கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் மாநகராட்சி பழைய மத்திகிரியை சேர்ந்தவர் மேகநாதன். இவருடைய மனைவி ஜெயலட்சுமி வயது (46). இவர்கள் அந்த பகுதியில் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகின்றனர்.


ஜெயலட்சுமியுடன் சேர்ந்து அதே பகுதியை சேர்ந்த ரியல் எஸ்டேட் மற்றும் லாரி டிரான்ஸ்போர்ட் தொழில் செய்து வந்த ரவிச்சந்திரன் குடும்பத்தினர் நண்பர்களாக பழகி வந்தனர். இந்தநிலையில், கடந்த 2015ம் ஆண்டு ரவிச்சந்திரன், தனது தொழிலில் பங்குதாரராக சேர்ந்து கொண்டால், நாம் செய்யும் தொழிலில் இருந்து வரும் லாபத்தில் பங்கு தருவதாக ஜெயலட்சுமியிடம் கூறியதாக தெரிகிறது. அதை நம்பிய ஜெயலட்சுமி 50 லட்சம் ரவிசந்திரனிடம் கொடுத்ததாக கூறப்படுகிறது.


 




 


பின்னர் இவர்கள் இருவரும் தொழில் நடத்தி வந்துள்ளனர். அதில் ரவிச்சந்திரன் அவருக்கு லாபத்தில் பங்கு அளித்துள்ளார். அதனைத்தொடர்ந்து ரவிச்சந்திரனின் நண்பர்களிடம் இருந்தும் மற்றும் தெரிந்தவர்களிடம் நாம் செய்யும் தொழிலைப் பற்றி  கூறி பணம் பெற்று கொடுத்தால் உனக்கு அதிக அளவில் லாபத்தில் இருந்து பங்கு தருகிறேன் என கூறியுள்ளார். இதனால், பணம் ஆசை கொண்ட ஜெயலட்சுமி தன்னுடைய நண்பர்கள் மற்றும் தெரிந்தவர்களிடம் இருந்து செய்யும் தொழிலை பற்றியும் லாபம் அதிகம் வரும் என கூறியும் அவர்களிடம் இருந்து வங்கி பண பரிவர்த்தனை மூலமாக 5 கோடியே 60 லட்சம் பணம் பெற்று, ரவிச்சந்திரனிடம் கொடுத்துள்ளார். இதனைத்தொடர்ந்து, பணத்தை பெற்றுக் கொண்ட  தொழிலதிபர் ரவிச்சந்திரன், அதன் பிறகு தொழிலில் இருந்து பெறப்படும்  லாபத்தில் இருந்து சரிவர பணம் தரவில்லை. இது குறித்து ஜெயலட்சுமி  ரவிசந்திரனிடம் கேட்டபோது பணம் கொடுப்பதாக கூறி காலம் தாழ்த்தி வந்துள்ளார்.


 


 




 


இந்தநிலையில், ரவிச்சந்திரனை தேடி ஜெயலட்சுமி பணம் கேட்பதற்காக ரவிச்சந்திரன் வீடடிற்கு சென்றார். அங்கு ரவிச்சந்திரன் குடும்பத்துடன் மாயமானதை கண்டு ஜெயலட்சுமி அதிர்ச்சி அடைந்தார். இதையடுத்து, ஜெயலட்சுமி கிருஷ்ணகிரி மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறையிடம் ஜெயலட்சுமி புகார் அளித்தார். அதன் பேரில் குற்றப்பிரிவு துணை காவல்கண்காணிப்பாளர் ஈஸ்வர மூர்த்தி தொழிலதிபர் ரவிச்சந்திரன், அவரது மனைவி லதா, மகன் ராகுல் மற்றும் மருமகன் சுபாஷ் ஆகிய 4 நபர்கள் மீது குற்றப்பிரிவு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். அதன் பின்னர் பணம் மோசடி செய்த நபர்களை விரைவில் பிடித்து விடுவதாகவும் காவல்துறையினர்  அவர்களை தேடி வருவதாகவும் ஜெயலட்சுமியிடம் தெரிவித்துள்ளனர். பெண்ணிடம் பணம் ஆசையை காட்டி  அதிக அளவில் பணத்தை சுருட்டிக்கொண்டு தப்பி ஓடிய சம்பவம் ஓசூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது