இந்தியா - பாகிஸ்தான் மோதல்:


மகளிர் டி-20 உலகக்கோப்பை தொடர் தென்னாப்ரிக்காவில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் தனது முதல் லீக் போட்டியில் இந்திய அணி, பாகிஸ்தான் அணியை எதிர்கொள்கிறது. கேப்டவுனில் உள்ள நியூலேண்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில், இந்திய நேரப்படி இன்று மாலை 6.30 மணிக்கு போட்டி தொடங்குகிறது. இந்த போட்டியின் நேரலை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க் மற்றும் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் செயலி மற்றும் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் இணையதளத்திலும் ஒளிப்பரப்பாகவுள்ளது.


இந்திய அணி: 


அண்மையில் நடைபெற்ற 19 வயதுக்கு உட்பட்டோருக்கான மகளிர் டி-20 உலகக்கோப்பையை கைப்பற்றிய உத்வேகத்தில், இன்றைய போட்டியில் இந்திய அணி களமிறங்க உள்ளது. இதனால், தொடக்கம் முதலே ஆட்டத்தில் ஆதிக்கம் செலுத்தும் முனைப்பில் இந்திய அணி களமிறங்கும் என எதிர்பார்க்கலாம். ஹர்லின் தியோல், ரோட்ரிக்ஸ், ஷபாலி வர்மா மற்றும் கேப்டன் ஹர்மன் பிரீத் கவுர் ஆகியோர் இந்திய அணியின் நம்பிக்கை நட்சத்திரங்களாக உள்ளனர். ரேணுகா சிங் பந்துவீச்சில் அசத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது. 


மகளிர் T20I தரவரிசையில் உலகின் 4வது இடத்தில் உள்ள இந்திய மகளிர் அணி வங்கதேசத்திற்கு எதிரான கடைசி பயிற்சி ஆட்டத்தில் 52 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.  அதேநேரம், இந்திய மகளிர் அணியின் துவக்க வீராங்கனை ஸ்மிருதி மந்தனா, விரலில் ஏற்பட்ட காயம் காரணமாக 2023ஆம் ஆண்டுக்கான  ஐசிசி மகளிர் டி20 உலகக் கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிரான தொடக்க ஆட்டத்தில் பங்கேற்க மாட்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது இந்திய அணிக்கு பின்னடைவாக கருதப்படுகிறது.


பாகிஸ்தான் அணி:


பாகிஸ்தான் அணி தனது இரண்டாவது பயிற்சி ஆட்டத்தில் தென்னாப்பிரிக்காவிடம் 6 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. அந்த அணியை பொறுத்தவரையில் அலியா ரியாஸின் ஆட்டம் மட்டும் தான் அந்த பயிற்சி ஆட்டத்தில் ஆறுதல் அளிக்கும் வகையில் இருந்தது.  இன்றை இந்திய அணிக்கு எதிரான  லீக் போட்டியிலும், பாகிஸ்தானுக்கு ஆலியாவின் ஆட்டம் முக்கியமானதாக இருக்கும். 


உத்தேச இந்திய அணி (IND-W):
யாஸ்திகா பாட்டியா, ஷபாலி வர்மா, ஜெமிமா ரோட்ரிக்ஸ், ஹர்லீன் தியோல், ஹர்மன்ப்ரீத் கவுர், பூஜா வஸ்த்ரகர், தீப்தி ஷர்மா, ரிச்சா கோஷ், ரேணுகா தாக்கூர், ராதா யாதவ், ஷிகா பாண்டே


உத்தேச பாகிஸ்தான் அணி (PAK-W):
முனீபா அலி, சித்ரா அமீன், பிஸ்மா மரூஃப், நிதா தார், ஆயிஷா நசீம், அலியா ரியாஸ், ஒமைமா சொஹைல், கைனத் இம்தியாஸ், பாத்திமா சனா, துபா ஹாசன், நஷ்ரா சந்து


பிட்ச் அறிக்கை:
தென்னாப்பிரிக்கா பெண்கள் மற்றும் இலங்கை மகளிர் அணிகளுக்கு இடையிலான T20 உலகக் கோப்பையின் முதல் போட்டியில் சுழற்பந்து வீச்சாளர்களுக்கு உதவியாக இந்த ஆடுகளம் மாறியது. சுழற்பந்து வீச்சுக்கு வரும்போது இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய இரு அணிகளுமே சம பலத்தில் உள்ளன, மேலும் இந்த ஆடுகளத்தில் முதலில் பேட் செய்யும் அணி அதிக ஸ்கோரை எட்டுவது சாத்தியமில்லை எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.