பெரம்பலூர், வ.உ.சி. தெருவை சேர்ந்தவர் ரஞ்சித்குமார் (வயது 43). பி.காம் படித்துள்ள இவர் ஏற்கனவே துபாயில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்துள்ளார். இந்த நிலையில் அந்த வேலை பிடிக்காததால் மீண்டும் சொந்த ஊருக்கு திரும்பி வந்து கார் ஓட்டி வருகிறார். மேலும் அவர் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் வெளிநாட்டில் வேலை வாய்ப்பு வேண்டி இணையதளம் மூலம் விண்ணப்பித்துள்ளார். அப்போது துபாயில் வேலை வாங்கித்தருவதாக சிலர் ஆசை வார்த்தை கூறி ஆன்லைன் மூலம் ரஞ்சித்குமாரிடம் வங்கி கணக்குகளை கொடுத்து ரூ.6 லட்சத்து 23 ஆயிரத்து 952 பெற்றுள்ளனர். ஆனால் அவர்கள் ரஞ்சித்குமாருக்கு துபாயில் வேலை வாங்கி தராமலும், கொடுத்த பணத்தை திருப்பி தராமலும் ஏமாற்றி வந்துள்ளனர். இதையடுத்து தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த ரஞ்சித்குமார் பெரம்பலூர் மாவட்ட சைபர் கிரைம் போலீஸ் நிலையத்தில் கடந்த டிசம்பர் மாதம் 17-ந்தேதி புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் திருச்சி மத்திய மண்டல போலீஸ் ஐ.ஜி. கார்த்திகேயன் உத்தரவின்படி, திருச்சி சரக போலீஸ் டி.ஐ.ஜி. சரவணசுந்தர் மேற்பார்வையில், பெரம்பலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஷ்யாம்ளா தேவி தலைமையில், பெரம்பலூர் மாவட்ட சைபர் கிரைம் பிரிவு (பொறுப்பு) கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு மற்றும் அவரது குழுவினர் குற்றவாளிகள் குறித்து விசாரணை நடத்தி வந்தனர். 




 

இதனை தொடர்ந்து விசாரணையில், குற்றவாளிகள் டெல்லியில் முகாமிட்டு இருப்பதாக தெரியவந்தது. இதையடுத்து குற்றவாளிகளை தேடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஷ்யாம்ளா தேவி உத்தரவின்பேரில், சைபர் கிரைம் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) அழகம்மாள், சப்-இன்ஸ்பெக்டர் மனோஜ், போலீசார் சதீஷ்குமார், திலிப்குமார், வேல்முருகன் ஆகியோர் கொண்ட தனிப்படை போலீசார் கடந்த 23-ந்தேதி டெல்லி புறப்பட்டனர். இந்தநிலையில், குற்றவாளிகள் உத்தரபிரதேச மாநிலம், காசியாபாத் மாவட்டத்தில் தலைமறைவாகி இருப்பதாக தகவல் அறிந்த சைபர் கிரைம் தனிப்படை போலீசார் கடந்த 29-ந்தேதி அங்கு விரைந்தனர். அப்போது கோடா என்ற பகுதியில் தலைமறைவாக இருந்த பீகார் மாநிலம் மதுபானி மாவட்டத்தை சேர்ந்த பைய்க்குந்த மிஷ்ராவின் மகன் விகாஸ் குமார் மிஷ்ரா (32), காமோத் ஜாவின் மகன் கவுதம் குமார் ஜா (22) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். இதில் விகாஸ் குமார் மிஷ்ரா சி.ஏ. பட்டதாரி ஆவார்.

 



 

மேலும் இவர்களிடம் இருந்து ரூ.2 லட்சத்து 10 ஆயிரம் மற்றும் கணினியின் சி.பி.யு. ஒன்று, 5 செல்போன்கள், 5 சிம் கார்டுகள், 14 ஏ.டி.எம். கார்டுகள் மற்றும் 5 வங்கி காசோலைகள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். பின்னர் அவர்களை போலீசாா் கடந்த 30-ந்தேதி காசியாபாத் கோர்ட்டில் ஆஜர்படுத்தி நேற்று பெரம்பலூர் அழைத்து வந்தனர். பின்னர் விகாஸ் குமார் மிஷ்ரா, கவுதம் குமார் ஜா ஆகியோரை நீதிபதி முன்பு ஆஜர்படுத்தி திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர். அதில் கவுதம் குமார் ஜா, விகாஸ் குமார் மிஷ்ராவின் மனைவியின் தம்பி ஆவார். மேற்படி வழக்கில் சிறப்பாக செயல்பட்ட பெரம்பலூர் மாவட்ட சைபர் கிரைம் போலீசாரை போலீஸ் சூப்பிரண்டு ஷ்யாம்ளா தேவி வெகுவாக பாராட்டி வாழ்த்துக்களை தெரிவித்தார். மேலும், இந்த வழக்கில் தொடர்புடைய 2 முக்கிய குற்றவாளிகளை சைபர் கிரைம் தனிப்படை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.