Perambur Theft :  சென்னை பெரம்பூர் நகைக்கடையில்  9 கிலோ நகைகளை கொள்ளையைடிக்கப்பட்ட சம்பவத்தில் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


சென்னையில் நகைக்கடையில் ஷெட்டரை வெல்டிங் வைத்து உடைத்து 9 கிலோ தங்க நகைகள் 20 லட்சம் மதிப்பிலான வைர நகைகள் கொள்ளை அடிக்கப்பட்ட விவகாரத்தில் தனிப்படை அமைக்கபட்டு விசாரணை தீவிரமாக நடந்து வருகிறது.


9 கிலோ கொள்ளை:


சென்னை பெரம்பூரை அடுத்த பெரவலூர் பகுதியில் பேப்பர் மில்ஸ் சாலையில் உள்ளது ஜே.எல்.தங்க நகைக்கடை ஆகும். இங்கு  நேற்று முன்தினம் இரவு மர்ம நபர்கள் கடையின் ஷெட்டரை வெல்டிங்க் வைத்து உடைத்து கடையில் உள்ள 9 கிலோ தங்க நகைகள் 20 லட்சம் ரூபாய் மதிப்பிலான வைர நகைகள் கொள்ளை அடிக்கபட்டுள்ளது.


கடையின் உரிமையாளர் ஜெயச்சந்திரன் சம்பவத்தன்று காலை வழக்கம் போல் கடையை திறக்க வந்த போது நகைக்கடையின் இரும்பு ஷெட்டர் கதவு உடைக்கப்பட்டு நகைகள் கொள்ளை அடிக்கபப்டடது கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். கடையின் உரிமையாளரான ஜெயச்சந்திரன் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு நகைகள் கொள்ளை அடிக்கப்பட்டது குறித்து தெரிவித்துள்ளார்.


சிசிடிவி காட்சி


இதனையடுத்து, போலீசார் அங்கு வந்து விசாரணை செய்தனர். பெரவலூர் பகுதியில் நான்கு வழி சாலை இருக்கின்றது. அந்தப் பகுதியில் பிரபலமாக இருக்கக்கூடிய நகைக்கடையில் மர்ம நபர்கள் கடையின் ஷெட்டரை வெல்டிங் மூலமாக தகர்த்து ஒரு நபர் உள்ளே செல்லக்கூடிய அளவிற்கு வழி செய்து உள்ளே சென்று கொள்ளையடிக்கப்படுள்ளது. கடையில் கொள்ளை அடித்த நபர்கள் அங்கு வைக்கப்பட்டுள்ள சி.சி.டி.வி பதிவாக கூடிய டி.வீ.ஆரையுல் எடுத்துச் சென்றுள்ளனர். கொள்ளை அடிக்கப்பட்ட நகைக்கடையில் தடயவியல் துறை நிபுணர்கள் தடயங்களை சேகரித்து விசாரணை நடந்து வருகிறது.


நகைக்கடை வெளியே உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை தனிப்படை போலீசார் ஆய்வு செய்தார். இதில் கொள்ளை கும்பல் காரில் வந்து கைவரிசை காட்டிவிட்டு அதே காரில் தப்பி செல்லும் காட்சிகள் பதிவாகி இருந்தது.  கொள்ளை சம்பவம் நள்ளிரவு நேரத்தில் நடந்ததால் வீடியோ பதிவுகள் தெளிவாக இல்லை.  ஆனால் கொள்ளையர்கள் வந்த காரின் பதிவு எண் மூலம் அவர்களை அடையாளம் காணும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.  ஆனால் அந்த எண் போலியானது என்பது விசாரணையில் தெரியவந்தது.


ஆந்திரா விரைந்தது தனிப்படை


கொள்ளையர்கள் தப்பிய கார் சென்ற வழிகளில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். இந்த நிலையில், இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது ஆந்திர மாநில கொள்ளையர்களாக இருக்கலாம் என்ற  சந்தேகம் போலீசாருக்கு எழுந்துள்ளது.


இதனை அடுத்து, ஆந்திரா மாநிலத்திற்கு தனிப்படை போலீசார் விரைந்துள்ளனர். நகைகளை கொள்ளையடித்து, சென்னை விட்டு இரண்டு மணி நேரத்தில் கொள்ளையர்கள் வெளியேறிய நிலையில், தனிப்படை போலீசார் ஆந்திராவிற்கு விரைந்துள்ளனர்.