இந்தியில் தேசிய விருது பெற்ற ‛ஆர்ட்டிக்கல் 15’ படத்தின் ரீமேக் தான் நெஞ்சுக்கு நீதி. கொலை செய்யப்பட்டு தற்கொலையாக மாற்றப்படும் இரு பெண்களின் மரணம் தான் படத்தின் கரு. அதை தமிழக அரசியலுக்கு ஏற்றபடி கலவை செய்து, கருணாநிதியின் நெஞ்சுக்கு நீதி டைட்டிலோடு, உதயநிதி நடித்து வெளியாகியிருக்கிறது நெஞ்சுக்கு நீதி.


படம் தொடங்கியதிலிருந்து முடியும் வரை, அம்பேக்கார்-பெரியார் சிலைகள், போட்டோக்களுடன்  அவர்களின் வரிகள் தான் டயலாக்காக வலம் வருகிறது. ஒருதரப்பினர் சுமக்கும் வலிகளை, வரி வரியாக விவரித்திருக்கிறார்கள். கோவை மாவட்டத்தில் தொடங்கி, பொள்ளாச்சியில் ஆரம்பிக்கும் கதை. 




ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த மூன்று பெண்கள் மாயமாகிறார்கள். இருவர் தூக்கில் தொங்கவிடப்படுகிறார்கள். ஒரு பெண் , என்ன ஆனார் என தெரியவில்லை. அதை சாதாரண பெட்டி கேஸ் போல, அந்த வழக்கை கையாளும் காவலர்களுக்கு மத்தியில், புதிதாக அங்கு பொறுப்பேற்கும் ஏஎஸ்பி., உதயநிதி, உணர்வோடு அதை விசாரிக்கிறார். தூக்கிலிடப்பட்ட பெண்களுக்கு நியாயம் கிடைத்ததா? மாயமான பெண் கிடைத்தாரா? என்பது தான், நெஞ்சுக்கு நீதி. 


இன்ஸ்பெக்டராக வரும் சுரேஷ் சக்கரவர்த்தியை, சுந்தரம் ஐயர் என, அப்பட்டமாக ஜாதிவாரி வில்லனாக சித்தரித்து, அவர் சார்ந்த சமூகத்திற்கு எதிரான வசனங்களையும், அதே போல பாதிக்கப்பட்ட மற்றொரு தரப்புக்கு ஆதரவான வசனங்களையும் அடுக்கடுக்காக வைத்து நகர்கிறது கதை. ஜாதி... ஜாதி.. ஜாதி... போதாக்குறைக்கு , சமூக நீதி, அப்புறம் பெரியார், அம்பேத்கர் என அவர்களை நம்பியே படம் நகர்கிறது. உண்மையில் அது பேசப்பட வேண்டிய ஒன்று தான். ஆனால், அதை அரசியல் ரீதியாக கையாண்டிருக்கிறார்களோ என்கிற சந்தேகமும் எழுகிறது. 


கோட்டாவில் டாக்டரான பெண்ணுக்கு அனிதா என்று கதாபாத்திரம் பெயர் வைத்து, அனிதாவுக்கு நான் துணையாக இருப்பேன் என்று உதயநிதி வசனம் பேசும் போது, திமுக பிரச்சாரங்கள் தான் நினைவுக்கு வருகிறது. பல நேரங்களில் இது போன்ற உணர்வு வருவதை தவிர்க்க முடியவில்லை. சமூகத்தில் நடக்காத ஒன்றை இவர்கள் கூறவில்லை. ஆனால், அது மட்டுமே நடப்பதாக கூறியிருப்பது தான் கொஞ்சம் ஓவர் டோஸ். மனிதன் படத்திற்குப் பின் உதயநிதிக்கு நல்ல ஸ்கோப் கிடைக்கும் படம்; சினிமாவிலும் சரி, அரசியலிலும் சரி. இந்திக்கு எதிரான வசனங்கள், கடந்த கால ஆட்சி, அமைச்சரின் மச்சான் என தேவைப்படும் இடத்தில் எல்லாம், உதயநிதிக்கான வசனத்தை வைத்ததில் ஜெயித்திருக்கிறார் இயக்குனர் அருண்குமார் காமராஜ். 




போலீஸ் மிடுக்கு கொஞ்சமும் குறையாமல், நன்கு தேறியிருக்கிறார் உதயநிதி. முந்தைய கால அவரது படங்களில் இருந்த பல குறைகள் நீங்கியிருக்கின்றன. ஆரி, புரட்சியாளராக சிறிது நேரம் வந்தாலும், குமரன் என்கிற பெயரை, படத்தில் பதிவு செய்திருக்கிறார். படத்தை பெரிதாக சுமந்ததில், சுரேஷ் சக்கரவர்த்திக்கு பெரும் பங்கு உண்டு. அதே அளவு பங்கு , இசையமைப்பாளர் திபு நினன் தாமஸிற்கு உண்டு. படத்தின் கதைக்குள் நம்மை அழைத்து செல்வது, அந்த பின்னணி தான். படம் முழுக்கவே விளையாடியிருக்கிறார் திபு. தினேஷ் கிருஷ்ணாவின் ஒளிப்பதிவு, கண் கொள்ளா காட்சிகளையும், கண்ணால் காண முடியாத காட்சிகளையும் அப்படியே காட்டுகிறது. 



அரசியல்வாதிகள் பார்க்கும் ஜாதியையும், ஜாதியை வைத்து அரசியல் செய்து பிழைப்பவர்களையும் சாடியிருக்கிறார்கள்; அதற்காகவே உதயநிதியை பாராட்டலாம். எந்த சமரசமும் இல்லாமல், துணிந்து ஒரு படத்தை கொடுத்திருக்கிறார்கள். விமர்சனங்கள் வரத்தான் செய்யும்; கதையில் உதயநிதி இருக்கும் போது, அதை சமாளிக்க மாட்டார்களா என்ன? படத்திற்கும், கதைக்கும் கவசமே உதயநிதி தான். திமுகவின் அடுத்த அரசியல் பயணத்திற்கும், திமுகவின் இமேஜ்ஜிற்கும் இந்த படம் உதவலாம். நெஞ்சுக்கு நீதி... ‛பன்ச்’க்கு உதயநிதி!