அ.தி.மு.க.வின் முக்கிய நிர்வாகிகளில் ஒருவர் பாண்டியராஜன். இவர், ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது மாநில பள்ளிக்கல்வித்துறை அமைச்சராக இவர் பொறுப்பு வகித்தார். பின்னர், எடப்பாடி பழனிசாமி அமைச்சரவையில் தமிழ் மற்றும் தொல்லியல் துறை அமைச்சராக பொறுப்பு வகித்தார். இவர், நடைபெற்று முடிந்த சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் ஆவடி தொகுதியில் போட்டியிட்டார். ஆனால், அவரை எதிர்த்து போட்டியிட்ட தி.மு.க. வேட்பாளர் நாசரிடம் படுதோல்வியை சந்தித்தார்.


முன்னாள் அமைச்சர் பாண்டியராஜன் அரசியலுக்கு வரும் முன்னர் தொழில் அதிபராக வலம் வந்தவர். அவருக்கு சொந்தமாக மாஃபா என்ற தொழில்நிறுவனம் உள்ளது. இதன் காரணமாகவே, அவரை மாபா பாண்டியராஜன் என்று அழைக்கின்றனர். மாபா நிறுவனத்திற்கு சொந்தமாக நான்கு நிறுவனங்கள் உள்ளது. சி.ஐ.இ.எல். எச்.ஆர்., தகவல் தொழில்நுட்பம் சார்ந்த இன்டெக்ரம் டெக்னாலஜி, மாபா கல்வி மற்றும் மாபா ஸ்ட்ரேட்டஜி என்ற நான்கு நிறுவனங்கள் இயங்கி வருகிறது.




இந்த நிலையில், சி.ஐ.இ.எல். எச்.ஆர். மற்றும் மாபா ஸ்ட்ரேட்டஜி ஆகிய நிறுவனங்களின் தலைவராக முன்னாள் அமைச்சர் பாண்டியராஜனை நியமிப்பதற்கு அந்த நிறுவனத்தின் பங்குதாரர்கள் ஒப்புதல் அளித்துள்ளனர். அப்போது, முன்னாள் அமைச்சர் பாண்டியராஜன் பேசியதாவது, கடந்த 5 ஆண்டுகளில் நான் 100 சதவீதம் அரசியல் பணிகளிலும், அரசுப்பணிகளிலும் ஈடுபட்டேன். அதற்கு முந்தைய ஆண்டுகளில் எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.வாக பணியாற்றினேன். அதனால், வணிகத்தில் 50 சதவீதம் மட்டுமே ஈடுபாட்டுடன் செயல்பட்டேன். தற்போது 100 சதவீதம் வணிகத்தில் ஈடுபட உள்ளேன். நான் இப்போது ஊடகங்களில் அரசியல்வாதியாக தோன்ற முடியாது. இருப்பினும், அ.தி.மு.க.வின் உறுப்பினராக நான் எப்போதும் தொடர்வேன் என்றார்.




முன்னாள் அமைச்சர் பாண்டியராஜன் 1992ம் ஆண்டு தனது மனைவி லதா பாண்டிராஜனுடன் இணைந்து மாபா நிறுவனத்தை தொடங்கினார். பின்னர், தொழிலில் பல்வேறு ஏற்ற, இறக்கங்களுடன் சிறந்த தொழிலதிபராக வலம் வந்தார். பின்னர், பாண்டியராஜன் தன்னை பா.ஜ.க.வில் இணைத்துக்கொண்டார். பின்னர், நடிகரும், தே.மு.தி.க. தலைவருமான விஜயகாந்த் தே.மு.தி.க.வை தொடங்கிய பிறகு தே.மு.தி.க.வில் இணைந்தார்.


பின்னர், விஜயகாந்த் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது தே.மு.தி.க. எம்.எல்.ஏ.வாக விருதுநகர் சட்டமன்ற தொகுதியில் இருந்து தேர்வானார். பின்னர், தே.மு.தி.க.வில் இருந்து விலகி அ.தி.மு.க.வில் இணைந்தார். ஜெயலலிதா தலைமையிலான அமைச்சரவையில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சராக பொறுப்பு வகித்தார். பின்னர், ஓ.பன்னீர்செல்வம் விலகி மீண்டும் இணைந்த பிறகு தமிழ் மற்றும் தொல்லியல் துறை அமைச்சராக பொறுப்பு வகித்தார்.