செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் பகுதியை சேர்ந்தவர் வினோத் சங்கர் (வயது 46). சித்த மருத்துவர். இவருக்கு, புதுவை சூரமங்கலத்தை சேர்ந்த வினோதன் என்பவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் அறிமுகமானார். இந்தநிலையில் கடந்த 7-ந் தேதி வினோத் சங்கருடன் வினோதன் செல்போனில் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது வினோதன் தங்கள் ஊரில் ஒருவரிடம் சக்தி வாய்ந்த கலசம் மற்றும் பச்சை மூலிகை கல் உள்ளதாக தெரிவித்தார்.


இதனை உண்மை என்று நம்பிய வினோத் சங்கர் அந்த கலசத்தை வாங்க முடிவு செய்தார். இதற்காக தனது அறக்கட்டளையில் வேலை செய்யும் தீனதயாளன், சுரேஷ் குமார், ஐசக் பெஞ்சமின், பன்னீர் செல்வம் ஆகியோருடன் ஒரு காரில் புதுவை மரப்பாலம் நாகமுத்து மாரியம்மன் கோவில் அருகில் காத்திருந்தார். அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த வினோதன் அவர்களை வேல்ராம்பேட் சரஸ்வதி கார்டன் பகுதியில் உள்ள ஒரு வீட்டிற்கு அழைத்துச்சென்றார்.




அங்கு வைத்து வினோதன் தனது கூட்டாளிகளான அதிகைவாணன், கல்வி, பரூக், மகேஷ், ரஞ்சித், விமல், பாண்டா, பிரபு ஆகியோர் கழுத்தில் கத்தி, அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களை வைத்து மோதிரம், வெள்ளி காப்பு, செல்போன், ஏ.டி.எம். கார்டு மற்றும் ரூ.24 ஆயிரம் ரொக்கத்தை பறித்தனர். மேலும் அவர்களை விடுவிக்க ரூ.2 லட்சம் கேட்டு மிரட்டல் விடுத்தனர். தொடர்ந்து வினோத் சங்கர், முத்துக்குமார் என்பவருக்கு போன் செய்து ரூ.2 லட்சத்தை கொண்டு வரும்படி கூறினர். அந்த பணத்தை வாங்கி கொண்டு 5 பேரையும் விடுவித்தனர். ஆனால் அவர்கள் வந்த காரை விடுவிக்க மேலும் ரூ.5 லட்சம் வேண்டும் என கூறினர்.




மேலும் ஏ.டி.எம். கார்டு மூலமும் ரூ.1 லட்சத்து 53 ஆயிரத்தை எடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து வினோத் சங்கர் முதலியார்பேட்டை காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் காவல் ஆய்வாளர் இனியன் மற்றும் போலீசார் வினோதன் உள்பட 9 பேர் மீது வழக்குப்பதிவு செய்து தேடி வந்தனர். இந்த வழக்கில் 6 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து தங்க நகை, 60,000 ரூபாய் பணம் மற்றும் காரை பறிமுதல் செய்தனர். பின்னர் நீதிமன்றத்தில் ஆச்சார்படுத்தி காலாப்பட்டு மத்திய சிறையில் அடைத்தனர். தலைமறைவாக உள்ள 3 பேரையும் வலைவீசி தேடி வருகிறார்கள்.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண