கூடுவாஞ்சேரி அனைத்து மகளிர் காவல் நிலையம்


சென்னை: செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் காவல் ஆணையரகத்திற்கு உட்பட்ட, கூடுவாஞ்சேரி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் காவலர்கள் மீது தொடர்ந்து பல்வேறு புகார்கள் எழுந்த வண்ணம் உள்ளன. இந்த நிலையில் கூடுவாஞ்சேரி அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளராக மகிதா, என்பவர் பணியாற்றி வருகிறார். இவர் புகார் தர வரும் நபர்களிடம் வழக்குப் பதிவு செய்யாமல், சமரசம் செய்து வைத்து கணிசமான தொகை பார்த்து வருவதாகவும் அப்போது குற்றச்சாட்டு எழுந்தது.


கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு கூடுவாஞ்சேரி அனைத்து மகளிர் காவல் நிலைய, பெண் காவலர்கள் சிலர் ஒரகடத்தில் உள்ள ஜூஸ் கடைக்கு சென்று, ஊழியரை மிரட்டி ஓசியில் ஜூஸ் கேட்ட சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இது தொடர்பாக சம்பந்தப்பட்ட காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


17 வயது சிறுமிக்கு கருகலைப்பு


இந்தநிலையில், தற்போது ஆய்வாளராக பணியாற்றி வரும், மகிதா  மைதா கடந்த சில வாரங்களுக்கு முன்பு தான் ஆய்வாளராக பதவி ஏற்று கொண்டார். இந்த நிலையில் காட்டாங்குளத்தூர் பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமிக்கு, மருத்துவர் ஒருவர் கருகலைப்பு செய்ததாக அவருக்கு புகார் வந்ததாக கூறப்படுகிறது. அந்தப் புகாரை வைத்துக் கொண்டு , அரசு மருத்துவரிடம் 10 லட்சம் ரூபாய் கொடுக்க வேண்டும் என மிரட்டி வந்ததாகவும் தெரிகிறது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட மருத்துவர், அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் தன்னை மிரட்டுவதாக தாம்பரம் ஆணையரகத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரை பெற்றுக்கொண்ட தாம்பரம் ஆணையர் அமல்ராஜ் விசாரணை மேற்கொண்டு இதன் அடிப்படையில் தற்பொழுது ஆய்வாளர் மகிதா சஸ்பெண்ட் செய்யப்பட்டிருந்தார்.


இந்த நிலையில் மறைமலைநகர் காவல் நிலையத்தில் மருத்துவர் பராசக்தி, தனக்கு ஆய்வாளர் மகிதா மற்றும் வழக்கறிஞர் பன்னீர்செல்வம் ஆகியோர் , தன்னை மிரட்டி 10 லட்சம் ரூபாய் வரை கேட்பதாக புகார் அளித்தார். இதனை தொடர்ந்து மறைமலை நகர் காவல் நிலையத்தில் ஆய்வாளர் மகிதா மற்றும் வழக்கறிஞர் பன்னீர்செல்வம் மீது இரண்டு பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.


முன் ஜாமின் மனு தள்ளுபடி


தாங்கள் கைது செய்யப்படுவோம் என அச்சமடைந்த மகிதா மற்றும் பன்னீர்செல்வம் ஆகியோர் செங்கல்பட்டு நீதிமன்றத்தில் முன்ஜாமின் கேட்டு மனு அளித்திருந்தனர். இந்த நிலையில் இது தொடர்பாக வழக்க செங்கல்பட்டு நீதிமன்றத்தின் நேற்று விசாரணைக்கு வந்த பொழுது, முன் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து மாவட்ட முதன்மை நீதிபதி உத்தரவிட்டார்.