தஞ்சாவூர்:  ஆட்சிக்கு வர வேண்டும் என தேன் தடவிய வார்த்தைகளால் பேசி விட்டு, திராவகத்தை ஊற்றி தமிழக மக்களை ஸ்டாலின் நோகடித்துக்கொண்டு இருக்கிறார் என்று தஞ்சை மாவட்டம் ஒரத்தநாட்டில் நடந்த பொதுக்கூட்டத்தில் அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் குற்றம்சாட்டினார்.


தஞ்சை மாவட்டம் ஒரத்தநாட்டில் அமமுக சார்பில் திமுக அரசை கண்டித்து மாபெரும் பொதுக்கூட்டம் பேருந்து நிலையம் அருகில் நடைபெற்றது. பொதுக்கூட்டம் ஆரம்பித்த நேரத்தில் கனமழை பெய்தது. இருப்பினும் அதை பொருட்படுத்தாமல் தொண்டர்கள் பொதுக்கூட்டம் முடியும் வரை காத்திருந்தனர். மேலும் பிளாஸ்டிக் சேர்களை குடைபோல் பயன்படுத்தினர். 


இந்த பொதுக்கூட்டத்திற்கு கட்சி துணை பொதுச்செயலாளர் எம்.ரெங்கசாமி தலைமை வகித்தார்.  முன்னாள் எம்எல்ஏ தொட்டியம் எம்.ராஜசேகர், திருவாரூர் மாவட்ட செயலாளர் எஸ்.காமராஜ்,  தஞ்சாவூர் மாவட்ட செயலாளர் ப.ராஜேஸ்வரன், முன்னாள் மேயர் சாருபாலா தொண்டைமான்,  மாநில வழக்குரைஞர் பிரிவு செயலாளர் வேலு.கார்த்திகேயன்,  தலைமை செயற்குழு உறுப்பினர்கள்  கீதாசேகர், க.அசோகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.


மாநில இளைஞரணி தலைவர் எம்.ஆர்.காமராஜ், செண்டங்காடு ஊராட்சித்தலைவர் எல்.கோவிந்ராசு மற்றும் பலர் கலந்துக்கொண்டனர். முன்னதாக அமைப்பு செயலாளர் எஸ்.கே.தேவதாஸ் அனைவரையும் வரவேற்று பேசினார். தலைமை செயற்குழு உறுப்பினர் என்.எஸ்.துரைராஜ் நன்றி கூறினார்.


இந்த பொதுக்கூட்டத்தில் பொதுச் செயலாளர் தினகரன் பேசியதாவது: ஆட்சி அதிகாரத்திற்காக அ.ம.மு.க., தொடங்கப்படவில்லை. ஜெ.,வின் லட்சியங்கள், மக்கள் நலக்கொள்கைகளை தமிழகத்தில் நிலைநாட்டவும், மக்களுக்கு தொடர்ந்து கிடைத்திடவும், உண்மையான ஆட்சி தான் ஒரே தீர்வு என்பதை உணர்த்துகின்ற,  6 ஆண்டுகள் என்னுடன் சோதனைகளையும், தேர்தல் தோல்விகளையும் தாண்டி இன்னும் ஜெயலலிதாவின் தொண்டர்கள் என்னுடன் உள்ளனர்.


யாரோ ஒரு சிலர் குழப்பத்தால் குழம்பி போய் எங்கோ விலை போய் இருக்கலாம். என்னுடன் பயணிக்கும் தொண்டர்கள் இருக்கும் வரை அ.ம.மு.க.,  பட்டித்தொட்டி எல்லாம் இருக்கும். இன்று ஒரு சில சுயநலவாதிகள் கையில் உள்ள ஜெயலலிதாவின் இயக்கத்தை மீட்டு எடுப்பதற்காக என்னுடன், ஓ.பி.எஸ்., வைத்திலிங்கம் உள்ளிட்டோர் கைகோர்த்துள்ளனர். இது இயற்கையாக ஏற்பட்ட நிகழ்வு. நாம் பிரிந்து இருந்தால் தி.மு.க., என்னும் தீயசக்தியை வீழ்த்த முடியாது என்பதாலும், ஆட்சியில் இருந்துக்கொண்டு தமிழக மக்களை வாட்டி வதைப்பதை தட்டிக்கேட்பதற்கும், ஆட்சியை முடிவுக்கு கொண்டு வந்து, ஜெயலலிதாவின் உண்மையான ஆட்சியை தமிழகத்திற்கு கொண்டு வர வேண்டும் என்பதற்காக இணைந்துள்ளோம்.




எங்களின் இணைப்பு தமிழகம் முழுவதும் ஒரு உத்வேகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த இணைப்பின் வெளிப்பாடு வரும் நாடாளுமன்ற தேர்தலில், தமிழக முழுவதும் எதிரொலிக்கும். ஜெயலிலதாவின் தொண்டர்கள் தான் தி.மு.கவை வீழ்த்த முடியும். கடந்தாண்டு நடந்த பொதுக்குழுவுடன் அ.தி.மு.க.,வுக்கு அவர்கள் சமாதி கட்டி விட்டார்கள் என்பதை உணர்ந்து, இன்றைக்கு அ.தி.மு.க., தொண்டர்கள், அ.ம.மு.க., தொண்டர்களுடன் தமிழகம் முழுவதும் கைகோர்த்து வருகிறார்கள்.


தி.மு.க.,ஆட்சியை பற்றி பேச வேண்டும் என்றால் கூட, வானம் வரவேற்று, மழை பெய்தது. தி.மு.க., தலைவர் ஸ்டாலின் கொடுங்கொல் ஆட்சியை செய்துகொண்டு இருக்கிறார் என்பது தான் உண்மை. ஆட்சிக்கு வர வேண்டும் என தேன் தடவிய வார்த்தைகளால் பேசி விட்டு, திரவத்தை ஊற்றி தமிழக மக்களை ஸ்டாலின் நோகடித்துக்கொண்டு இருக்கிறார். இந்த ஆட்சிக்கு சாவு மணி அடிக்கக்கூடிய காலம் நெருங்கிவிட்டது. இவ்வாறு அவர் பேசினார். 


கூட்டத்தில் முன்னாள் அமைச்சரும், ஒரத்தநாடு எம்எல்ஏவுமான வைத்திலிங்கம் பேசுகையில், தி.மு.க, சுயநலக்காரரான எடப்பாடி பழனிசாமியால்தான் ஆட்சிக்கு வந்தது. நாங்கள் சொல்லுவதை அவர் கேட்டு இருந்ததால், அ.தி.மு.க., தமிழகத்தை ஆண்டுகொண்டு இருக்கும். தி.மு.க., ஆட்சியில், மின்தடை, கள்ளச்சாரயம் என சீரழிந்துகொண்டு இருக்கிறது. ஜெயலலிதா கொண்டு வந்த தாலிக்கு தங்கம், திருமண உதவித்தொகை உட்பட பல திட்டங்கள் கிடையாது. விடியா அரசாக தி.மு.க.,அரசு செயல்பட்டுக் கொண்டு இருக்கிறது.


அ.தி.மு.க.,வும், அ.ம.மு.க.,வும் இரட்டை குழல் துப்பாக்கியாக செயல்படும். தமிழகத்தில் ஜெயலலிதா, எம்.ஜி.ஆர்.,ஆட்சியை மீண்டும் கொண்டு வருவதற்காக, ஓ.பி.எஸ்.,தினகரன் இருவரும் அடித்தளமிட்டுள்ளனர். நாடாளுமன்றத் தேர்தலில் அமோக வெற்றிப்பெறுவோம். அ.தி.மு.க., ஒன்றாக இணையாக யார் தடையாக இருந்தாலும், அவர்கள் துாக்கி வீசப்படுவார்கள். காலத்தின் கட்டாயத்தால் அ.தி.மு.க., நிச்சயம் இணையும். 2026-ஆம் ஆண்டில் அ.தி.மு.க., அ.ம.மு.க., இணைந்து செயல்பட்டு, அ.தி.மு.க., ஆட்சியை கொண்டு வரும் என்றார்.