புதுச்சேரியில் பிரெஞ்ச் குடியுரிமை பெற்ற முன்னாள் ராணுவ வீரரிடம் மறுமண ஆசைக் காட்டி ரூ.12 லட்சம் வரை  மோசடி செய்த வாலிபரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.


புதுச்சேரி மோந்தெர் ஷியே வீதியை சேர்ந்தவர் 75 வயதான வேணு செட்டியார் பிரான்சிஸ். இவர் பிரெஞ்ச் குடியுரிமை பெற்றவர். மேலும், பிரான்ஸ் ராணுவத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தநிலையில், கடந்தாண்டு இவரது மனைவி உடல் நல குறைவு காரணமாக இறந்துவிட்டார். இவர்களது குழந்தைகளும் பிரான்ஸில் வசிப்பதால், தன்னை கவனித்துக் கொள்ள தகுதியான ஒருவரை தேடி வந்துள்ளார். 


இந்த சூழலில் இவரது வீட்டின் முதல்தளத்தில் செய்தியாளர் என்று 29 வயதான ரவிசங்கர் வாடகைக்கு குடியிருந்துள்ளார். ரவிசங்கருக்கு வேணுவின் மறுமண ஆசை குறித்து தெரியவந்த நிலையில், ரவி சங்கர் தன்னுடன் பணிபுரிவதாக 35 வயது பெண் ஒருவரது புகைப்படத்தை அவரிடம் காண்பித்து செல்போன் நம்பரையும் கொடுத்துள்ளார்.


பின்னர் அந்த செல்போனின் வாட்ஸ் அப் நம்பரில் இருந்து வேணுவுக்கு குறுந்தகவல் ஒன்று வந்துள்ளது. அதன்பிறகு இருவரும் தகவல்களை பரிமாறினர். இருவரும் மறுமணம் செய்ய முடிவு செய்த நிலையில், சாட்டிங்கில் ஈடுபட்ட அப்பெண் திருமண செலவுக்கு ரூ.9 லட்சம் வரை தேவைப்படுவதாக கூறினாராம்.


அதை நம்பிய வேணு கூகுள் பே மூலமாகவும், வங்கிக் கணக்கு வாயிலாகவும் கடந்த மார்ச் சங்கர் முதல் ஆகஸ்ட் வரை ரூ.9 லட்சம் அனுப்பியுள்ளார். மேலும் திருமணத்துக்காக வேணு வாங்கி வைத்திருந்த தங்க செயின், தாலிசரடு (ரூ.3 லட் சம் மதிப்பு ) ஆகியவற்றை ரவிசங்கரிடம் கொடுத்து அனுப்புமாறு செல்போனில் அப்பெண் தகவல் அனுப்ப, அவரும் நகைகளை கொடுத்தும் அனுப்பியுள்ளார்.


மேலும், அப்பெண் குலதெய்வம் கோயிலுக்கு குடும்பத்தினர், நண்பர்களுடன் சென்று வழிபாடு களை நடத்தி முடித்தபின் நகைகளை திருப்பி தருவதாக செல்போனில் தகவல் அளித்துள்ளார்.


இதனிடையே முதல் மாடியில் இருந்த ரவிசங்கர் தலைமறைவானார். இதையடுத்து அவரது செல்போனை தொடர்பு கொண்டபோது சுவிட்ச்-ஆப் என வந்துள்ளது. அதேபோல், சாட்டிங்கில் ஈடுபட்ட செல்போன் நம்பரை தொடர்பு கொண்டபோது, அதுவும் தொடர்பில் இல்லை என வந்துள்ளதை கண்டு, வேணு அதிர்ச்சியடைந்தார்.


இதனால் சந்தேகமடைந்த முன்னாள் ராணுவ வீரர் வேணு தன்னுடன் சாட்டிங்கில் பேசியது பெண் தானா? என்ற சந்தேகத்தில் ஒதியஞ்சாலை காவல்நிலையத்தில் நேற்று முன்தினம் புகார் அளித்தார். அதன்பேரில், ரவிசங்கர் உள்பட 3 பேர் மீது போலீசார் வழக்குபதிந்து தேடி வருகின்றனர்.மேலும், காவல்துறையினர் தொடர்ந்து நடத்திய விசாரணையில் ரவிசங்கர் ஸ்ரீரங்கம் பகுதியைச் சேர்ந்தவர் என்பதும், இவர் ஏற்கனவே மோசடி வழக்குகளில் சிக்கி சிறை சென்றவர் என்பதும் தெரியவந்தது.