புதுச்சேரி: புதுச்சேரியில் வெவ்வேறு சம்பவங்களில் ரூ.1 கோடி வரை மோசடி செய்த நைஜிரியா நாட்டை சேர்ந்தவர் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். புதுச்சேரி நெல்லித்தோப்பு பெரியார் நகரை சேர்ந்தவர் தினேஷ். இவரது மனைவி ஜனனி. இவர் சென்னை விமான நிறுவனத்தில் வேலை வேண்டி கடந்த 2021-ல் விண்ணப்பித்து இருந்தார். அப்போது அவரது செல்போனில் பேசிய மர்ம நபர் விமான நிலையத்தில் வேலையில் சேர நேர்முகத் தேர்வுக்காக ரூபாய் 1,800 செலுத்த வேண்டும் என்று கேட்டுள்ளார். அதனை உண்மை என்று நம்பிய ஜனனி அந்த பணத்தை அனுப்பி வைத்துள்ளார்.




இதேபோல் பல்வேறு தவணைகளாக ஜனனி ரூ.14 லட்சத்து 48 ஆயிரத்து 680 கொடுத்துள்ளார். ஆனால் அவர் கூறியது போல சென்னை விமான நிலையத்தில் ஜனனிக்கு வேலை வாங்கி கொடுக்கவில்லை. இதனால் சந்தேகமடைந்த அவர் பணத்தை திருப்பி கேட்டபோது ஜனனியிடம் பேசுவதை தவிர்த்து வந்துள்ளார். இதனால் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த ஜனனி புதுச்சேரி சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் மனோஜ் மற்றும் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது டெல்லியை சேர்ந்த விஜய்குமார் குப்தா என்பவர் மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. உடனே தனிப்படை போலீசார் டெல்லி சென்று அங்கு தங்கம் விசாரி பகுதியில் பதுங்கிய இருந்த விஜய் குமார் குப்தாவை கைது செய்தனர். அவரிடம் இருந்து ரூ.4 லட்சத்து 70 ஆயிரத்தை பறிமுதல் செய்தனர்.


வைத்திக்குப்பம் பிள்ளையார் கோவில் வீதியை சேர்ந்தவர் அன்மோல் ஜெயின். இவரிடம் கடந்த 2019-ம் ஆண்டு பேஸ்புக் மூலம் பழகியவர் தான் அமெரிக்காவில் இருந்து பேசுவதாக கூறியுள்ளார். அதன்பின் அவர்கள் செல்போனில் பேச தொடங்கினர். அப்போது அந்த மர்ம நபர் தன்னை அங்குள்ள குறிப்பிட்ட வங்கியின் மேலாளர் என்றும் தெரிவித்துள்ளார். அந்த வங்கியில் உள்ள ஒருவரின் கணக்கில் 78 லட்சம் பணம் டெபாசிட் செய்யப்பட்டுள்ளதாகவும், அதனை செலுத்தியவர் தற்போது உயிரோடு இல்லை என்றும் கூறியுள்ளார். அந்த பணத்தை அன்மோலின் வங்கி கணக்கிற்கு மாற்றி தருவதாக ஆசை வார்த்தை கூறியுள்ளார்.




இதனை நம்பிய அன்மோல்ஜெயின் தனது வங்கி கணக்கில இருந்து பல்வேறு தவணைகளாக ரூ.41 லட்சத்து 81 ஆயிரத்து 246 அனுப்பினார். அதன்பிறகு அந்த செல்போன் எண் சுவிட்ச்ஆப் ஆகியிருந்தது. அப்போதுதான் மோசடி செய்யப்பட்டதை அறிந்தார். இதுகுறித்து சைபர் கிரைம் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து அன்மோல் ஜெயினிடம் மோசடி செய்த மணிப்பூரை சேர்ந்த தூணோஜம் ரொனால் சிங் (26) என்பவரை கைது செய்தனர்.  நைஜீரியாவை சேர்ந்தவர் புதுவை சுய்ப்ரேன் வீதியை சேர்ந்தவர் சுனைனா நரங்.


இவர் திருமணம் செய்து கொள்வதற்காக வெளிநாட்டு திருமண தகவல் மையம் ஒன்றில் பதிவு செய்திருந்தார். அப்போது இவரை தொடர்பு கொண்டு பேசியவர் தான் கனடா நாட்டில் டாக்டராக பணிபுரிவதாக கூறினார். பின்னர் அவர்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ள விரும்பினர். இந்த நிலையில் அந்த நபர் கனடாவில் மருத்துவமனை கட்ட பணம் கேட்டுள்ளார். இதனை நம்பி சுனைனா நரங் 54 லட்சத்தை அனுப்பி வைத்தார். அதன்பின் அவர் தனது செல்போனை சுவிட்ச்ஆப் செய்தார். இதனால் சந்தேகம் அடைந்த சுனைனா நரங் சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து நைஜீரியாவை சேர்ந்த இமானுவேல் அனிடேபே (44) என்பவரை கைது செய்தனர். பின்னர் அவர்கள் 3 பேரையும் இன்று புதுச்சேரி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி காலாப்பட்டு மத்திய சிறையில் அடைத்தனர்.