சென்னை மண்ணடி தம்புச்செட்டி தெருவில் கொரோனா பரிசோதனை மையம் நடத்தி வருகிறார் 30 வயதான ஹரிஷ்பர்வேஸ். ரூ.500 கொடுத்தால் அரை மணி நேரத்தில் கொரோனா ‛நெகட்டிவ்’ சான்றிதழ் வழங்கப்படும் என்கிற விளம்பரம் காட்டுத்தீயாய் வாட்ஸ்ஆப்பில் பரவியது. இதைக்கண்ட ஹரிஷ், அதிலிருந்த எண்ணுக்கு தொடர்பு கொண்டு தனக்கு கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் வேண்டும் என கேட்டுள்ளார். ‛கொடுத்திடலாம் சார்... 500 அனுப்புங்க... சார்பிகேட் வாங்குங்க...’ என ரொம்ப கேஷூவலாக அவர்கள் கூறியுள்ளனர்.

Continues below advertisement


அவர்கள் கூறிய ஆன்லைன் முறையில் ரூ.500யை அவர்களுக்கு அனுப்பினார் ஹரிஷ்பர்வேஸ். அடுத்த அரை மணி நேரத்தில் எந்த சோதனையும் செய்யாமல், போலியான கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் வாட்ஸ்ஆப் மூலம் ஹரிஷ்பர்வேஸிற்கு வந்து சேர்ந்தது. அதை கண்ட அவருக்கு அதிர்ச்சியோ அதிர்ச்சி. அப்படியே அச்சு அடித்தார் போல அசலைப் போலவே, நகலும் கடுமையாக இருந்தது. இதைக் கண்டு கொதித்துப் போன அவர், உடனே வடக்கு கடற்கரை போலீசாரிடம் புகார் அளித்தனர். வழக்கு பதிவு செய்த இன்ஸ்பெக்டர் ஜெகநாதன் தலைமையிலான போலீசார், மொபைல் போன் எண்ணை வைத்து, சம்மந்தப்பட்ட நபர் இருக்கும் இடத்தை ட்ராக் செய்தனர். 




அதன் அடிப்படையில் சென்னை திருவல்லிக்கேணியில் சர்பிகேட் சர்வீஸ் செய்து கொண்டிருந்த 29 வயதான இன்பர்கான் என்பவரை கை செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில், வெளிநாட்டிலிருந்த தங்கம் உள்ளிட்ட பொருட்களை கடத்தி வரும் குருவியாக அவர் செயல்பட்டதும், வெளிநாடு செல்லும் பயணிகளுக்கு கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் கட்டாயம் என்பதால், அதற்கான போலி சான்றிதழை தயாரித்து அதில் நல்ல வருவாய் பார்த்து வந்ததும் தெரியவந்தது. ஒரு கட்டத்தில் நல்ல வருவாய் வந்ததால், நண்பருடன் சேர்ந்து போலி சான்றிதழ் தயாரிப்பதை முழுநேர தொழிலாக மாற்றியதும் தெரியவந்தது. 


தனியார் கொரோனா மையத்தின் பெயரை பயன்படுத்தி போலியாக நெகட்டிவ் சான்றிதழ் தயாரித்து, இதுவரை 500க்கும் மேற்பட்டோருக்கு வினியோகம் செய்தது தெரியவந்துள்ளது. குறிப்பாக வெளிநாடு செல்லும் குருவிகள் பலரும் இவரது போலி கொரோனா நெகட்டிவ் சான்றிதழை பயன்படுத்தியது விசாரணையில் தெரியவந்துள்ளது. இதைத் தொடர்ந்து அவரை ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீசார், பின்னர் சிறையில் அடைத்தனர். தலைமறைவாக உள்ள அவரது நண்பரை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


 


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


 


பேஸ்புக் பக்கத்தில் தொடர


 


ட்விட்டர் பக்கத்தில் தொடர


 


யூடிபில் வீடியோக்களை காண