1993  ஆம்  ஆண்டு பிரபல தமிழ் திரைப்பட இயக்குனர் மணி ரத்னம் அவர்களால் இயக்கி  , தயாரித்து வெளிவந்த திரைப்படம் திருடா திருடா . இந்தப்படத்தில் நடிகர் ஆனந்த் ,  நடிகர் பிரசாந்த் , பிரபல பாடகர் எஸ் பி பாலசுப்பிரமணியம்  உள்ளிட்டோர்  முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்கள்  .


படம் முழுவதும் 1000 கோடி ரூபாய் நிறைந்திருக்கும் ஒரு கண்டைனர் லாரியை போலீசார் தேடுவதும் சேஸ் செய்வதுமாக மிக விறுவிறுப்பாக இருக்கும் . 1990 களில்  வெளிவந்த தமிழ் திரை படங்களில் திருடா திருடா சிறந்த விறுவிறுப்பு கலந்த ஆக்‌ஷன் படமாக கருதப்பட்டது .


திருடா திருடா படத்தை போலவே , வேலூரிலும் ஒரு திருட்டு கும்பலுக்கும் போலீசாருக்கும் நடந்த ஒரு சேசிங் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது . கிட்டத்தட்ட 65 கிலோமீட்டர் நடந்த இந்த சேஸிங்கில் , 3 இரும்பு தடுப்பு கட்டைகள் , ஒரு போலீஸ் வாகனம் என பல சேதாரங்கள் ஏற்பட்டுள்ளது . மேலும் போலீசார் கையில் பிடிபடக்கூடாது என்பதற்காக  இந்த கொள்ளை கும்பல் ,  இந்த 65 கிலோமீட்டர் சேஸிங்கில் போலீசார் மீது கல்வீசி அவர்களின் கவனத்தை சிதறடித்து தப்பிச் சென்றுள்ளனர்.




திங்கட்கிழமை விடியற்காலை 3 மணி அளவில் , வேலூர் மாநகராட்சி பகுதிக்குட்பட்ட  புதுவசூர் பகுதியில் சத்துவாச்சாரி போலீசார் சென்னை- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் ரோந்து மேற்கொண்டனர் . அப்போது புதுவசூர் அருகே சாலையோரம் ராஜஸ்தான் மாநில பதிவு எண் கொண்ட மகேந்திர (407) , மினி லாரி ஒன்று சந்தேகத்திற்கு இடமான வகையில் நின்று கொண்டிருந்தது. 


அதனை கண்ட போலீசார் லாரியில் இருந்தவர்களிடம் விசாரணை மேற்கொள்ள நெருங்கி சென்றுள்ளனர் . அப்பொழுது அடையாளம் தெரியாத அந்த 7 நபர்களை கொண்ட வடஇந்திய கும்பல் , சாலையோரம் கொட்டிவைத்திருந்த கற்களை அள்ளிக்கொண்டு , மினிலாரியில் அங்கு இருந்து தப்பித்து சென்றனர் .


அந்த  கும்பலை விரட்டி சென்ற படியே ரோந்து பணியில் இருந்த சத்துவாச்சாரி போலீசார் இதுகுறித்து தகவலை விருதம்பட்டு மற்றும் காட்பாடி போலீசாருக்கும்   தெரிவித்தனர். லாரியை மடக்கி பிடிப்பதற்காக விருதம்பட்டு, சித்தூர் பஸ் நிறுத்தம் அருகில் தடுப்புகளை அமைத்து போலீசார் தயார் நிலையில் இருந்தனர். 




விருதம்பட்டு மெயின் ரோட்டில் புகுந்த மினிலாரி போலீசார் சாலையில் வைத்திருந்த தடுப்புகளில் மோதி தூக்கி வீசிவிட்டு வேகமாக சென்றது. 


இதனை தொடர்ந்து சித்தூர் பஸ் நிறுத்தம் அருகே சென்ற போது இந்த கும்பலை பிடிப்பதற்காக டிஎஸ்பி பழனி தலைமையிலான போலீசார் இரும்பு தடுப்புகள் மற்றும் போலீஸ் வாகனங்களை  நிறுத்தி வைத்திருந்தனர்  , அவர்கள் கையில் பிடிபடக்கூடாது என்பதற்காக சாலையோரம் நிறுத்திவைத்திருந்த  போலீஸ் வாகனம் மீது மோதி அங்கிருந்தும் தப்பித்தனர்.


இதில் போலீஸ் வாகனம் பின்பக்கம் சேதமடைந்தது. மேலும் சாலையோரம் இருந்த தடுப்புகளையும் மோதி தூக்கி வீசிவிட்டு பொன்னை நோக்கி லாரி வேகமாக சென்றது. தொடர்ந்து லாரியை போலீசார் விரட்டிச்சென்றபோது லாரியின் பின்னால் இருந்தவர்கள், லாரியில் வைத்திருந்த கற்களை எடுத்து பின்னால் விரட்டி வந்த போலீசார் மீது வீசினர். இதனால் போலீசாருக்கு லாரியை பின்தொடர்வதில் சிரமம் ஏற்பட்டது. இதனை பயன்படுத்தி அந்த அடையாளம் தெரியாத வடஇந்திய கும்பல் ஆந்திர எல்லைக்குள் வேகமாக நுழைந்தனர் .


புதுவசூர் முதல் தமிழ்நாடு - ஆந்திர எல்லைப்பகுதியான பொண்ணை வரை 65  கிலோமீட்டர் துரத்திச்சென்றும் போலீசாரால் அந்த கும்பலை பிடிக்க முடியாமல் தவித்தனர் .




இந்த பரபரப்பு சம்பவம் குறித்து வேலூர் மாவட்டத்தை சேர்ந்த காவல்துறை உயர்  அதிகாரி ஒருவரிடம் கேட்டபொழுது , அடையாளம் தெரியாத இந்த கும்பல் , வடநாட்டிலிருந்து ஆடு மாடு கடத்தும் கும்பல் என முதற்கட்ட விசாரணையில் தெரிகிறது . மேலும் இவர்கள் மாதாண்டக்குப்பம்   , பொண்ணை வழியாக ஆந்திராவுக்கு சென்று , அங்கிருந்து ராஜஸ்தானுக்கு தப்பி செல்வதற்காக  திருவள்ளூர் மாவட்டத்தில் பதுங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது . அவர்களை பிடிப்பதற்கு சிறப்பு படையொன்று திருவள்ளூர் மாவட்டத்திற்கு விரைந்துள்ளது . இந்த கும்பல் விரைவில் பிடிபடுவார்கள் என்று தெரிவித்த போலீஸ் அதிகாரி . இந்த கொள்ளை கும்பல் மீது வேலூர் , திருவலம் காவல் நிலையத்தில் தமிழ்நாடு பொது சொத்து (சேதம் மற்றும் இழப்பு தடுப்பு) சட்டம் பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார் .