நாட்டின் மிக மோசமான பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கை ரசிகர்களுக்கு தனது அணியால் மகிழ்ச்சியையும், பொழுதுபோக்கையும் தர முடியும் என நம்புவதாக ஆஸ்திரேலியா கேப்டன் ஆரோன் பின்ச்  தெரிவித்துள்ளார். 


பொருளாதார நெருக்கடியில் சிக்கி கடந்த சில மாதங்களாக இலங்கை தத்தளித்து வரும் நிலையில், அந்நாட்டில் விலைவாசி உயர்வு, கடன் சுமை அதிகரிப்பு, ஆட்சி மாற்றம் என இலங்கை மக்கள் பெரும் நெருக்கடிகளை சந்தித்து வருகின்றனர். இந்தநிலையில், பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் ஆஸ்திரேலியா ஆண்கள் கிரிக்கெட் அணி இலங்கைக்கு சுற்றுபயணம் மேற்கொண்டு மூன்று 20 ஓவர், 5 ஒரு நாள் போட்டி மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாட இருக்கிறது. 


இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள இந்த பொருளாதார நெருக்கடி மத்தியில் கிரிக்கெட் தொடர் அவ்வளவு அவசியமா என்று பல்வேறு தரப்பினரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். இந்த சூழலில் கிரிக்கெட் தொடர் மூலம் இலங்கை மக்கள் முகத்தில் புன்னகையை கொண்டு வருவோம் என ஆஸ்திரேலியா கேப்டன் ஆரோன் பின்ச் நம்பிக்கையளித்துள்ளார். 




இதுகுறித்து அவர் தெரிவிக்கையில், "நாங்கள் கிரிக்கெட் விளையாட வந்துள்ளோம். இலங்கைக்கு சில மகிழ்ச்சியையும், சில பொழுதுபோக்கையும் கொண்டு வர முடியும் என்று நம்புகிறோம். கடந்த 2016-க்குப் பிறகு நாங்கள் இங்கு வருவது இதுவே முதல் முறை, இது இவ்வளவு நீண்ட இடைவெளி.


இது சுற்றுப்பயணத்திற்கு மிகவும் சிறப்பான இடம். இங்கு நீங்கள் பெறும் விருந்தோம்பல், நட்பு மற்றும் விளையாட்டின் மீதான அவர்களின் அன்பு ஆகியவை நம்பமுடியாதவை" என்றார். 


பொருளாதார நெருக்கடியின் விளைவாக போராட்டங்கள் மற்றும் அடிக்கடி ஏற்படும் மின்வெட்டு பகல்-இரவு விளையாட்டுகள் பற்றிய சில கேள்வி எழுந்துள்ளது. இந்த போட்டிகள் நடைபெறுமா என்ற நம்பிக்கை உள்ளதா என்று செய்தியாளர்கள் ஃபின்ச்சிடம் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர் " சுற்றுப்பயணம் செல்வதற்கு முன்பே அந்த விஷயங்கள் அனைத்தும் இரண்டு வாரியங்களுக்கும் அரசாங்கத்திற்கும் தகவலாக வழங்கியுள்ளனர். 


தற்போது உள்ள சூழலில் என்ன நடக்கும் என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால் கடந்த ஒரு வாரமாக, நான் எந்த புகாரையும் கேட்கவில்லை என்று தெரிவித்தார். 


தொடர்ந்து இலங்கை அணி குறித்து பேசிய அவர், இலங்கை அணியின் டாப் வரிசையை எடுத்துக் கொண்டால் குசல் மென்டிஸ் சிறப்பாக பேட்டிங் செய்யக்கூடியவர். அன்றையநாள் மட்டும் அவருக்கு சிறப்பான நாளாக அமைந்துவிட்டால் எதிரணியின் பந்துவீச்சை அடித்து நொறுக்கி விடுவார். அதேபோல், கடந்த 2 வருடங்களாக டி20 தொடர்களில் ஹசரங்கா நம்பமுடியாத வகையில் பந்து வீசுகிறார் என்றும், இலங்கை அணி கிரிக்கெட்டில் ஆபத்தான அணி என்றும் குறிப்பிட்டுள்ளார். 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண