பெரம்பலூர் மாவட்டம் அருகே உள்ள தனியார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையின் டாக்டர் ஒருவரை கடந்த மாதம் 23ஆம் தேதி மாலை தொலைபேசி மூலம் ஒருவர் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது அவர் தன்னை திருவாரூர் மாவட்டம்  மன்னார்குடி தெற்கு செங்குந்தர் தெருவை சேர்ந்த பன்னீர்செல்வம் (70) என்றும், அரசு நடுநிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்றுவிட்டேன்.  தற்போது தமிழக நீர்ப்பாசனத்துறை அமைச்சர் துரைமுருகனுக்கு தலைமை செயலகத்தில் உதவியாளராக இருப்பதாக  அறிமுகப்படுத்திக் கொண்டார். மேலும்  தனது தங்கை மகாலெட்சுமியின் கணவரான மன்னார்குடி தாலுகா கூப்பாச்சிக்கோட்டையை சேர்ந்த கட்டபொம்மன் (65) என்பவர் சிகிச்சைக்காக உங்கள் மருத்துவமனைக்கு வருவார். அவருக்கு உடனடியாக சிகிச்சையளித்து டிஸ்சார்ஜ் செய்ய ஏற்பாடு செய்யுங்கள் என்றார். இதை தொடர்ந்து அமைச்சரின் உதவியாளர் என்று கூறிய பன்னீர்செல்வம் கடந்த 30ஆம் தேதி மாலை அந்த மருத்துவமனைக்கு கட்டபொம்மனை அழைத்து வந்தார். அப்போது பன்னீர்செல்வம் அமைச்சரின் உதவியாளர் என்பதற்கான அடையாள அட்டையை மருத்துவமனை நிர்வாகத்தினரிடம் காண்பித்து  கட்டபொம்மனுக்கு இருதய சிகிச்சை செய்ய கேட்டுக்கொண்டார். அதன்பேரில் மருத்துவமனை நிர்வாகமும் கட்டபொம்மனுக்கு முதலுதவி சிகிச்சை அளித்தனர்.



பின்னர் பன்னீர்செல்வம் கட்டபொம்மனை மேல் சிகிச்சைக்காக திருச்சியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு அழைத்து செல்வதாக கூறியுள்ளார். அப்போது மருத்துவமனை நிர்வாகம் கட்டபொம்மனுக்கு முதலுதவி கிசிச்சை  அளித்ததற்கு ரூ.1,380-ஐ கட்டுமாறு பன்னீர்செல்வத்திடம் கூறினர். ஆனால் பன்னீர்செல்வம் அந்த பணத்தை கட்டாமல்  கட்டபொம்மனை அழைத்துக் கொண்டு மருத்துவமனையை விட்டு வெளியே சென்று விட்டார். இந்நிலையில் பன்னீர்செல்வம் காண்பித்த அமைச்சர் துரைமுருகனின் தலைமை செயலக உதவியாளர் என்பதற்கான அடையாள அட்டையின் நகலை உள்ளூர் தி.மு.க. நிர்வாகிகளிடமும், சென்னை தலைமை செயலகத்திலும் காண்பித்து மருத்துவமனை நிர்வாகத்தினர் விசாரித்தனர். இதில்  பன்னீர்செல்வம் சென்னை தலைமை செயலகத்தில் அமைச்சர் துரைமுருகனுக்கு உதவியாளராக பணிபுரியவில்லை என்பதும், போலியான அடையாள அட்டையை தயார் செய்து, அதனை காண்பித்து ஏமாற்றி தங்கையின் கணவருக்கு சிகிச்சை செய்து கொண்டு பணம் செலுத்தாமல் சென்றதும் மருத்துவமனை நிர்வாகத்தினருக்கு தெரியவந்தது.

 



 

இதையடுத்து தனியார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையின் மேலாளர் யுவராஜா (36) இது தொடர்பாக நடவடிக்கை எடுக்கக்கோரி நேற்று முன்தினம் பெரம்பலூர் காவல்நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் அமைச்சரின் உதவியாளர் என்று கூறி ஆள்மாறாட்டம் செய்தல், ஏமாற்றுதல், போலி அடையாள அட்டை வைத்திருத்தல் போன்றவை தொடர்பாக இந்திய தண்டனை சட்டப்பிரிவு 416, 419, 420, 464, 467, 468, 474 ஆகிய 7 பிாிவுகளில் இன்ஸ்பெக்டர் முருகேசன் வழக்குப்பதிவு செய்து பன்னீர்செல்வத்தை வலைவீசி தேடி வந்தார். இந்த நிலையில் மன்னார்குடியில் தலைமறைவாக இருந்த பன்னீர்செல்வத்தை நேற்று பெரம்பலூர் காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் பெரம்பலூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.