மாதந்தோறும் வங்கி விடுமுறை பற்றிய அறிவிப்பை ரிசர்வ் வங்கி வெளியிடுவது வழக்கம். அந்த வகையில், ஆகஸ்ட் மாதத்துக்கான வங்கி விடுமுறைப் பட்டியலையும் ரிசர்வ் வங்கி வெளியிட்டிருக்கிறது.
ஆனால் எப்போதும் இல்லாத அளவுக்கு இம்மாதம் 15 நாட்கள் விடுமுறை பரவிக் கிடப்பதாக வெளியாகியுள்ள தகவல்கள் பொதுமக்கள் மத்தியிலும் வியாபாரிகள், வர்த்தகர்கள் மத்தியிலும் சிறு கலக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இதில் பிரதி ஞாயிறு விடுமுறைகளும், 2 ஆம் மற்றும் 4 ஆம் சனி விடுமுறையும் அடங்கும். இதுதவிர 8 நாட்கள் பல்வேறு மாநிலங்களிலும் நடைபெறும் மத ரீதியான விழாக்கள், கொண்டாட்டங்கள் ஆகியனவற்றிற்காக வரும் விடுமுறைகள்.
ஆகஸ்ட் மாதத்துக்கான விடுமுறைகளை மூன்று வகைப்படுத்தி ரிசர்வ் வங்கி பட்டியலிட்டுள்ளது. அதாவது, பண்டிகை கால விடுமுறைகள் (‘Holiday under Negotiable Instruments Act’)., ரியல் டைம் கிராஸ் செட்டில்மென்ட் ஹாலிடே மற்றும் வங்கிக் கணக்கு முடித்தலுக்கான விடுமுறை (‘Banks’ Closing of Accounts’) என்று வகைமைப் படுத்தியுள்ளது.
அதன்படி ஆகஸ்ட் மாதம் 13 ஆம் தொடங்கி ஆகஸ்ட் 31 ஆம் தேதி வரை விடுமுறைக்களில் எத்தனை நாட்கள் பண்டிகை நிமித்தமாக வருகின்றன என்பதைப் பார்ப்போம். பொதுவாக பண்டிகை, மத விழாக்கள் விடுமுறை நாட்கள் மாநிலத்துக்கு மாநிலம் மாறுபடுகிறது. அதனால், ஒரு மாநிலத்தில் வங்கி விடுமுறை என அறிவிக்கப்பட்டிருந்தாலும் அதனால் பிற மாநிலத்தவர் அச்சப்படத் தேவையில்லை. அதேபோல் சில விழாக்கள் உள்ளூர் விழாவாகக் கொண்டாடப்படுகிறது. அதனால், அந்த விழாக்களின் போது அந்த குறிப்பிட்ட கிராமமோ, நகரமோ அங்குள்ள வங்கிகளுக்கு மட்டுமே உள்ளூர் விடுமுறை இருக்கும். ஆகையால் அது குறித்தும் எந்த கலக்கமும் கொள்ளத் தேவையில்லை.
ஆகஸ்ட் 1 ஆம் தேதியே தொடங்கும் விடுமுறை:
ஆகஸ்ட் 1 ஞாயிறு அன்று பிறந்துள்ளதால், மாதத்தின் முதல் நாளான இன்று விடுமுறையில் தொடங்கியுள்ளது. அந்த வகையில் இன்றைய தினம் நாடு முழுவதுமே வங்கிகளுக்கு விடுமுறை தான். இதுதவிர அனைத்து மாநிலங்களுக்கும் விடுமுறை வரும் நாட்கள் இரண்டு. ஒன்று ஆகஸ்ட் 19 ஆம் தேதி மற்றொன்று ஆகஸ்ட் 30 ஆம் தேதி.
ஆகஸ்ட் 19 ஆம் தேதி, ஆகஸ்ட் 30 ஆம் தேதி இரண்டு நாட்கள் அனைத்து மாநிலங்களிலும் வங்கிகளுக்கு விடுமுறை. ஆகஸ்ட் 19ல் முஹரம் அனுசரிக்கப்படுகிறது. அகர்தலா, அகமதாபாத், பேலாபூர், போபா, ஹைதராபாத், ஜெய்ப்பூர், ஜம்மு, கான்பூர், கொல்கத்தா, லக்னோ, மும்பை, நாக்பூர், புது டெல்லி, பாட்னா, ராய்ப்பூர், ராஞ்சி மற்றும் ஸ்ரீநகர் ஆகிய நகரங்களில் அன்று முகரம் கொண்டாடப்படுகிறது. மொத்தம் 17 நகரங்களில் அன்றைய தினம் வங்கிகளுக்கு விடுமுறை வருகிறது.
ஆகஸ்ட் 30 ஆம் தேதி ஜன்மாஷ்டமி அனுசரிக்கப்படுகிறது. அன்றைய தினம் பல்வேறு ஊர்களிலும் கிருஷ்ண ஜெயந்தி கொண்டாடப்படுகிறது. 15 நகரங்களில் கிருஷ்ண ஜெயந்தி கொண்டாடப்படுகிறது. அகமதாபாத், சண்டிகர், சென்னை, டேராடூன், ஜெய்ப்பூர், ஜம்மு, கான்பூர், லக்னோ, பாட்னா, ராய்ப்பூர், ராஞ்சி, ஷில்லாங், ஷிம்லா, ஸ்ரீநகர், காங்டாக் ஆகிய நகரங்களில் கிருஷ்ண ஜெயந்தி கொண்டாடப்படுகிறது.
இவை தவிர மற்ற விடுமுறை நாட்கள் பெரும்பாலும் உள்ளூர் விடுமுறையாகவே அமையும். அதனால் வாடிக்கையாளர்கள் தேவையற்ற வதந்திகளை நம்பி கலக்கமடைய வேண்டாம்.