மதுரை மாவட்டம் சேடப்பட்டி காவல் நிலையம் எல்கைக்கு உட்பட்ட பகுதியில் கடந்த ஏப்ரல் 2-ஆம் தேதி காரில் 25 கிலோ கஞ்சாவை பதுக்கி கடத்தி வந்த இருவர் தப்பியோடி தலைமறைவாக உள்ள நிலையில், வனப்பேச்சி என்பவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.  அதேபோல அல்லிக்குண்டம் பகுதியில் கடந்த மாதம் 3-ஆம் தேதி தோட்டத்தில் கஞ்சாவை பதுக்கி வைத்திருந்த பாலமுருகன் என்பவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.



இந்த வழக்கில் தொடர்புடைய போதுராஜா என்பவர் 144 கிலோ கஞ்சா கடத்தல் வழக்கில் நாகப்பட்டினம் சிறையில் உள்ளார். மேலும் வழக்கில் தொடர்புடைய காரிகாளை என்பவர் தலைமறைவாக உள்ளார். கஞ்சா கடத்தல் மூலமாக குற்றவாளிகள் ஈட்டிய பணம் , சொத்துக்கள், உடைமைகளை பறிமுதல் செய்வதற்கான சட்டத்தை பயன்படுத்தி அவர்களது சொத்துகளை முடக்கும் வகையில் கஞ்சா பதுக்கலில் ஈடுபட்டவர்கள் மற்றும் அவரது உறவினர்களின் வீடுகளிலும் தனிப்படை காவல்துறை சோதனை செய்தனர்.



 

இதனை தொடர்ந்து கஞ்சா பதுக்கலில் ஈடுபட்ட குற்றவாளிகளான வனப்பேச்சிக்கு சொந்தமான 30 லட்ச ரூபாய் மதிப்புடைய 3 அடுக்கு மாடி வீடு ஒன்றும், கஞ்சா பதுக்கல் வழக்கில்  தலைமறைவாக உள்ள காரிக்காளை என்பவருக்கு சொந்தமான 28 லட்சத்து 71 ஆயிரம் ரூபாய் மதிப்புடைய கான்கீரிட் வீடு உள்ளிட்ட சொத்துக்களை முடக்கி மதுரை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பாஸ்கரன் உத்தரவிட்டுள்ளார்.  இதேபோன்று கஞ்சா கடத்தலில் தொடர்புடையவர்களுடைய கஞ்சா வியாபாரிகளை கண்டறிந்து அவர்களின் சொத்துக்களை முடக்குவதற்காக தனிப்படை அமைத்து கண்காணித்து வருவதாகவும் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பாஸ்கரன் தெரிவித்துள்ளார்.

 



மதுரை மாவட்டத்தில் கஞ்சா கடத்தலில் ஈடுபடுவோர், மீதும் கடுமையான நடவடிக்கைகள் எடுத்து சிறையில் அடைக்கப்படுவார்கள் எனவும், தொடர்ச்சியாக கஞ்சா விற்பனையில. ஈடுபடுபவர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டு குற்றவாளிகள் மற்றும் அவரது உறவினர்கள் கஞ்சா தொழில் மூலம் வாங்கிய  சொத்துக்கள் மற்றும் வங்கி கணக்குகள் அனைத்தும் சட்டப்படி முடக்கம் செய்யப்படும் எனவும்,  மதுரை மாவட்டத்தில் ஒரு வருடத்தில் மட்டும் 50 சிறிய கஞ்சா விற்பனை வழக்குகளும், 100 கிலோவுக்கு மேல் 6 வழக்குகளும் பதியப்பட்டு உள்ளது. ஒரு வருடத்தில் கஞ்சா விற்ற 10 பேர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது என பேசினார்.