சென்னை செனாய் நகர் பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ் (94) இவர் ரயில்வே துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றுள்ளார். இவருக்கு பூஷணம் 84) என்கிற மனைவியும், இரண்டு ஆண் மற்றும் மூன்று பெண் என மொத்தம் ஐந்து பிள்ளைகள் உள்ளனர். இவர்கள் அனைவரும் திருமணமாகி தனியாக வசித்து வருகின்றனர். தம்பதியினருக்கு சொந்தமாக செங்கல்பட்டு மாவட்டம் கோவிலஞ்சேரி பகுதியில் 40 கோடி மதிப்புள்ள 4.54 ஏக்கர் நிலம் உள்ளது.
இந்நிலையில் செல்வராஜின் மகன்களான அருண்குமார் மற்றும் அமுதகணேசன் ஆகிய இருமகன்களும், கடந்த 2007ஆம் ஆண்டு கோவிலாஞ்சேரி பகுதியில் பெட்ரோல் பங்க் அமைப்பதாக கூறியுள்ளனர். இதனால் மாதம் 5 லட்சம் வருமானம் வரும் எனவும், இதனை தனது சகோதரிகளுக்கும் பகிர்ந்து அளிப்பதாக ஆசை வார்த்தை கூறி தனது தாய் பூஷணம் பெயரில் இருந்த குடும்ப சொத்துக்களை அவர்களது பெயருக்கு மாற்றி உள்ளனர்.
இந்நிலையில் சில மாதங்களுக்கு முன்பு 40 கோடி மதிப்பிலான சொத்துக்களை, தனியார் நிறுவனத்திற்கு 28 கோடிக்கு விற்பனையும் செய்துள்ளனர். இந்நிலையில் இந்த இடத்தை வாங்கிய தனியார் நிறுவனத்தினர். அந்த இடத்தில் கட்டிடம் கட்டுவதற்கான பணிகளில் ஈடுபட்டுள்ளனர். இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த செல்வராஜ் மற்றும் அவரது மனைவி பூஷணமும் சேர்ந்து, தங்களது மகன்களான அமுதகணேசன் மற்றும் அருண் குமார் ஆகியோரிடம் கேட்டுள்ளனர்.
இதுகுறித்து மகன்கள் முன்னுக்குப்பின் முரணாக பேசியதை தொடர்ந்து, அந்த இடத்தின் பட்டாவை சரி பார்த்துள்ளனர். அதில் செல்வராஜ் மகன்கள் இருவரும் சேர்ந்து இந்த இடத்தை தாயின் பெயரில், இருந்ததை தங்களது பெயருக்கு மாற்றி தனியார் நிறுவனத்திற்கு 28 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்தது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து கடந்த மாதம் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் தாய் பூஷணம் கண்ணீர் மல்க புகார் மனு அளித்திருந்தார்.
அப்புகாரின் மீதான விசாரணையை செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ராகுல் நாத் மேற்கொண்டார். அதில் மூதாட்டி பூஷணம், சொத்தை அபகரித்துக் கொண்ட மகன்கள் இருவரிடம் விசாரணை நடைபெற்றது. இது குறித்து மாவட்ட ஆட்சியர் ராகுல் நாத்திடம் கேட்ட போது, இந்த புகாரின் உரிய விசாரணை தற்போது நடைபெற்று வருவதாக தெரிவித்தார்.
மேலும் சுவாரஸ்ய செய்திகளுக்கு...
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் ABP நாடு செய்திகளை உடனுக்குடன் பெற https://bit.ly/2TMX27X