தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக தொடர்ந்து ஏ.டி.எம்மை உடைத்து பணத்தை திருடிச் செல்வதும், மேலும் நூதனமுறையில் ஏடிஎம்மில் கொள்ளை அடிப்பதும், தொடர்கதையாகி வருகிறது. குறிப்பாக நேற்று தமிழகம் முழுவதும் உள்ள எஸ்பிஐ ஏ.டி.எம்மில் 40 லட்சத்திற்கும் மேல் பணம் கொள்ளை போயுள்ளது தெரியவந்து, கொள்ளையர்களை தேடும் பணியில் காவல்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்த சம்பவம் முடிவதற்கு முன்னரே திருவாரூரில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கிக்கு சொந்தமான ஏடிஎம்மில் 2 லட்சத்து 6 ஆயிரம் திருட்டு போயுள்ளது. இது குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருவாரூர் அருகே விளமல் பகுதியில் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் கிளை செயல்பட்டு வருகிறது. அதனருகே ஏடிஎம் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் ஏடிஎம்மில் பணம் நிரப்புவதற்காக கடந்த 14 ஆம் தேதி வங்கி அதிகாரிகள் பணம் எடுத்துச் சென்ற பொழுது ஏடிஎம் மிஷினில் 2 லட்சத்து 6 ஆயிரம் ரூபாய் பணம் குறைந்துள்ளது, இதனைக் கண்டு வங்கி அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மேலும் ஏடிஎம் மெஷினை உடைக்காமல் பணம் கொள்ளை போயுள்ளது. அதனால் யார் கொள்ளையடித்து இருப்பார்கள் என வங்கி அதிகாரிகளும் ஊழியர்களும் குழப்பத்தில் இருந்துள்ளனர். இதுகுறித்து திருவாரூர் தாலுகா காவல் துறையினருக்கு வங்கியின் காசாளர் சேவியர் ராஜன் புகார் அளித்துள்ளார்.
உடனடியாக வங்கிக்கு திருவாரூர் தாலுகா காவல் துறையினர் நேரடியாகச் சென்று விசாரணை மேற்கொண்டனர். அப்பொழுது வங்கியில் உள்ள சிசிடிவி காட்சிகளை பார்த்த பொழுது கடந்த 12ஆம் தேதி வங்கியில் ஒப்பந்த ஊழியராக பணியாற்றி வரும் திருவாரூர் அருகே சாமந்தம்பாளையம் பகுதியைச் சேர்ந்த இளையராஜா என்பவர் காலை 8 மணிக்கு வங்கியின் மேலாளர் அறைக்கு சென்று அங்கு இருந்த ஏடிஎம் சாவி மற்றும் ஏடிஎம் பாஸ்வேர்டை எடுத்துக்கொண்டு ஏடிஎம் திறந்து 2 லட்சத்து 6 ஆயிரம் ரூபாய் பணத்தை கொள்ளையடித்துச் சென்றுள்ளது தெரியவந்தது. அதனையடுத்து காவல்துறையினர் இளையராஜாவை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.
காவல்துறையின் விசாரணையில் இளையராஜா கூறியதாவது.. ”வங்கியின் மேலாளர் வினோத் குமார் சிங் வட மாநிலத்தைச் சேர்ந்தவர், அவர் அன்று விடுமுறையில் இருந்ததால் அதை நான் தெரிந்து கொண்டு அவரின் அறைக்குச் சென்று ஏடிஎம் சாவியையும் பாஸ்வேர்டையும் எடுத்துக்கொண்டு சென்று பணத்தை திருடிச்சென்றேன் என வாக்குமூலம் அளித்துள்ளார். அதனை அடுத்து திருவாரூர் தாலுகா காவல்துறையினர் அவர் மீது வழக்குப்பதிவு செய்து நீதிபதி முன் ஆஜர்படுத்தப்பட்டு இளையராஜா சிறையில் அடைக்கப்பட்டார்.
அதேநேரத்தில் ஏடிஎம் பாஸ்வேர்டை வங்கியின் மேலாளர் எதன் அடிப்படையில் அவர் அறையில் எழுதி வைத்திருந்தாரா? அல்லது இந்த கொள்ளையில் வங்கி ஊழியர்களுக்கு தொடர்பு இருக்கிறதா என்ற கோணத்தில் காவல்துறையினர் தங்களுடைய விசாரணையை மேலும் தீவிரப்படுத்தி உள்ளனர். தொடர்ந்து தமிழகம் முழுவதும் ஏடிஎம்மில் கொள்ளை சம்பவங்கள் நடைபெற்று வரும் நிலையில் திருவாரூரில் வங்கி ஊழியர் ஏடிஎம் திறந்து பணத்தை திருடிச்சென்று இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.