ஆபாச வார்த்தைகள் மூலம் ஆன்லைன் ஸ்ட்ரிமிங் பப்ஜி விளையாடி பணம் சேர்த்து வந்த யூடியூப்பர் மதன் மீது புகார் குவிந்து வருகிறது. அவர் மீது வழக்கு பதிவு செய்த மத்திய குற்றப்பிரிவு போலீசார், அவரை தேடி வருகின்றனர். அவரது சொந்த ஊர் சேலம் என்பதும், தற்போது சென்னை பெருங்களத்தூரில் தங்கி வருவதும் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், அவரது தந்தை மாணிக்கம் மற்றும் மனைவி கிருத்திகா ஆகியோருடன் நடத்திய விசாரணையில், மதனின் யூடியூப் சேனல்களுக்கு கிருத்திகா நிர்வாக அதிகாரியாக இருந்தது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து கிருத்திகாவை கைது செய்த போலீசார், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.
இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த சென்னை காவல்துறை ஆணையர், ‛‛மதனை தேடும் பணி தீவிரமாக நடந்து வருவதாகவும்... விரைவில் மதன் கைது செய்யப்படுவார் ,’’ என்றும் கூறியிருந்தார். இந்நிலையில், மதனின் வங்கி கணக்குகள் மற்றும் முதலீடுகளை மத்திய குற்றப்பிரிவு போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். மாதம் 7 லட்சம் ரூபாய்க்கு மேல் யூடியூப் மூலம் வருமானம் பார்த்து வந்த மதன், அதிக அளவில் பணம் ஈட்டியுள்ளது தெரியவந்துள்ளது. யூடியூபர் பப்ஜி மதன் தனது யூடியூப் சேனல் மூலம் சம்பாதித்த பணத்தை பங்கு வர்த்தகத்திலும், பிட்காயின் எனப்படும் கிரிப்டோகரென்ஸியிலும் பெரிய அளவில் முதலீடு செய்துள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. எனவே அது குறித்து விரிவான விசாரணை நடந்து வருகிறது.
அதுமட்டுமின்றி யூடியூபர் மதனின் பப்ஜி ஆன்லைன் விளையாட்டில் பங்கேற்றவர்கள் பெரும்பாலானோர் தொழிலதிபர்களின் மகன்கள் மற்றும் வெளி நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பதும் தெரியவந்துள்ளது. மேலும் சிறுமிகள் சிலரும் இதில் பங்கேற்றுள்ளனர். மதன் மீது போக்சோ சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுப்பதற்கான முகாந்திரங்கள் இருப்பதால், அதற்கான ஆதாரங்களை மத்திய குற்றப்பிரிவு போலீசார் சேகரித்து வருகின்றனர். ஏற்கனவே மதனின் மனைவி கைது செய்யப்பட்ட நிலையில் அவரது தந்தையிடம் மத்திய குற்றப்பிரிவு போலீசார் இரண்டாவது நாளாக இன்றும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மதனின் முழு நடவடிக்கைகளையும் போலீசார் சேகரித்து வருகின்றனர்.
முன் ஜாமின் கேட்டு மனுத்தாக்கல் செய்துள்ளதாக தகவல் வெளியான நிலையில், விரைவில் மதன் சரணடைய வாய்ப்பு இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. போலீஸ் வழக்கு பதிவு செய்த பிறகும், பெண்களுடன் தான் பேசிய பேச்சுகளை மதன் யூடியூப்பில் வெளியிட்டு வந்தார். எனவே பல பெண்களை அவர் ஏமாற்றியிருக்கலாம் என்றும் போலீசார் சந்தேகிக்கின்றனர். அதிலும் பணம் படைத்த குடும்பத்தை சேர்ந்த பெண்கள் அவரிடம் சிக்கியிருக்கலாம் என போலீசார் கருதுகின்றனர். எனவே அவர் வீடியோவில் பேசும் பெண்களின் விபரங்களையும் சேகரித்து வருகின்றனர். மதனின் தந்தையிடம் நடந்து வரும் விசாரணையில் அடிப்படையில் அவருடன் தொடர்பில் இருந்தவர்கள் பற்றிய விபரங்களையும் போலீசாா் சேகரித்து வருகின்றனர்.
எரிச்சலடைந்த நீதிபதி
மதன் முன்ஜாமீன் மனு சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது, விசாரித்த நீதிபதி ‛மதனின் பேச்சை காது கொடுத்து கேட்க முடியவில்லை என்றும்; முடிந்தால் அந்த பேச்சுகளை இன்று முழுவதும் கேட்டு விட்டு நாளை காலை முன்ஜாமின் கேட்க வருமாறு,’ நீதிபதி தண்டபானி, மனுதாரரின் வழக்கறிஞரிடம் எரிச்சலுடன் கூறினார்.
PUBG Madan: ‛பப்ஜி முதல் கப்சிப் வரை’ மதன் மன்மதனாகி மாட்டிய கதை!