கொரோனா வைரஸ் உலகை ஆட்கொண்டு இரண்டு வருடங்கள் ஆகப்போகிறது. இன்னும் உலகைவிட்டு அது நீங்கியபாடில்லை. மாறாக உருமாறி புதுப்புது வேரியன்ட்டுகளாக மிரட்டிக் கொண்டிருக்கிறது. உருமாறிய கொரோனா வைரஸ்களை ஆல்ஃபா, பீட்டா, டெல்டா என உலக சுகாதார நிறுவனம் பெயரிட்டுள்ளது.
இந்நிலையில், அத்தனை உருமாறிய கொரோனா வைரஸையும் 2டிஜி மருந்து திறம்பட எதிர்கொள்ளும் என்பது கண்டறியப்பட்டுள்ளது.
புதிய ஆய்வின்படி 2டிஜி மருந்தை கொரோனா நோயாளிகளுக்குக் கொடுக்கும்போது அது சார்ஸ் கோவ் 2 வைரஸ் பல்கிப் பெருகுவதைத் தடுக்கிறது. அதுமட்டுமல்லாம் சிபிஇ (CPE) தொற்றால் ஏற்படும் செல் பாதிப்பைக் கட்டுப்படுத்துகிறது. செல் சாவைத் தடுக்கிறது என்பது அறியப்பட்டிருக்கிறது. இது முதற்கட்ட ஆய்வின் அடிப்படையில் கிடைத்துள்ள தகவல் என்பது குறிப்பிடத்தக்கது.
2-டியாக்சி- டி-குளுக்கோஸ் மருந்தின் பின்னணி..
2-டியாக்சி- டி-குளுக்கோஸ் (2-deoxy-D-glucose (2-DG)) எனப்படும் இந்த மருந்தை தேசிய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பின் ஓர் ஆய்வகமான இன்ஸ்டிடியூட் ஆஃப் நியூக்ளியர் மெடிசின் அண்ட் சயின்ஸ் (INMAS-DRDO) மற்றும் ஹைதராபாத்தில் உள்ள டாக்டர் ரெட்டிஸ் லெபோரட்டரீஸ் நிறுவனத்துடன் இணைந்து உருவாக்கியுள்ளது. இந்த மருந்து பவுடர் வகையில் இருக்கும். பொதுவாக ஒரு வைரஸ் நமது உடம்பிற்குள் சென்றால் அது நம் உடலில் வளர சக்தி தேவைப்படுகிறது. இதற்காக அந்த வைரஸ் நமது உடம்பிலிருந்து குளுக்கோஸை எடுக்கிறது. அதன் பின்னர் நமது உடம்பில் அந்த வைரஸ் வளர்கிறது. இந்த முறையை பயன்படுத்தி வைரஸை எதிர்கொள்ளும் வகையில் 2டிஜி மருந்து அமைந்துள்ளது. அதாவது 2டிஜி மருந்தை அருந்திய உடன் இந்த குளுக்கோஸை வைரஸ் எடுத்து கொள்ளும். அதன்மூலம் வைரஸ் நம் உடம்பில் வளர்வதை தடுக்க இம்மருந்து வழிவகை செய்யும்.
இந்த மருந்தை கடந்த ஜூன் மாதம் முதல் அக்டோபர் மாதம் வரை பல கொரோனா நோயாளிகளுக்கு சோதனை முயற்சியாக பயன்படுத்தப்பட்டது. அதில் அவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை தேவைப்படும் நாட்கள் குறைக்கப்பட்டது. அத்துடன் அவர்களுக்கு ஆக்சிஜன் தேவையையும் இல்லாமல் இருந்தது. மேலும் இது வைரஸின் குளுக்கோஸ் ஆக செயல்படு முறையில் தயாரிக்கப்பட்டதால் இது அனைத்து வகை கொரோனா வைரஸ்களையும் எதிர்த்து செயல்படும் வகையில் அமைந்துள்ளது.
எப்படி உட்கொள்வது?
2டிஜி பவுடர் முறையில் இருக்கும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது. இதனை வழக்கம் போல் குளுக்கோஸ் எடுத்து கொள்வதை போல் தண்ணீரில் கலந்து எடுத்து கொள்ள வேண்டும். கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ள நபர்கள் ஒரு நாளைக்கு இரு முறை இந்த மருந்தை எடுத்து கொள்ள வேண்டும். இவ்வாறு 5 முதல் 7 நாட்கள் வரை கொரோனா நோயாளிகள் இம்மருந்தை எடுத்து கொள்ள வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், உருமாறிய கொரோனா வைரஸையும் 2டிஜி மருந்து திறம்பட எதிர்கொள்ளும் என்பது கண்டறியப்பட்டுள்ளது. இது கொரோனா சிகிச்சையில் ஒரு மைல்கல்லாகவே பார்க்கப்படுகிறது.