புதுச்சேரி அருகே வில்லியனூர் அரசூர் ராஜா நகர் பகுதியை சேர்ந்தவர் சந்திரசேகர் (43). அப்பளம் வியாபாரி. இவரது மனைவி தவமணி (35). இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். கடந்த 28ஆம் தேதி இரவு தம்பதியினர் இடையே குடும்பத் தகராறு ஏற்பட்டுள்ளது. அதன் பிறகு அனைவரும் உறங்கிவிட்டனர். நேற்று முன்தினம் காலை நீண்ட நேரமாகியும் சந்திரசேகர் எழுந்திருக்கவில்லை. இதையடுத்து அவரது மனைவி தவமணி, சந்திரசேகர் மாரடைப்பால் இறந்துவிட்டதாக ஊராரிடம் தெரிவித்துள்ளார்.
தகவலறிந்து அங்கு வந்த வில்லியனூர் காவல் ஆய்வாளர் கிருஷ்ணன் தலைமையிலான போலீஸார், உடலில் நகக்கீரல் காயங்களுடன் கிடந்த சந்திரசேகரின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கதிர்காமம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் சந்தேக மரணம் என வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் பிரேத பரிசோதனை முடிவில் சந்திரசேகர் கழுத்தை நெறித்துக் கொலை செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது.
இதையடுத்து வில்லியனூர் போலீஸார், இந்த வழக்கை கொலை வழக்காக மாற்றி, சந்தேகத்தின் பேரில் சந்திரசேகரின் மனைவி தவமணியை பிடித்து விசாரித்தனர். விசாரணையில், அப்பள வியாபாரி சந்திரசேகர், தவமணியை காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார். இதற்கிடையில் அரசூரில் உள்ள கறிக்கடைக்கு தவமணி சென்ற போது, அங்கு வேலை செய்த திண்டுக்கல்லை சேர்ந்த அஜ்மீர்கான் (25) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
இது நாளடைவில் கள்ளத்தொடர்பாக மாறியது. இதையடுத்து சந்திரசேகரின் வீட்டின் மாடியில் வாடகைக்கு குடிவந்த அஜ்மீர்கான், சந்திரசேகர் வெளியே செல்லும் போது, அவரது மனைவி தவமணியுடன் இருந்து வந்துள்ளார். இதையறிந்த சந்திரசேகர் மனைவியை கண்டித்ததால், கணவன் மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
இதே போல கடந்த 28ஆம் தேதி ஏற்பட்ட தகராறை அறிந்து அங்கு வந்த அஜ்மீர்கான், தவமணியுடன் சேர்ந்து சந்திரசேகரை கழுத்தை நெறித்தும், தலையணையால் அவரது முகத்தை அழுத்தியும் கொலை செய்துவிட்டு, ஒன்றும் தெரியாதது போல நாடகமாடியது தெரியவந்ததாக போலீஸார் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதையடுத்து சந்திரசேகரின் மனைவி தவமணி மற்றும் கள்ளகாதலன் அஜ்மீர்கானை கைது செய்த வில்லியனூர் போலீஸார் அவரை, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.