தமிழ் சினிமாவில் மிக முக்கியமான இயக்குநர்களில் ஒருவர் ராஜகுமாரன். நடிகை தேவயானியின் கணவர். குறைந்த பட்ஜெட்டில் நிறைவான படம் தருவதில் வல்லவர். அப்படித்தான் இவர் கோடம்பாக்கத்தில் அறியப்படுகிறார். நல்ல நடிகரும் கூட. இவர் விஜய் மில்டன் இயக்கத்தில் நடித்த கடுகு என்ற படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது.


அண்மையில் அவர் யூடியூப் தளத்திற்கு அளித்த பேட்டியில் நடிகர்கள் சரத்குமார், விக்ரம், மணிவண்ணன், நடிகை குஷ்பு, தேவையாணி என பலரையும் பற்றி வெளிப்படையாகப் பேசியிருக்கிறார்.


அந்தப் பேட்டியின் ஒரு பகுதியில், அவர் தனது விண்ணுக்கும் மண்ணுக்கும் படத்தில் நடித்த விக்ரமுக்கு டயலாக்கே பேசத் தெரியாது என்று விமர்சித்துள்ளார். படத்தின் ஒரு முக்கியமான டயலாக்கை சொல்லிக்காட்டி அழுத்தமான அந்த டயலாக்கை உணர்வுகளே இல்லாமல் விக்ரம் பேசியிருப்பார் என்று குறை கூறியுள்ளார். அதேபோல், `ஒரு உண்மையை நாம் நினைத்துப் பார்க்க வேண்டும். விஜய் எத்தனை படம் நடித்திருந்தாலும், `பூவே உனக்காக’ படம் தந்த பிளாட்ஃபார்மில் தான் அவர் சென்று கொண்டிருக்கிறார். அதனை மறந்துவிட முடியாது. அதுதான் அவரைக் குடும்ப ரசிகர்களிடம் கொண்டு சென்று சேர்த்தது. `சேது’ படம் தான் நடிகர் விக்ரமிற்குக் கரியர் அமைத்துக் கொடுத்தது என நினைக்கிறார்கள். விக்ரம் என்ற நடிகரை வெளிக்கொண்டு வந்தது வேண்டுமானால் `சேது’ படமாக இருக்கலாம். விக்ரமை ஒவ்வொரு வீட்டிலும், ஒவ்வொரு கிராமத்திலும், ஒவ்வொரு மக்களிடமும் கொண்டு சேர்த்தது `விண்ணுக்கும் மண்ணுக்கும்’ திரைப்படம் தான் என்று ராஜகுமாரன் கூறியிருக்கிறார்.




விக்ரம் மனைவி என்னை காயப்படுத்திட்டாங்க..


விண்ணுக்கும் மண்ணுக்கும் எதிர்பார்த்த ஹிட் அடிக்கவில்லை. அப்போது விக்ரம் மனைவி என்னிடம் பேசினார். அவர், விக்ரமுக்கு ஒரு சேதுவே ஐந்து ஆண்டுகள் தாங்கும். நீங்கள் தான் என்ன செய்யப்போகிறீர்கள் என்று தெரியவில்லை என்றார். நான் முதல் படமே வெற்றிப் படமாக கொடுத்தவன். ஒரு இயக்குநருக்கு ஒரு படம் தோல்வியடைந்தால் அவன் ஒழிந்துவிடுவான் என்று நினைப்பது எவ்வளவு பெரிய அறியாமை என்று கூறியுள்ளார்.


வசனத்துக்கு சரத்குமார், பார்த்திபன்தான் பெஸ்ட்


சரத்குமார் அந்தப் படத்தின் போது தன்னை மிரட்டியதாகக் கூறிய ராஜகுமாரன் தொழிலில் அவரை அடித்துக் கொள்ள யாரும் இல்லையென்றும் புகழ்ந்துள்ளார். இன்றைக்கும் தமிழ் சினிமாவில் வசனத்தை எப்படிப் பேசினால் மக்கள் மனங்களில் இடம்பெறலாம் என்ற வித்தை தெரிந்தவர்கள் என்று புகழ்ந்துள்ளார்.
சரத்குமார் மட்டும் சரியென்று சொன்னால் இன்றைக்கும் விண்ணுக்கும் மண்ணுக்கும் 2 எடுக்கத் தயாராக இருப்பதாகக் கூறினார். விக்ரம் நடிக்க வேண்டிய அவசியமில்லை. அதற்கு வேறு யாராவது பயன்படுத்திக் கொள்வேன். ஆனால், சரத்குமார், குஷ்பு மட்டும் போதும் என்று கூறியுள்ளார்.


இயக்குநர் மணிவண்ணன் பற்றி பேசிய ராஜகுமாரன் "மணிவண்ணன் சார் கதையே ரெடியாகாம லொக்கேஷன்ல போயிட்டு, அருமையான சீனை ரெடி பண்ணி எடுத்துட்டு வந்துடுவாரு. அந்த ஸ்பாட்லையே எல்லாத்தையும் ரெடி பண்ணிடுவாராம். மிக திறமையான ஒரு இயக்குநர். ஒரே சமயத்தில் இரண்டு , மூன்று படங்களை கூட இயக்கும் திறமை படைத்தவர். பாரதிராஜாவின் கொடி பறக்குது படத்தில் மிகப்பெரிய  வில்லனாக நடிச்சு அசத்தியிருப்பாரு. அதே போல உள்ளத்தை அள்ளித்தா படத்தில் டபுள் ரோல்ல நடிச்சுருப்பாரு. அந்த படத்திற்கு பிறகெல்லாம் அவருடைய கால் ஷீட்டே கிடைக்கல .எனக்கு ஒரு படத்தில் இரண்டு நாள் ரொம்ப கம்மி சம்பளத்திற்கு நடித்து கொடுத்தாரு. யாரிடம் எவ்வளவு பணம் வாங்கனும்னு அவருக்கு தெரியும். தி கிரேட் மணிவண்ணன் சார் “ என பகிர்ந்தார்