உலகம் முழுவதும் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக கொரோனா தொற்று அச்சுறுத்தி வருகிறது. இந்தியாவிலும் கொரோனா நோய் தொற்று தீவிரமாக பரவி வந்தது. கடந்த சில நாட்களாக கொரோனா நோய் தொற்று பாதிப்பு எண்ணிக்கை மீண்டும் குறைந்து வருகிறது. இதனால் பல்வேறு இடங்களில் கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கைகளில் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் கொரோனா பாதிப்பு காரணமாக ஆண்களுக்கு மலட்டுத்தன்மை ஏற்படுமா என்பது தொடர்பாக மும்பை ஐஐடி ஆய்வு ஒன்றை நடத்தியுள்ளது. அந்த ஆய்வில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த ஆய்விற்கு கொரோனா பாதிப்புக்கு உள்ளாகாத 10 ஆண்கள் மற்றும் கொரோனாவில் இருந்து மீண்ட 17 பேர் ஆகியோர் உட்படுத்தப்பட்டிருந்தனர். அவர்கள் அனைவரின் விந்தணுக்கள் பரிசோதனை செய்யப்பட்டது. அந்தப் பரிசோதனை முடிவுகளின் மூலம் கொரோனா பாதித்தவர்கள் மற்றும் பாதிக்காதவர்கள் விந்தணுக்கள் ஒப்பிடப்பட்டன.
அதன்படி கொரோனா பாதிக்கப்பட்ட நபர்களுக்கு இயல்பாக இருப்பவர்களைவிட சில முக்கிய மாறுபாடுகள் ஏற்பட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பு ஏற்பட்டவர்களின் விந்தணுக்கள் எண்ணிக்கை சற்று குறைந்திருந்தது. மேலும் அவர்களின் விந்தணுவின் தரம் மற்றும் செயல்பாடு சற்று குறைந்து காணப்பட்டுள்ளது. அதேபோல் கொரோனா பாதிப்பு உள்ளாகியிருந்தவர்களின் விந்தணுக்களில் இன பெருக்கத்திற்கு தேவையான புரோத அளவு பாதியாக குறைந்திருந்தும் தெரியவந்துள்ளது.
அத்துடன் லேசான கொரோனா தொற்று பாதிப்பு கூட ஆண்களின் விந்தணுக்களில் பாதிப்பு ஏற்படுத்தும் என்பது இந்த ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. எனினும் இந்த ஆய்வை உறுதி செய்ய மேலும் அதிக ஆண்களை பரிசோதனை செய்ய வேண்டும் என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இருப்பினும் கொரோனா தொற்று ஆண்களுக்கான குழந்தை பேறு விஷயங்களில் சில தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது இந்த ஆய்வின் மூலம் தெளிவாக தெரிகிறது என்று கூறப்படுகிறது.
மேலும் கொரோனா வைரஸ் போல் இதர வைரஸ் காய்ச்சல்கள் மற்றும் சார்ஸ் வைரஸ் தொடர்பான பாதிப்பிற்கு உள்ளானவர்களுக்கும் இந்த ஆய்வு நடத்தப்பட வேண்டும் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். ஏற்கெனவே கொரோனா பாதிப்பு மற்றும் ஆண்களின் மலட்டுத்தன்மை தொடர்பாக பல ஆய்வுகள் வெளியாகி வருகின்றன. இந்தச் சூழலில் தற்போது ஐஐடி நிறுவனத்தின் இந்தப் புதிய ஆய்வு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்