கடந்த 18-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை நாளிதழ் ஒன்றில் விளம்பரம் வெளியானது. அதில், முட்டையின் விலை ரூபாய் 2.24 பைசா மட்டுமே என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த விளம்பரம் தொடர்பாக அந்த நிறுவனத்தின் உரிமையாளரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டதில், அந்த நிறுவனத்தார் முறையான ஆவணங்கள் ஏதுமின்றி நிறுவனத்தை நடத்த முயன்றதையடுத்து காவல்துறையினர் அவருக்கு அறிவுரை கூறி பொதுமக்கள் செலுத்திய பணத்தையும் திருப்பி அளிக்க ஏற்பாடு செய்தனர்.
இதுதொடர்பாக, காவல்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில், கடந்த 18-ஆம் தேதி ஒரு நாளிதழில் வெளியான விளம்பர பகுதிகளில் ரபோல் ரிட்டையல்ஸ் எக்மார்ட் என்ற நிறுவனத்தின் பெயரில் வினோதமான விளம்பரம் வெளியிடப்பட்டது. அதில், ஒரு முட்டையின் விலை ரூபாய் 2.24 மட்டுமே என்றும், அதன்படி திட்டம் 1ல் ரூபாய் 700 முதலீடு செய்தால் ஒவ்வொரு வாரமும் 6 முட்டைகள் தருவதாகவும், திட்டம்2ல் ரூபாய் 1,400 முதலீடு செய்தால் ஒவ்வொரு வாரமும் 12 முட்டைகள் தருவதாகவும், திட்டம் 3ல் ரூபாய் 2,800 முதலீடு செய்தால் ஒவ்வொரு வாரமும் 24 முட்டைகள் தருவதாகவும் அதன்படி ஒரு வருடத்திற்கு வீட்டிற்கே வந்து முட்டைகள் தருவதாகவும் விளம்பரம் செய்திருந்தார்கள்.
மேற்படி, விளம்பரத்தின் பேரில் ரபோல் ரிடெய்ல்ஸ் எக்மார்ட் என்ற நிறுவனத்தின் நடவடிக்கைகள் காவல்துறையின் சந்தேகத்திற்கு உள்ளானதாலும் பொதுமக்களின் நலன் கருதி, அந்நிறுவனத்திற்கு அவர்களின் நடவடிக்கைக்கு விளக்கம் அளிக்க உரிய முறையில் அழைப்பாணை கொடுத்து கடந்த 20-ந் தேதி வரவழைக்கப்பட்டது. அழைப்பாணையை பெற்றுக்கொண்ட அந்த நிறுவனத்தின் நிறுவனர் சிவம் நரேந்திரன் கிண்டியில் உள்ள பொருளாதார குற்றப்பிரிவு அலுவலகத்திற்கு மேற்படி விளம்ரம் குறித்து விளக்கம் அளித்தார்.
அப்போது, அந்த நிறுவனம் பொதுமக்களிடம் இருந்து முன்பணம் பெறுவதற்கு எந்தவிதமான உரிமங்கள் ஏதும் பெற்றிருக்கவில்லை என தெரிவித்தார். மேலும், அந்த நிறுவனத்தை நடத்துவதற்கு முறையான ஆவணங்கள் ஏதும் அவர் அளிக்கவில்லை. மேலும், அவரிடம் விசாரணை மேற்கொண்டதில் அவர் தங்கள் நிறுவனத்தை மேற்கொண்டு நடத்தவில்லை என்றும், எங்கள் விளம்பரத்தைப் பார்த்து பணம் கட்டிய பொதுமக்களுக்கு மீண்டும் அதே ஆன்லைன் மூலமாக பணத்தை திருப்பி தந்துவிடுவதாகவும் மேற்கொண்டு ரபோல் ரிடெயில்ஸ் எக்மார்ட் இணையதளத்தை முடக்கிவிடுவதாகவும் தெரிவித்தார். அதன்படியே, பொதுமக்களிடம் பெற்ற பணத்தை திரும்ப செலுத்தியும், மேற்கொண்டு மக்கள் யாரும் பணம் செலுத்த முடியாதவாறு ரபோல் ரிடெய்ல் எக்மார்ட் இணையவழி தொடர்பினை முடக்கியும் வைத்துள்ளார்.
பொதுமக்கள் இதுபோன்று வரும் கவர்ச்சிகரமான, குறைந்த முதலீட்டில் அதிக லாபம் தருவோம் என்ற விளம்பரங்களை பார்த்தால், தீர விசாரித்து முதலீடு செய்யுமாறும், இதுபோன்ற போலியான விளம்பரங்களை நம்பி பணம் கட்டி ஏமாற வேண்டாம் என காவல்துறையின் சார்பாக கேட்டுக்கொள்ளப்படுகிறது