கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே உள்ள நடியபட்டு பகுதியை சேர்ந்தவர் ஜெயரஞ்சினி (37). இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த அரசு பள்ளி ஆசிரியர் ஒருவருக்கும் 15 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். ஜெயரஞ்சினி பள்ளிப்படிப்பை உளுந்தூர்பேட்டை அருகே உள்ள சின்னகுப்பம் கிராமத்தில் உள்ள தனது உறவினர் வீட்டில் தங்கி அங்குள்ள பள்ளியில் படித்து வந்தார். அப்போது அதே பள்ளியில் படித்து வந்த அதே பகுதியை சேர்ந்த இளங்கோ என்பவருடன் அவருக்கு காதல் ஏற்பட்டது. ஆனால் இவர்களின் காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதையடுத்து இருவரும் காதலை கைவிட்டு வீட்டில் பார்த்த பெண்ணை இளங்கோவும், தனது பெற்றோர் பார்த்த மாப்பிள்ளையை ஜெயரஞ்சனியும் திருமணம் செய்து கொண்டு குடும்பம் நடத்தி வந்தனர். இளங்கோவுக்கு 2 குழந்தைகள் உள்ள நிலையில் கடந்த ஓராண்டுக்கு முன்பு அவரது மனைவி தற்கொலை செய்து கொண்டார். இதை அறிந்த ஜெயரஞ்சினி தனது பள்ளிப்பருவ காதலை மீண்டும் தொடர நினைத்தார். திருமணமாகி 15 ஆண்டுகள் ஆன நிலையில் தனது 2 குழந்தைகள் மற்றும் கணவரை தவிக்க விட்டு வீட்டை விட்டு வெளியேறி இளங்கோவுடன் கடந்த ஓராண்டாக வசித்து வந்தார். இந்த நிலையில் இறந்து போன மனைவியின் படம் வீட்டில் இருப்பது தனக்கு பிடிக்கவில்லை என்றும் அதை அப்புறப்படுத்த வேண்டும் எனவும் ஜெயரஞ்சினி இளங்கோவிடம் அடிக்கடி கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டு வந்தார்.
நேற்று முன்தினம் இரவும் இது தொடர்பாக அவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டு, ஒருவரையொருவர் ஆபாசமாக திட்டிக் கொண்டதாக தெரிகிறது. இதில் இளங்கோவிடம் கோபித்து கொண்ட ஜெயரஞ்சினி வீட்டின் பின்பக்கம் உள்ள அறைக்கு சென்று, கதவை உள்பக்கமாக பூட்டிக் கொண்டதாக கூறப்படுகிறது. மறுநாள் காலை வெகு நேரமாகியும் ஜெயரஞ்சினி அறையை விட்டு வெளியே வராததால் சந்தேகம் அடைந்த இளங்கோ மற்றும் அவரது உறவினர்கள் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது ஜெயரஞ்சினி தூக்கில் பிணமாக தொங்கி கொண்டிருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
இதுபற்றி தகவல் அறிந்ததும் திருநாவலூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து ஜெயரஞ்சினியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜெயரஞ்சினி தகராறு காரணமாக தற்கொலை செய்து கொண்டாரா? கொலை செய்து துக்கில் தொங்கவிட்டார்களா அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்பது குறித்து திருநாவலூர் போலீசார் தொடர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.