நான் முதல்வன் திட்டத்தின்கீழ் அரசு பள்ளிகளில் 10ஆம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் தேர்ச்சி பெறாத, தேர்விற்கு வருகை புரியாத மற்றும் துணைத் தேர்விற்கு விண்ணப்பிக்காத மாணவர்கள் உயர்கல்வி தொடர வேண்டும். அதற்காகத் தொழிற்கல்வி சார்ந்த படிப்புகளை அரசின் தொழிற்பயிற்சி நிலையங்கள் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரிகளில் சேர்ந்து படிக்க வழிகாட்ட வேண்டும் என்று ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி சார்பில் தெரிவிக்கப்பட்டுளது.
ஏற்கெனவே இதுகுறித்து தமிழக முதல்வர், மாணவர்களின் பெற்றோருக்கு கடிதம் அனுப்பியுள்ளார். முன்னதாக இதுகுறித்து மாவட்ட ஒருங்கிணைப்பாளர்களுக்கான திட்டமிடல் கூட்டமானது இணைய வழியில் 13.07.2023 அன்று நடைபெற்றது. அதன்படி,
எமிஸ் லாகின்
12ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் தேர்ச்சி பெறாத தேர்விற்கு வருகை புரியாத மற்றும் துணைத் தேர்விற்கு விண்ணப்பிக்காத 39,000 மாணவர்களின் தகவல்களை EMIS தளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்தல் வேண்டும். அத்தகவல்கள் ஏற்கனவே பள்ளித் தலைமையாசிரியர் எமிஸ் லாகின் மற்றும் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களின் எமிஸ் லாகின் -ல் வழங்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு மாணவரிடமும் தொழிற்கல்வி சார்ந்து என்ன படிக்க விரும்புகின்றார்கள் என்று கேட்டறிந்து அரசின் தொழில்நுட்பக் கல்லூரிகளில் சேர்ந்து படிக்க வழிகாட்ட வேண்டும்.
மாணவர்கள் பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கு இணையவழி விண்ணப்பிக்க ஆகஸ்ட் 10ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அத்தேதிக்குள் 10ஆம் வகுப்பு தேர்ச்சி அடிப்படையில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பித்த மாணவர்களின் விவரங்களை EMIS தளத்தில் தலைமையாசிரியர்களின் வாயிலாக பதிவு செய்ய வேண்டும்,
சிறப்பு பள்ளி மேலாண்மைக் குழுக் கூட்டத்தில் பங்கேற்ற மாணவர்களின் விவரங்கள் மற்றும் தொழிற்கல்வி பயில விண்ணப்பித்துள்ள மாணவர்களின் விவரங்களைப் பள்ளி வாரியாகத் தொகுத்து சார்ந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரின் ஒப்புதலுக்கு அனுப்ப வேண்டும்.
மாணவர்களின் சேர்க்கையை உறுதிசெய்க
மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரின் ஒப்புதலுக்குப் பின், விண்ணப்பித்துள்ள சம்மந்தப்பட்ட மாணவர்கள் தொழிற்கல்வி நிலையங்களில் சேர்ந்துள்ளனரா என்பதை உறுதிசெய்து அதன் விவரங்களைத் தொகுத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரின் ஒப்புதலோடு மாநில அலுவலகத்திற்கு அனுப்ப சார்ந்த மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் அறிவறுத்தப்படுகிறார்கள். அத்தகவல்களை தலைமை ஆசிரியர்களால் எமிஸ் லாகின் -ல் பதிவு செய்யப்பட்டுள்ளதா என்பதனை உறுதி செய்து கொள்ளல் வேண்டும்.
அவ்வாறு விருப்பம் தெரிவித்த மாணவர்களின் சான்றிதழ்கள் மற்றும் உரிய விண்ணப்பங்களை வட்டார வள மைய ஆசிரியர் பயிற்றுநர்கள் மூலம் பெற்று ஒருங்கிணைத்து வட்டார வள மைய மேற்பார்வையாளர்களின் ஒத்துழைப்போடு சார்ந்த மாலட்டத்தின் அருகமை ஐடிஐ கல்லூரி முதல்வர்களிடம் நேரில் சென்று ஒப்படைத்து மாணவர்களின் சேர்க்கையினை மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் உறுதிசெய்தல் வேண்டும்.
விண்ணப்பித்த மாணவர்களின் விவரங்களை EMIS தளத்தில் தலைமையாசிரியர்களின் வாயிலாக பதிவு செய்தல் வேண்டும்.
ஏதேனும் மாணவரோ, பெற்றோரோ அருகமை ஐடிஐ கல்லூரி குறித்து நேரில் கண்டறிய விரும்பினால் அதற்கான வழிகாட்டுதல்களை வழங்க வேண்டும் என்று ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.