செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே உள்ள பாக்கம் கிராமத்தை சேர்ந்த மனோகர். இவர் சென்னை மாநகர போக்குவரத்துக் கழக பணிமனையில் வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி கவிதா தனியார் மருத்துவமனையில், செவிலியராக பணிபுரிந்து வருகிறார். இவர்கள் இருவருக்கும் கடந்த 8 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. கவிதா மற்றும் மனோகர் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளனர். பெற்றோரின் எதிர்ப்பை மீறி கவிதா மனோகரை திருமணம் செய்துள்ளார். மனோகர் மீது மகள் ஆசைப்பட்ட காரணத்தினால், கவிதாவின் திருமணத்தை பின்னர் பெற்றோர் ஏற்றுக் கொண்டுள்ளனர்.
இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்ட பிறகும், இருவருக்கு இடையே அடிக்கடி மனக்கசப்பு ஏற்பட்டு அது சண்டையாக மாறி உள்ளது. திருமணமான பிறகு மனோகருக்கு ஏற்கனவே , ஒரு பெண்ணுடன் திருமணம் நடந்து இருப்பது கவிதாவிற்கு தெரியவந்துள்ளது. இதன் காரணமாக இருவரின் காதல் வாழ்க்கை, தினமும் சண்டையுடன் சென்று கொண்டிருந்தது. இதன் காரணமாக கவிதா தொடர்ந்து மன அழுத்தத்தில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் கணவர் மனோகர், கவிதாவிடம் இருந்து புதிய வீட்டுமனை, இருசக்கர வாகனம் ,25 லட்சம் ரூபாய் ரொக்கம் ஆகியவை வரதட்சணையாக, பெற்றோரிடம் வாங்கி வருமாறு வற்புறுத்தியுள்ளார், அடிக்கடி அந்த பெண்ணை அடித்து துன்புறுத்தி வந்துள்ளார்.
இதனால் இருவரும் கடந்த சில வாரங்களாக பிரிந்து வாழ்ந்து வந்துள்ளனர். இந்நிலையில் நேற்று தனது கணவரை பார்க்க, கணவர் வீட்டிற்கு கவிதா வந்துள்ளார். மீண்டும் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால், தான் அம்மா வீட்டிற்கு செல்வதாக கவிதா கூறியுள்ளார். அதனால் ஆத்திரமடைந்து தன் மனைவி கவிதாவை தன் வீட்டில் வைத்து பூட்டி விட்டு, மனோகர் வேலைக்கு சென்றுள்ளார். தொடர்ந்து மன அழுத்தத்தில் இருந்து வந்த கவிதா, வீட்டில் இருந்த மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த, மதுராந்தகம் போலீசார் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தற்கொலை குறித்து கவிதாவின் உறவினர்கள் அளித்த புகாரின் அடிப்படையில், மதுராந்தகம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருமணமாகி ஒரு வருடத்திற்குள் வரதட்சணை கொடுமை காரணமாக, பெண் தற்கொலை செய்து கொண்ட காரணத்தினால், வருவாய் கோட்டாட்சியர் தலைமையில் விசாரணை நடைபெற உள்ளது.
இதுகுறித்து கவிதாவின் சகோதரி தெரிவிக்கையில், இருவரும் வீட்டின் எதிர்ப்பை மீறி திருமணம் செய்து கொண்டார்கள். இந்நிலையில் மனோகர் , இருபத்தி ஐந்து லட்ச ரூபாய் பணம், வீட்டுமனை, இருசக்கர வாகனம் உள்ளிட்டவற்றைக் கேட்டு கவிதாவை தொடர்ந்து நச்சரித்து வந்தார். இந்நிலையில் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு மனோகர் கவிதாவை அடித்து உதைத்தார். இதனைத் தொடர்ந்து மனோகரிடமிருந்து கவிதாவை, காப்பாற்றுவதற்காக எங்கள் வீட்டில் வைத்து வேலைக்கு அனுப்பி வந்தோம். இந்நிலையில் ,நேற்று தனது வீட்டிற்கு சென்ற கவிதா அங்கு நடந்த சண்டையின் காரணமாக தற்கொலை செய்து கொண்டார். என் தங்கையின் உயிரிழப்புக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என தெரிவித்தார்.
வாழ்க்கையில் கவலைகளும், துன்பங்களும் வந்து கொண்டுதான் இருக்கும். அவைகளை தற்காலிகமாக்குவதும், நிரந்தரமாக்குவதும் நாம் கையாளும் விதத்தில் தான் உள்ளது. தற்கொலை என்பது எதற்கும் தீர்வு ஆகாது. வாழ்க்கைக்கான நோக்கத்தைப் பற்றிய தெளிவும் அதை அடைவதற்கான வழிகளையும் கண்டறிய துவங்கினால் வாழ்க்கை சுவாரஸ்யமானதாக இருக்கும். அப்படி தங்களுக்கு மன அழுத்தம் ஏற்பட்டாலோ தற்கொலை எண்ணம் உண்டானாலும் அதனை மாற்ற கீழ்காணும் எங்களுக்கு அழைக்கவும். மாநில உதவி மையம் :104, ஸ்நேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் 044-24640050