திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அருகே 99 புதுப்பாளையம் நேரடி நெல் கொள்முதல் நிலையம் உள்ளது. இதன் எதிரே இருக்கும் பாறையின் ஓரமாக உள்ள மறைவான இடத்தில் 50 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் முகத்தில் பிளாஸ்டிக் கவர் கட்டியபடி இறந்து கிடந்தார்.
இதைப்பார்த்த அப்பகுதி மக்கள் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் கலசபாக்கம் காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு நேரில் சென்று இறந்து கிடந்த நபரின் கழுத்தில் கட்டி இருந்த பாலிதீன் கவரை எடுத்தபோது, கழுத்தில் கயிற்றால் இறுக்கப்பட்ட நிலையில் உடல் காணப்பட்டது. மேலும் அவர் இறந்து கிடந்த இடத்தில் திருப்பதி லட்டு-4, பாக்கெட் டைரி மற்றும் 200 ரூபாய் இருந்துள்ளது. ஆனால் அவர் யார் என்பது தெரியவில்லை.
உடலில் எந்த காயமும் இன்றி மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அதனைத் தொடர்ந்து காவல்துறையினர் விசாரணை துவங்கினர். அப்போது இறந்த நபரின் சட்டையின் காலரில் காணப்பட்ட டைலர் லேபிளில் இருந்த தொலைபேசி எண்ணை காவல்துறையினர் தொடர்பு கொண்டு விசாரணை நடத்தினர். பின்னர் காவல்துறையினர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த விசாரணையில் இறந்தவர் பெங்களூர் கருணா ஹள்ளி பகுதியை சேர்ந்த ராஜமாணிக்கம் மகன் பாபு வயது (50), என்பதும், பெங்களூருவில் சமையல் தொழிலாளியாக வேலை செய்து வந்ததும் தெரிய வந்தது.மேலும் இவருக்கு திருமணமாகி ஒரு மகள், ஒரு மகன் உள்ளனர். சமீபத்தில் தான் அவரது மகளை மும்பையில் உள்ள ஒருவருக்கு திருமணம் செய்து கொடுத்துள்ளார். மகள் குடும்ப பிரச்சினை காரணமாக தற்கொலை முயற்சி செய்து தற்போது கோமா நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளதாக கூறப்படுகிறது.
இதில் மனம் உடைந்த பாபு பெங்களூருவில் இருந்து பாபு திருப்பதிக்கு சென்று சாமி தரிசனம் செய்துள்ளார். பின்னர் போளூர் அருகே உள்ள குலதெய்வ கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்துவிட்டு வரும் வழியில் 99 புதுப்பாளையம் கிராமத்தின் அருகே சாலை ஓரம் முகத்தில் பிளாஸ்டிக் கவர் கட்டியவாறு மர்மமான முறையில் இறந்து கிடந்தது தெரிய வந்தது. இது சம்பந்தமாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து குடும்ப பிரச்சனைக்காக பாபு தற்கொலை செய்து கொண்டாரா அல்லது முன் விரோதம் காரணமாக கொலை செய்யப்பட்டாரா என்ற கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மன உளைச்சலோ, தற்கொலை எண்ணமோ மேலிடும்போது உரிய ஆலோசனை பெற்றால் புதிய வாழ்க்கை அவர்களுக்காக காத்துக்கொண்டிருக்கிறது. அதற்காகவே சினேகா போன்ற தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் சேவை ஆற்றி வருகின்றன. அவர்களை தொடர்பு கொண்டு இலவசமாக ஆலோசனை பெறலாம்.சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம், எண்; 11, பார்க் வியூவ் சாலை, ஆர்.ஏ. புரம், சென்னை - 600 028. தொலைபேசி எண் - (+91 44 2464 0050, +91 44 2464 0060