புதுச்சேரி சாரம் பகுதியை சேர்ந்தவர் தட்சணாமூர்த்தி (57). இவரது மனைவி லலிதா (எ) லதா (52). இவர்கள் திருக்காஞ்சி பகுதியில் வீடு கட்டிக்கொண்டு அங்கேயே வசித்து வந்தனர். தனியார் கம்பெனியில் செக்யூரிட்டியாக பணிபுரிந்த தட்சணாமூர்த்திக்கு சிறுநீரக கோளாறு ஏற்பட்டதால் வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்து வருகிறார். அவரது மனைவி லலிதா அருகில் உள்ள பொம்மை தயாரிக்கும் கம்பெனியில் வேலை பார்த்து வந்துள்ளார். இவர்களுக்கு ஜெயக்குமார் (35, புகழ்மணி (32) என இரு மகன்கள் உள்ளனர். இருவருக்கும் திருமணம் ஆகவில்லை. இதில் ஜெயக்குமார் அப்பகுதியில் உள்ள தனியார் கம்பெனியில் ஊழியராக பணிபுரிகிறார். புகழ்மணி தனியார் கம்பெனியில் டிரைவராக உள்ளார். இதனிடையே புகழ்மணி குடிக்கு அடிமையாகி உள்ளார். மது மட்டுமின்றி கஞ்சா, போதை ஊசி போன்ற பழக்கங்களுக்கும் அடிமையாகி, அதில் இருந்து சிகிச்சை பெற்று வந்துள்ளார்.
இதனால் அவருக்கு நரம்பு தளர்ச்சி ஏற்பட்டு, அவ்வப்போது மனநிலை பாதிக்கப்பட்ட நிலையில் இருந்துள்ளார். இந்திலையில் நேற்று இரவு ஜெயக்குமார் வேலைக்கு சென்றுவிட்டார். சுமார் 9 மணியளவில் புகழ்மணி வீட்டுக்கு வந்து தனது தாயார் லவிதாவிடம் சாப்பாடு கேட்டுள்ளார். அப்போது அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் கோபம் அடைந்த புகழ்மணி லலிதாவை சரமாரியாக தாக்கினார். இதில் அவர் நிலைகுலைந்து கீழே விழுந்தார். அப்போதும் ஆத்திரம் தீராத புகழ்மணி, தலையணையில் பாமாயிலை ஊற்றி தீ வைத்துவிட்டு வெளியே வந்துவிட்டார். இதில் தீப்பிடித்து வனிதா எரிய தொடங்கினார். அருகில் இருந்த அவரது கணவர் தட்சணாமூர்த்தி தீயை அணைக்க முயன்றார். ஆனால் அவரால் முடியவில்லை. இதில் அவரது உடலிலும் தீப்பற்றி காயம் ஏற்பட்டது. இதையடுத்து அவர் வெளியே வந்து கதறி அழுதார். இதனிடையே அருகில் உள்ள தனது அத்தை வீட்டுக்கு சென்ற புகழ்மணி, நடந்த சம்பவத்தை கூறியுள்ளார்.
இதையடுத்து அவர்களுடைய குடும்பத்தினரும், அக்கம் பக்கத்தினரும் ஓடி வந்து பார்த்தனர். தகவல் அறிந்த எஸ்பி ரவிக்குமார், இன்ஸ்பெக்டர் வேலய்யன், சப் - இன்ஸ்பெக்டர்கள் வேலு), சண்முகசத்யா ஆகியோரும் சம்பவ இடத்திற்கு வந்தனர். அப்போது லலிதா எரிந்து கருகிய நிலையில் சடலமாக கிடந்துள்ளார். தட்சிணாமூர்த்தி படுகாயம் அடைந்து உயிருக்கு போராடிக்கொண்டிருந்தார். லவிதாவின் சடலத்தை கைப்பற்றிய போலீசார் கதிர்காமம் மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். தட்சனாமூர்த்தியை அதே மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். மேலும் இதுகுறித்த புகாரின்பேரில் புகழ்மணியை போலீசார் கைது செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.