவள்ளி பகுதியில் வாடகைக்கு வீ்டு எடுத்து தங்கியிருப்பது போலீசாருக்கு தெரியவந்தது. இதையடுத்து தனிப்படை போலீசார் கோவை விரைந்தனர். மாறுவேடத்தில் சென்ற போலீசார் வீட்டின் அருகே கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் வீட்டில் இருப்பதை உறுதி செய்த போலீசார் அதிரடியாக நுழைந்தனர். அப்போது வீட்டில் இருந்த விஜயகுமார் (57) அவரது மனைவி கனகராணி (42), மூத்த மகள் பாக்கிய லட்சுமி (24), அவரது கணவர் தாமோதரன் (32), இளைய மகள் கார்த்திகா லட்சுமி (19) ஆகிய 5 பேரையும் கைது செய்தனர்.


பின்னர் அவர்களை திருபுவனைக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர். பின்னர் 5 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி காலாப்பட்டு சிறையில் அடைத்தனர். இருப்பினும் மோசடி செய்த பணத்தை எங்கு பதுக்கி வைத்துள்ளனர், வேறெங்கும் முதலீடு செய்துள்ளனரா என்பது குறித்து விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்துள்ளனர். ஏலச்சீட்டு நடத்தி ரூ.2 கோடி மோசடி செய்ததாக ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேரை போலீசார் கைது செய்யப்பட்ட சம்பவம் அதிர்சியை ஏற்படுத்தியுள்ளது.