கரூர் தென்னிலை அருகே வீட்டில் சாராயம் காய்ச்ச 300 லிட்டர் ஊறல் போட்டு வைத்திருந்த நபரை போலீசார் கைது செய்தனர். கொரோனா வைரஸ் பரவல் இரண்டாம் அலையை கட்டுப்படுத்துவதற்காக தமிழக அரசு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால், கடந்த 15 நாட்களாக தமிழகத்தில் அரசு மதுபான கடைகள் மூடப்பட்ட நிலையில் பல்வேறு இடங்களில் மது பிரியர்கள் மது கிடைக்காமல் திண்டாடுகின்றனர். கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் மாவட்டத்திலுள்ள போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் தமிழகத்தில் ஒரு சில இடங்களில் மது பிரியர்கள் அதுக்காக பல்வேறு யூடியூப் தொலைக்காட்சி மூலம் கள்ளச்சாராயம் காய்ச்சுவது குறித்து வீடியோ பார்த்து தங்களது வீட்டிலேயே சாராயம் காட்சி வருகின்றனர். மதுபானங்களை சட்டவிரோதமாக பதுக்கி வைத்து விற்பனை செய்யும் நபர்களை போலீஸார் தீவிரமாக தேடி கைது செய்து வருகின்றனர்.



இதேபோல் கரூர் மாவட்டத்தில் கடந்த வாரத்தில் கர்நாடகா மது பாட்டில் கொண்டுவந்த மூன்று லாரிகளை சிறைப்பிடித்து ஓட்டுநர் உள்ளிட்ட நபர்களை கைது செய்து அதில் இருந்த 93 கர்நாடகா மதுபாட்டில்களை கரூர் மாவட்ட போலீசார் பறிமுதல் செய்தனர் இதைத்தொடர்ந்து அவர்கள் சோதனை சாவடிகளில் கூடுதலாக சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் கரூர் மாவட்டம், தென்னிலை அருகே மொஞ்சனூர் என்ற கிராமத்தில் ஒரு வீட்டில் சாரயம் காய்ச்சப்படுவதாக போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து தென்னிலை காவல் நிலைய ஆய்வாளர் ரமாதேவி மற்றும் போலீஸார் மொஞ்சனூரில் உள்ள தொட்டம்பட்டி என்ற இடத்தில் செந்தில்குமார் என்பவர் வீட்டில் திடீர் சோதனை நடத்தினர்.




அப்போது அந்த வீட்டில், செந்தில்குமார் வீட்டுக்குள் சாரயம் காய்ச்சுவதற்காக 300 லிட்டர் சாராய ஊறல்  மற்றும் சாராயம் காய்ச்சுவதற்கான பொருள்களை வைத்து இருந்தது தெரியவந்தது. இதையடுத்து செந்தில்குமாரை கைது செய்த போலீசார் சாராய ஊறலை கீழே கொட்டி அழித்தனர். யூடியூப் பார்த்து அவர் சாராயம் காய்ச்ச முயற்சித்தது தெரியவந்தது. கரூர் மாவட்டம், தென்னிலை அருகே வீட்டில் சாராயம் காய்ச்சிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. செந்தில்குமார் மட்டுமல்லாமல் இதில் மேலும் சிலருக்கு தொடர்பிருக்கிறது எனத்தெரியவந்துள்ளதால், அந்த கும்பல் யார் என்றும் விசாரணை நடந்து வருகிறது. கும்பலாக காய்ச்சி ஊருக்கு தொண்டு செய்யப் போவதாக நினைத்து ஊறலில் திளைத்திருந்த செந்தில் கைதான நிலையில், மற்றவர்களும் விரைவில் சிக்குவார்கள் எனத்தெரிகிறது. என்ன தான் கண்காணிப்பு செய்தாலும், கையில் போனைவைத்துக் கொண்டு நான்கு சுவற்றுக்குள் யூடியூப் பார்த்து சாராயம் காய்ச்சுவதெல்லாம் வேறு மாதிரியான தேடல். ‛சைனாக்காரன் என்னென்னமோ கண்டுபிடிக்கிறான்... இது என்ன கண்டுபிடிச்சிருக்கு பாரு..’ என ,ஒரு காமெடி வருமே... அது தான் நினைவுக்கு வருகிறது.