"நான் கோயம்பேடு போலீஸ்"

 

செங்கல்பட்டு (Chengalpattu News): செங்கல்பட்டு மாவட்டம், காட்டாங்குளத்தூர் அடுத்துள்ள பொத்தேரி பகுதியில், பிரபல தனியார் கல்லூரி செயல்பட்டு வருகிறது. சென்னை புறநகர் பகுதியில் அமைந்துள்ள மிக முக்கிய கல்லூரியில் ஒன்றாக கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் ,  கல்லூரிக்கு காக்கி பேண்ட், ஷூ அணிந்து வந்த நபர் மர்ம நபர் ஒருவர், கல்லூரி வரவேற்பாளரிடம், 'நான் கோயம்பேடு காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணியாற்றி வருகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.  தொடர்ந்து பேசிய அந்த நபர், தனக்கு தெரிந்த ஒருவருக்கு, ஒரு எம்.டெக் சீட் வேண்டும் என்றும், ஸ்காலர்ஷிப் உடன் படிக்க ஏற்பாடு செய்து தர வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார். சம்பந்தப்பட்ட நபர் வரவேற்பாளரிடம் பேசிய விதம் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. சந்தேகத்தை ஏற்படுத்தவே, கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த நபர்களிடம் வரவேற்பாளரிடம், இது குறித்து தெரிவித்துள்ளார்.

 

போலி ஐடி கார்டு 

 

இதனை அடுத்து கல்லூரி ஊழியர்கள் அவரிடம் அடையாள அட்டையை கேட்டுள்ளனர். அந்த நபர்  உதவி ஆய்வாளர் அடையாள அட்டையை காண்பித்துள்ளார். அதில் குளறுபடி இருந்ததால் சந்தேகமடைந்த ஊழியர்கள் சம்பந்தப்பட்ட நபரிடம் விசாரணை மேற்கொண்டு வந்தனர். வரவேற்பாளர் அங்கிருந்து ஊழியரில் உதவியுடன்,  மற்றொருபுறம் மறைமலைநகர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மறைமலைநகர் போலீசார்,
  நபரை பிடித்து, அவரது அடையாள அட்டையை வாங்கி சோதித்ததில் அது போலி என தெரியவந்தது. பின்னர் மறைமலைநகர் போலீஸார் அவரை காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தினர். 

 

இதே பாணியில் பல இடங்களில்

 

காவல்துறையினர் நடத்திய விசாரணையில் அவர் தருமபுரி மாவட்டம் துறிஞ்சிப்பட்டி கிராமத்தை சேர்ந்த அப்துல் முஜீத் என்பது தெரியவந்தது. டிப்ளமோ படித்த அப்துல்முகீத் கடந்த ஆண்டு உதவி ஆய்வாளர் தேர்வு எழுதி தோல்வியடைந்த நிலையில் தனது உறவினர்கள் மற்றும் ஊர் மக்களிடம், தான் காவலர் தேர்வில் தேர்ச்சி பெற்று, தற்போது சென்னை கோயம்பேடு காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணியாற்றி வருவதாக கூறி ஏமாற்றி வந்துள்ளார். போலீஸ் உடையில் உதவி ஆய்வாளர் போன்று வளம் வந்த அப்துல் பலரை ஏமாற்றி் மோசடியில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. 

 

பல்வேறு பிரிவின் கீழ் வழக்குப்பதிவு

 

இதையடுத்து போலீஸார் அப்துல்முஜீத் மீது மோசடி, மிரட்டல், போலி ஆவணங்கள் தயாரித்தல் உள்ளிட்ட பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்ததுடன் அவரிடம் இருந்து போலி அடையாள அட்டை உள்ளிட்ட ஆவணங்களை பறிமுதல் செய்தனர். மேலும் கைதான போலி உதவி ஆய்வாளர் அப்துல்முஜீத் இதுபோன்று வேறு ஏதேனும் மோசடியில் ஈடுபட்டுள்ளாரா  என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.