அதிமுக அவைத்தலைவராக இருந்த மதுசூதனன் அண்மையில் இறந்ததை அடுத்து அந்தப் பதவி காலியாகவே இருந்து வந்தது. அந்தப் பொறுப்புக்கு பொன்னையன், அன்வர்ராஜா, தமிழ்மகன் உசேன் எனப் பல பெயர்கள் கட்சி வட்டாரத்தினரிடையே அடிபட்டு வந்தது.மேலும் முக்கியப் பொறுப்பு என்பதால் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளரா அல்லது எடப்பாடி பழனிசாமி தரப்பினரா? யார் நியமிக்கப்படுவார்கள் என்கிற கேள்வி இருந்துவந்தது.கொங்கு மண்டலத்தைச் சேராத சிறுபான்மையினர் ஒருவர் இந்தப் பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்படும் நிலையில் அந்தக் கட்சியின் சிறுபான்மை பலமும் கூடும் எனக் கணிக்கப்பட்டது. இதையடுத்து தமிழ்மகன் உசேன் அவைத்தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.தமிழ்மகன் உசேன் தற்காலிக அவைத்தலைவராக இருப்பார் என்றும் கூறப்படுகிறது.


யார் இந்த தமிழ்மகன் உசேன்! 


மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் அபிமானிகள் பட்டியலில் அடிக்கடி இடம்பெறும் பெயர் தமிழ்மகன் உசேன்.68 ஆண்டுகளாக அரசியல் பணியில் இருப்பவர் தற்போதுதான் முன்னணிக்கு வந்துள்ளார் என்றாலும் இவர் குறித்த சுவாரசியத் தகவல்கள் சில இருக்கின்றன. 


எம்.ஜி.ஆர் தனிக்கட்சி தொடங்க வேண்டும் என முச்சட்டையாக நின்றவர்களில் தமிழ்மகன் உசேனும் ஒருவர். திராவிட முன்னேற்றக் கழக அரசு ஆட்சிக்காலத்தில் அரசுப் பேருந்து ஓட்டுநராக இருந்தவர் தமிழ்மகன். நாகர்கோவிலில் இருந்து திருச்சிக்கு பேருந்தை ஓட்டி வந்த சமயத்தில்தான் 1972 அக்டோபர் 10ல் எம்.ஜி.ஆர் திமுகவில் இருந்து வெளியேற்றப்பட்ட செய்தி வருகிறது. மதுரை அருகே பேருந்தை ஓட்டி வந்த தமிழ்மகன் அந்தச் செய்தியைக் கேட்ட பிறகு இப்படிப்பட்ட ஆட்சியில் தான் அரசுப்பணியில் இருக்க விரும்பவில்லை என எழுதிக் கொடுத்துவிட்டு தனது ஓட்டுநர் பதவியை ராஜினாமா செய்தார் தமிழ்மகன். அதையடுத்து எம்.ஜி.ஆர் தனிக்கட்சி தொடங்க வேண்டும் என்கிற தீர்மானத்தில் பலரிடம் கையெழுத்து பெற்று சென்னைக்கு வண்டி ஏறியுள்ளார். எம்.ஜி.ஆரை அவரது ராமாபுரம் இல்லத்தில் சந்தித்த உசேன் அவரிடம் அந்தத் தீர்மானத்தைக் கொடுக்கவும். உசேன் உட்பட பல முன்னிலையில் சத்யா ஸ்டுடியோஸில் கட்சி தொடங்குவது தொடர்பான கூட்டம் நடக்கிறது. அதிமுகவும் உதயமானது. கட்சி தொடங்குவதற்காகக் கையெழுத்திட்டவர்களில் முதன்மையானவர் தமிழ்மகன் உசேன். அதுமட்டுமல்லாமல் எம்.ஜி.ஆர். நியமித்த மாவட்ட அமைப்பாளர்களில் உசேனும் ஒருவர். 


தான் அவைத்தலைவர் பொறுப்புக்கு மிகவும் தகுதியானவர் எனவும் தமிழ்மகன் உசேன் தனது ஆதரவாளர்களிடம் தொடர்ச்சியாகக் கூறி வந்தார். 


இந்த நிலையில்தான் அன்வர்ராஜா கட்சியிலிருந்து நீக்கப்பட்ட  விவகாரத்தில் அதிமுக சிறுபான்மையினருக்கு எதிராகச் செயல்படுவதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. தற்போது உசேன் அவைத்தலைவராக நியமிக்கப்பட்டிருக்கும் நிலையில் அதற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. ஓ.பன்னீர்செல்வம் அவைத்தலைவராக முன்வைத்தவர்கள் பட்டியலில் தமிழ்மகன் உசேன் பெயரும் இருந்தது. இவர் எடப்பாடி பழனிச்சாமிக்கும் நெருக்கமானவர் என்னும் நிலையில் இருதரப்புக்கும் இடையிலான பாலமாக இவர் இருப்பார் என அதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.