சென்னை தண்டையார்பேட்டையை சேர்ந்த ஹரி கிருஷ்ணன் (35) என்பவர் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். கடந்த ஆண்டு ஜூன் மாதம் 3 நாட்கள் பரோலில் சென்ற அவர் தலைமறைவானார். சிறைக்கு வந்த அவரை வார்டன் ராமகிருஷ்ணன் என்பவர் இருசக்கர வாகனத்தில் ஏற்றி சென்றது தெரியவந்தது. இது தொடர்பாக சென்னை பீர்க்கங்கரனை காவல்துறையினர் வழக்குபதிவு செய்து தேடி வந்தனர். இந்த நிலையில் 15 மாதங்களுக்குப் பிறகு திருச்செந்தூரில் வைத்து தனிப்படை காவல்துறையினர் கைதி ஹரி கிருஷ்ணனை கைது செய்தனர்.


பின்னர் அவர் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். அதே நேரத்தில் கைதியிடம் சிறையில் அமைச்சுபணியாளர்களும், வார்டன்களும் பணம் கேட்டு டார்ச்சர் செய்தது தெரியவந்தது. இதுதொடர்பாக அதிகாரிகளுக்கு வாய்ஸ் மெசேஜ் ஒன்றை கைதி ஹரி கிருஷ்ணன் அனுப்பியிருந்தார். இதையடுத்து நான்கு பேருக்கும் மெமோ அனுப்பப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. இந்த நிலையில் சேலம் சிறையில் உள்ள கைதி ஹரி கிருஷ்ணனை கோவை சிறைத்துறை டிஐஜி சண்முக சுந்தரம் நேரில் சந்தித்து விசாரணை நடத்தினர். வாய்ஸ் மெசேஜ் அனுப்பியது உண்மைதானா? அதில் இருக்கும் தகவல்கள் உண்மையா என விசாரணை நடத்தினர். அப்போது தன்னிடம் பணம் கேட்டு டார்ச்சர் செய்தது அனைத்தும் உண்மை என கைதி தெரிவித்துள்ளார். 



சிறையில் இருந்து தப்பி செல்லும் போது கூட நான்கு பேருக்கு பணம் கொடுத்ததாக அவர் தெரிவித்துள்ளார். தப்பி சென்று அன்று சேலம் மாநகர் அன்னதானப்பட்டியில் உள்ள ரவுடி இடம் 15,000 பணத்தை வாங்கிக்கொண்டு, ராசிபுரத்தில் உள்ள ரவுடியின் வீட்டில் தங்கியுள்ளார். அதன் பின்னர் விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் கடலுக்கு சென்று தற்கொலை செய்வதற்காக கையை அறுத்துக் கொண்டு, கடலில் குதித்துள்ளார். அப்பொழுது அங்கு வந்த இரண்டு பேர் அவரை காப்பாற்றி அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அங்கு குணமான நிலையில் யாருக்கும் தெரியாமல் மேட்டுப்பாளையம் வந்து கூலி வேலைக்கு சென்று வந்ததாக கூறியுள்ளார். பரோலில் சென்றது குறித்து விசாரணை நடத்தியதில் கைதி ஹரிகிருஷ்ணன் வாழ பிடிக்காமல் தற்கொலை செய்து கொள்வதற்காக தான் பரோலில் சென்றேன் என்று கூறியுள்ளார். மேலும் பணம் கொடுத்தது இரண்டு சிறை வார்டன்கள், இரண்டு அமைச்சுப் பணியாளர்கள் என்பதும் ஹரி கிருஷ்ணன் கூறிய நிலையில் அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இதுதொடர்பான ஆவணங்கள் சேகரிக்கும் பணியில் சேலம் மத்திய சிறை நிர்வாகம் ஈடுபட்டுள்ளது. லஞ்சம் வாங்கியது உண்மை என்று தெரியவந்தால் நடவடிக்கை பாயும் என்று அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மன உளைச்சலோ, தற்கொலை எண்ணமோ மேலிடும்போது உரிய ஆலோசனை பெற்றால் புதிய வாழ்க்கை அவர்களுக்காக காத்துக்கொண்டிருக்கிறது. அதற்காகவே சினேகா போன்ற தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் சேவை ஆற்றி வருகின்றன. அவர்களை தொடர்பு கொண்டு இலவசமாக ஆலோசனை பெறலாம்.


சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம்,


எண்; 11, பார்க் வியூவ் சாலை, ஆர்.ஏ. புரம்,


சென்னை - 600 028.


தொலைபேசி எண் - (+91 44 2464 0050, +91 44 2464 0060)