திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் அடுத்த வீரளூர் பகுதியில் பல்வேறு சமூதாய மக்கள் வசித்து வருகின்றனர். இதில் குறிப்பாக வன்னியர்கள் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் வசித்து வருகின்றனர். மேலும் இந்த கிராமத்தில்  அருந்ததி இனத்தினர் 500 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். பல்வேறு இனத்திற்கு தனித்தனியாக சுடுகாடுகளும் உள்ளது. அருந்ததியருக்கு என்று தனி சுடுகாடும், சுடுகாட்டுப்பாதையும் இருந்தது. ஆனால், இந்த சுடுகாட்டுப் பாதை பராமரிப்பின்றியும், புதர்கள் மண்டியும் இருந்ததால் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது.  எனவே தங்களுக்கும் மயான பாதைக்கு செல்ல பொது வழி வேண்டும் என மாவட்ட நிர்வாகத்திடம் அருந்ததி  மக்கள்  பல முறை கோரிக்கை வைத்து இருந்தனர்.


 




 


 அதனைத்தொடர்ந்து கடந்த 11ஆம் தேதி அருந்ததி வகுப்பை சேர்ந்த ஒருவர் உயிரிழந்துள்ளார். அனைத்து தரப்பு மக்களும் பயன்படுத்தும் பொது வழியில் இறந்தவரின் சடலத்தைக் கொண்டு சென்று அடக்கம் செய்தனர். இது சம்பதமாக ஊர் பொதுமக்கள் யாரும் பெரிய அளவில் எதிர்ப்பு தெரிவிக்கவில்லையாம் 


14 தேதி அருந்ததியர் வகுப்பை  சேர்ந்த அமுதா என்பவர் உடல் நலக்குறைவால்  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு கடந்த 15ஆம் தேதி இறந்தனர். இந்நிலையில் இறந்த  உடலை மருத்துவமனையில் இருந்து அனைத்து தரப்பினரும் பயன்படுத்தும் பொது வழியாக கொண்டு வந்து அதே வழியாக மயானத்திற்கு கொண்டு சென்று அடக்கம் செய்யப் போவதாக  அருந்ததியர் இனத்தைச் சேர்ந்த  பொது மக்கள் கூறியுள்ளனர்.


 




 


இதனால்  திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியருக்கு முருகேஷ்க்கு இரு சமூகத்திற்கு இடையே மோதல் ஏற்படும் சூழ்நிலை உருவாகும் நிலை உள்ளதாக ரகசிய தகவல் வந்துள்ளது. இதனால் மாவட்ட ஆட்சியர்  உத்தரவின் பேரில் ஆரணி கோட்டாட்சியர் கவிதா , போளூர் துணைக் காவல் கண்காணிப்பாளர் அறிவழகன் தலைமையிலான காவல்துறையினர் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் வீரளூர் கிராமத்திற்கு வருகை தந்தனர். 


 


 




 


அப்போது அருந்ததிய மக்களின் மயான பாதைகள் குறித்து ஆய்வு செய்ய கோட்டாட்சியர் மற்றும் காவல்துறையினர் சென்ற பொழுது திடீரென 300க்கும் மேற்பட்ட ஊர் பொது மக்கள் ஒன்று சேர்ந்து கோட்டாட்சியர் மற்றும் காவல்துறையினரை தடுத்து நிறுத்தி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். சற்று நேரத்தில் யாரும் எதிர்பார்க்காத நிலையில் இரு சமூகத்தினருக்கும் இடையே அங்கேயே கைகலப்பு ஏற்பட்டு கலவரமாக மாறியது.


ஆத்திரம் அடைந்த ஊர் பொது மக்கள் ஒருசேர சென்று அருந்ததியர் பகுதிக்குள் நுழைந்து தாக்குதல் நடத்தியபோது ஏராளமான இரு சக்கர வாகனங்கள் , ஆட்டோ, வேன் போன்ற வண்டிகள் பலத்த சேதமாகின. மேலும் பத்துக்கும் மேற்பட்ட வீடுகளை அடித்து நொறுக்கியுள்ளனர்.


 




 


கலவரத்தை கட்டுப்படுத்தும் விதமாக திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பவன் குமார் ரெட்டி மற்றும் வேலூர் சரக டிஐஜி ஆனி விஜயா மற்றும் திருவண்ணாமலை, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் உள்ளிட்ட 4 மாவட்டங்களைச் சேர்ந்த 800 க்கும் மேற்பட்ட காவல்துறையினர் இரவோடு இரவாக வீரளூர் கிராமத்தில் குவிக்கப்பட்டனர். வீரளூர் கிராமத்திலுள்ள அனைத்து முக்கிய சாலைகள் மற்றும் பொதுமக்கள் கூடும் இடங்கள் அனைத்தும் காவல்துறை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.


இதனை தொடர்ந்து (17.01.2022) அன்று காலை 10 மணி அளவில் டிஐஜி ஆனி விஜயா தலைமையில் திருவண்ணாமலை நாடாளுமன்ற உறுப்பினர் சி என் அண்ணாதுரை, கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் பெ.சு.தி. சரவணன் மற்றும் கோட்டாட்சியர் கவிதா உள்ளிட்டவர்கள் இரு சமூகத்தினரிடையே  சமாதான பேச்சுவார்த்தை நடைபெற்றது.


 




 


இதனைத் தொடர்ந்து பிற்பகல் 3 மணி அளவில் அரசு மருத்துவமனையில் இருந்து அமுதாவின் சடலத்தை எடுத்து காவல்துறையினர் பாதுகாப்புடன் அவரது வீட்டில் இறுதி சடங்குகள் செய்து பின்னர் மீண்டும் அதே பாதை வழியாக மயானத்திற்கு கொண்டு சென்று அடக்கம் செய்தனர்.


இதனைத் தொடர்ந்து வேலூர் சரக டிஐஜி ஆனி விஜயா கூறுகையில்


 இரு சமூகங்களுக்கு இடையே ஏற்பட்ட இந்த மோதலை சமாதானமாக பேசி முடிவுக்கு கொண்டு வந்துள்ளதாகவும், அருந்ததிய மக்கள்  மயான பாதையை 15 நாட்களுக்குள் சரிசெய்து தருவதாக உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ளதாகவும், தவறு செய்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக உரிய விசாரணை நடத்தி பாதிக்கப்பட்ட அருந்ததியர் இன மக்களுக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் உரிய நிவாரண உதவிகள் செய்து தரப்படும் என ஆரணி கோட்டாட்சியர் கவிதா உறுதியளித்தார். 


காவல்துறையினர் வட்டாரத்தில் பேசுகையில் வீரளூர் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் முத்துராமன் கொடுத்த புகாரின் அடிப்படையில் கலவரத்தில் ஈடுபட்டு 250 நபர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்படுள்ளது. இதில் 10 பேரை பிடித்து விசாரணை செய்து வருகின்றனர் போலீசார்.