புதுச்சேரி: உடனடி கடன் செயலி மூலம் கடன் பெற்ற நபரை ஆபாசமாக சித்தரித்து அவருடைய நண்பர்களுக்கு அனுப்பி அதிக பணம் கேட்டு மிரட்டல் விடுத்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


புதுச்சேரியை சேர்ந்த நபர் இன்ஸ்டாகிராமில் வந்த உடனடிக் கடன் செயலி விளம்பரத்தை பார்த்து அந்த செயலியை பதிவிறக்கம் செய்து அந்த செயலுக்கு தன்னுடைய மொபைலில் உள்ள நண்பர்கள் தொலைபேசி எண் மற்றும் புகைப்படங்களை செயலி பார்ப்பதற்கு அனுமதி கொடுத்துள்ளார். பின்பு ரூபாய் 5000 அந்த செயலி மூலம் கடன் பெற்றுள்ளார்.


இரண்டு நாட்களுக்குப் பிறகு தான் பெற்ற 5000 கடன் தொகைக்கு அந்த செயலியில் இருந்து பேசிய நபர் ரூபாய் 20000 கட்டுமாறு கூறியுள்ளார். இதனைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த அந்த நபர் தான் ஐந்தாயிரம் மட்டுமே கடன் பெற்றதாக கூறியுள்ளார். அந்த செயலில் இருந்து பேசிய நபர் ரூபாய் 20000 கட்டவில்லை என்றால் அவருடைய புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து அவருடைய நண்பர்களுக்கு அனுப்பி விடுவேன் என மிரட்டி உள்ளார்.


பயந்து போன அந்த நபர் ரூபாய் 20 ஆயிரத்தை கட்டி உள்ளார். மேலும் 10,000 கட்ட வேண்டும் என்று அவர்கள் மிரட்டி உள்ளனர். இவர் மறுக்கவே இவருடைய புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து இவருடைய நண்பர்களுக்கு வாட்ஸ் அப் மூலம் அனுப்பி மிரட்டி பணம் கேட்டு உள்ளார். இது சம்பந்தமாக அந்த நபர்  இணைய வழி குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அவர் கொடுத்த புகாரின் பேரில் விசாரணை நடைபெற்று வருகின்றது. 


இது சம்பந்தமாக இணைய வழி முதுநிலை காவல் கண்காணிப்பாளர் கலைவாணன் கூறுகையில்...


இணையதளங்களில் வரும் போலியான உடனடி கடன் பெரும் செயலி விளம்பரங்களை நம்பி அந்த செயலியை பதிவிறக்கம் செய்து கடன் பெற வேண்டாம். மேலும் அந்த செயலியை பதிவிறக்கம் செய்வதால் தங்களுடைய மொபைலில் உள்ள நண்பர்கள் தொலைபேசி எண் மற்றும் புகைப்படங்களை அவர்கள் திருடி விடுவார்கள். மேலும் அந்த புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து உங்கள் நண்பர்களுக்கு அனுப்பி விடுவேன் என்று பணம் கேட்டு மிரட்டுவார்கள். மேலும் கடந்த ஐந்து நாட்களில் இதுபோன்று 20க்கும் மேற்பட்ட புகார்கள் பெறப்பட்டு விசாரித்து வருகின்றனர் என்று பொதுமக்களுக்கு அவர் எச்சரித்துள்ளார். புகார் தெரிவிக்க: 1930 மற்றும்  www.cybercrime.gov.in