பாலியல் புகார் மீது நடவடிக்கை எடுக்காமல் பாதிக்கப்பட்ட சிறுமியை தரக்குறைவாக பேசிய காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க கோரி பாதிக்கப்பட்டவர்கள் தரப்பில் சேலம்  மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளிக்கப்பட்டது. காவல் துறையினர் இந்த குற்றசாட்டிற்கு மறுப்பு தெரிவித்துள்ளனர்.



சேலம் மாவட்டத்தில் உள்ள வீராணத்தை சேர்ந்த 16 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற நபர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பெற்றோர் வீராணம் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தனர். இந்தப் புகாரின் பேரில், அம்மாபேட்டை அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதனிடையே அவமானம் தாங்க முடியாமல் சம்பந்தப்பட்ட நபர் சரண் தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்ற நிலையில்  தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது. இந்த நிலையில்  விசாரணைக்காக அழைத்து வரப்பட்ட  பாதிக்கப்பட்ட சிறுமி  மற்றும் பெற்றோர்களை காவல்துறையினர்  தரக்குறைவாக பேசியதாக தாக்கியதாக  குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது தொடர்பாக பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் தரப்பில் சேலம் மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளிக்கப்பட்டது. முன்னதாக புகார் அளிக்க வந்த நபர்களை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் காவல்துறையினர் தடுத்து நிறுத்தியதால் சிறிது நேரம் வாக்குவாதம் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து ஒரு சிலர் மட்டும் மனு கொடுக்க செல்ல அனுமதிக்கப்பட்டனர்.



இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட காவல் ஆய்வாளரிடம் கேட்டபோது, இந்த குற்றச்சாட்டை முழுமையாக மறுத்துள்ளார். சட்ட விதிமுறைகளின்படி பாதிக்கப்பட்ட சிறுமி ஒரு சில நாட்கள் காப்பகத்தில் தங்க வைக்கப் பட வேண்டும் என்பதற்கு மறுப்பு தெரிவித்து அவர்களது குடும்பத்தினரை காவல்துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக  விளக்கம் அளித்தார். பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்தினர் புகார் அளித்த உடனேயே வழக்கு பதிவு செய்யப்பட்டதாகவும், குற்றம் சாட்டப்பட்ட நபர் தற்கொலைக்கு முயன்று மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதால் இதுவரை கைது செய்யப்படவில்லை என்றும் காவல் ஆய்வாளர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுகுறித்து பாதிக்கப்பட்டவர்கள் கூறுகையில், தமிழக முதல்வர் பெண்களுக்கு எதிராக செயல்படுவார்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கு பாதிக்கப்பட்டவர்கள் முன்வர வேண்டும் என்று கேட்டுக் கொண்டதன் பேரில் தான் காவல் நிலையத்திற்கு புகார் அளிக்க சென்றோம். எங்களை காப்பாற்ற வேண்டிய காவலர்கள் தங்களது 16 வயது குழந்தையிடம் தங்களது முன்னாள் தரக்குறைவாக பேசினார். எங்களது குழந்தையின் பாதுகாப்புக்காக விடுதியில் தூங்குவதற்கு அனுமதிக்கவில்லை. அதற்காக சிறுமியின் பெற்றோர்கள் மீது தாக்குதல் நடத்திய காவலர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும். இதுபோன்ற நிலை வேறு யாருக்கும் வந்துவிடக்கூடாது என்று கூறினார். 


எந்த ஒரு பிரச்னைக்கு தற்கொலை தீர்வாகாது. மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதில் இருந்து மீண்டு மாற்றம் ஏற்பட கீழ்காணும் சேவை எண்களுக்கு தொடர்பு கொண்டு பேசவும். மாநில உதவிமையம் : 104 சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050